கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 10

குறுநறுங்கண்ணி, குண்டுமணி, குன்றிப்பூ ,குன்றி உள்ளிட்ட பெயர்களால் அறியப்படும் கொடி. இதனைக் குன்றிப்பூ என நச்சினார்க்கினியர் உரைகூறுவார். கருஞ்சிவப்பு நிறத்தில் கருமைநிறத்தில் ஒரு மறுவைக்கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இச்சொல் குன்றிமணி என்பதன் திரிபாகும்.

      சிலபகுதிகளில் இம்மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மரபுவழி நகைத்தொழில்செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணியைப் பயன்படுத்துவதுண்டு. சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.

      இது தமிழ்நாட்டில் எங்கும் மலரக்கூடியது. இது செடி, புதர், மரம் இவைகளைப் பற்றிப் படரக்கூடிய கொடிவகையைச் சேர்ந்தது. இது அவரைக்காய் போன்று காய்விட்டு, முற்றி, வெடித்து, விதைகள் சிதறிவிடும்; விதைமூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

  1. குருகிலை
குருகிலைப்பூ

குருகிலைப் பூ மார்ச்சு மாதத்திலிருந்து செப்டம்பர்வரை பூக்கும். சில இடங்களில் பிப்ரவரியிலேயே பூப்பதும் உண்டு. இது வசந்தகாலத்தில் பூப்பதாலும், மல்லிகைபோன்று வெள்ளையாய் இதழ்களின் உட்புறம் காட்டுவதாலும், வசந்தகால மல்லிகை என்று சொல்கின்றனர். மொட்டாய் இருக்கும்போது முத்துப்போல் அமைவதால் அதிமுத்தம், அதிமுத்தகம் எனப்படும்.

சங்கப் பாடலில் குருகிலைப் பூ

எந்த ஒரு அதிர்ச்சியையும், குருகு இலையும், பூவும் தாங்காதாம். ‘குருகு இலை உதிர, குயிலினம் கூவ’ என்று பரிபாடல் (15:41) கூறும்.  அதாவது குயிலினம் கூவினாலே, குருகு இலை உதிருமாம்.

  1. மருதம்
பூமருதுப் பூக்கள்

சங்கப் பாடல்களில் கூறப்பட்ட மருதமரம் தற்போது மிக அரிதாகச் சிலரால் ‘பூமருது’ என்று வழங்கப்படும் மரமேயாகும். இது பலருக்குத் தெரியாது. தற்காலம் வழங்கும் மருதுகளில் சிறந்த பூவையுடைய மருதைப் ‘பூமருது’ என்றழைக்கலாயினர். பிற மருதங்களை கருமருது, வெள்ளை மருது என்றும், அதன் அடிமரங்களின் நிறங்களையொட்டி அழைத்தனர். ஆனால் சங்ககால மருதம் பூவில் சிறந்தது.  பூமருதே உண்மையான மருதம். சங்ககால மருதம் என்பது சங்கநூல்களில் வரும் பலகுறிப்புகளைச் செடிநூல் அறிவோடு ஆராயுங்கால் நன்கு விளங்குகிறது. பூமருதின் பூக்கள் சிறந்தவை. ஊதாநிறம் சிறிது கலந்து இளஞ்சிவப்பான பெரிய இதழ்கள் மருதம்பூவிற்கு உண்டு. இதன் பூ தொலைவிலேயே தெளிவாகத் தெரியும். கண்ணை ஈர்க்கும் மிக அழகு வாய்ந்த பூக்கள். ஆறு சிவந்த இதழ்கள் ஏந்திய தட்டுக்கள்போலத் தோன்றும்.

மருதமரம் செடிநூலில் Lagerstroemia Flos – Regina என்று அழைக்கப்படுகிறது. இதன் பெயராலேயே இதனுடைய பெருமையையும் அருமையையும் செடிநூலார் குறிப்பிட்டது விளங்குகிறது. அரசிக்கு உகந்த பூ என்ற பொருளில் Flos — Regina என்றும், ஆங்கிலத்தில் ‘The Queen’s Flower’ என்றும் வழங்குகிறது. மற்றும் இதை ஆங்கிலத்தில் இந்தியாவின் பெருமை என்ற பொருளில் ‘Pride of India’ என்றும் கூறுவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் நாகரிகத்திற்குப் பெருமை தேடித்தந்த பெயர்போன பூவைத் தற்போது ‘இந்தியாவின் பெருமை’ என்றழைப்பது வியப்பே. சிங்களத்திலும் இதை ‘மருது’ என்றே அழைக்கின்றனர். இப்பெயர் தமிழிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. மலையாளத்தில் அடம்பு, கடல்பூ என்றழைக்கின்றனர். தமிழிலக்கியத்தில் வரும் அடம்பு வேறு. மணிமருது என்றும் மலையாளத்தில் வழங்கும்.

மருதம் என்பது மருதநிலத்தின் தலைமைத் தாவரமாகும். மருதமரம் வெண்மையான அடிமரத்தையும், அழகான ஊதாநிறம் கலந்த இளஞ்சிவப்புப் பூக்களையும், புறவிதழ் நீலம் கலந்த பசுமை நிறத்தையும் கொண்டிருக்கின்றன. இதனை, ‘முடக்காஞ்சிச் செம்மருதின்’ என்று பொருநராற்றுப்படையும் (வரி 189) ,‘செவ்வி மருதின் செம்மலோடு தாஅய்’ என்று குறுந்தொகையும் (50:2) குறிக்கின்றன. செம்மருது என்று சங்க இலக்கியம் குறிப்பிடுவதும் இத் தாவரத்தைத்தான். பூமருது மருதநிலத்தில் சங்ககாலத்தில் மிகப் பரவலாகக் காணப்பட்டு, தற்பொழுது மிகவும் அரிதாகக் காணப்படும் மரமாக மாறிவிட்டது என்று கொள்ளவேண்டும் என்கிறார் கு. வி. கிருஷ்ணமூர்த்தி (தமிழரும் தாவரமும், பக். 94-95).

இந்தியாவில் உள்ள பெரிய மரவகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் ‘மருதம்’ என்று கூறுவர். சுமார் 80 முதல் 90 அடி உயரம்வரை வளர்ந்து நிழல்பரப்பும் இந்த மருதமரம். மருதம் இணராகப் பூக்கும் தன்மையுடையது. பூவின் நிறம் மஞ்சள்நிறமாக இருக்கும். பூக்கள் மரத்திலிருந்து மிக எளிதில் உதிர்ந்துவிழும் தன்மை உடையவை. பறவைகள் பறக்கும் வேகத்திலேயே அவை உதிர்ந்து விடுகின்றன என்பதை,

“பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”

என்ற நற்றிணை வரிகள் (350:2-3) உணர்த்துகின்றன. மருதின் புற இதழ்கள் கருமை நிறத்துடன் காணப்படுவதை, ‘கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்இணர்’ என்று திருமுருகாற்றுப்படை (வரிகள் 27-28) கூறுகிறது. மருத மலரில் சிவப்பு நிற மலரும் உண்டு என்பதைச் ‘செவ்வி மருது’ என்ற குறுந்தொகைத் தொடரால் அறியலாம்.

ஆற்றங்கரையோரத்தில் மருதமரம்

மருதம் ஆற்றின் இருகரைகளுக்கும் அழகுசேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா, இலங்கை மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் மருதமரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. சங்கநூல்களில் பலவிடங்களில் மருதமரம் நீர்நிலைக்கு அருகாமையிலும், ஆற்றோரங்களிலும் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. சங்ககாலத்தில் மருதமரம் காவிரிக்கரையிலும், வைகைக்கரையிலும் நிறைய இருந்து, துறைகளை அணி செய்தததை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

            அறல்அவிர் வார்மணல் அகல்யாற்றுஅடைகரை,

            துறையணி மருதமொடு இகல்கொள ஓங்கி”

“தாழ்சினை மருதம்  தகைபெறக் கவினிய

             நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்பு அழித்து”

மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை

(அகநானூறு, 97:18-19, 366:1-2 மற்றும் 376:3)

உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து

நீர்நணிப் படிகோடு ஏறிசீர் மிக”(புறநானூறு, 243:6-7)

முடம்முதிர் மருதத்துப் பெருந்துறை

மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம்பெருந்துறை(ஐங்குறுநூறு, 31:3, 33:2)

மருது இமிழ்ந்துஓங்கிய நளியிரும் பரப்பின்

மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு”

(பதிற்றுப்பத்து, 23:18-19)

சங்ககாலத்திலும், பின்னால் தேவாரகாலத்திலும் மருதமரங்கள் நீர்த்துறைகளில் சூழலாகக் காணப்பட்டன என்று நன்கு தெரியவருகிறது. ஆற்றங்கரையோரம் வயலும் தோட்டமும் தோன்றியதனால் மருதத் திணையாயிற்று. ஆற்றங்கரையோரத்தில் தோன்றிய பண்பாட்டை, நாகரிகத்தை, ஆற்றங்கரையருகே, ஆற்றின் துறையருகே காணப்பட்ட அழகிய பூவுடைய  மரத்தின் அல்லது பூவின் பெயரால் அழைத்தது, பழந்தமிழரின் திண்ணிய அறிவையும், அழகுணர்ச்சியையும் தெள்ளிதாகக் காட்டுகிறது. இந்த மருதமரத்தையே சாலையோரங்களிலும், நீர்நிலையருகிலும், சோலைகளிலும் வளர்த்து நகருக்கு அழகூட்டலாம் என்ற கருத்தை 2000 ஆண்டுகளுக்குப்பின் தற்காலத்து நகர அமைப்பாளர்களும் கூறுகிறார்கள். இதிலிருந்து நகரத்திற்கு அழகூட்டத்தக்கதாகத் தற்காலத்தில் கருதப்படும் மரத்தின் பெயரால்  நாகரிகத்திணைக்குப் பெயரிட்டதன் பொருத்தம் நன்கு விளங்கும். மருதம் காவிரிக்கரையிலும் வையைக்கரையிலும் காணப்பட்டதை, நெடுவெண் மருதொடு வஞ்சி சாஅய, விடியல் வந்த பெருநீர்க் காவிரி” (அகநானூறு, 226:9-10), வருபுனல் வையைமருதோங்கு முன்றுறை (சிலப்பதிகாரம், 14. ஊர்க்காண் காதை, வரி 73) என்ற பாடல் வரிகள் தெளிவாக்குகின்றன. வையை ஆற்றுநீர் கொண்டுவந்து சேர்த்த நீண்ட மணல்பரப்பு அமைந்த கரையில் நீண்டு வளர்ந்திருந்தது அழகிய மருதமரம். அம்மரம் உள்ளிட்ட பல பூக்களைப் பூக்கும் சோலை அங்கிருந்ததை அகப்பாடல் (36:9:10) குறிப்பிடுகிறது.

வருபுனல் வையை வார்மணல் அகன்துறை

திருமருது ஓங்கிய விரிமலர்க் கா”

சங்ககாலத்தில் துறைதோறும் மருதமரங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டுகட்குப் பின்பு அவை இருந்த இடங்களும் தெரியாமல் போய்விட்டன.

வெண்சிறு கடுகினைப் போன்ற சிறிய பூக்களை உடைய ஞாழல் மரத்தின் பூ, அழகிய மருதமரத்தின் வாடிய பூக்களுடன் பரவி இருந்ததை,

            ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்

            செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்

என்று குறுந்தொகை (குறுந்தொகை, 50:1-2) பாடுகிறது. குளிர்ந்த சண்பகப்பூக்களைச் செருகி, கருமையான புற இதழையும், வெள்ளிய அக இதழையும் உடைய மருதமரத்தின் பூங்கொத்தினைச் சண்பகப்பூவின்மேல் வைத்து கட்டப்பெற்ற மாலை என்பதை,

            பெருந்தண் சண்பகம் செரீஇ, கருந்தகட்டு

            உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டி

என்ற இலக்கிய வரிகள் (திருமுருகாற்றுப்படை, வரிகள் 27-28) காட்டுகின்றன. உளை பொருந்திய பூக்களை மிகுதியாகக் கொண்ட மருதமரத்தில் குருகுகள் தம் இனம் சூழக் குழுமியிருக்கும் என்பதை, உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு இருக்கும் என்று ஐங்குறுநூறு (7:4) குறிப்பிடுகிறது.

      மருதமரத்தின் பூ சிவப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மருதத்தின்பூவை ‘உளைப்பூ’ என்று அழைத்தனர். இதன் பூவிதழ் ஓரத்தில் நெளிந்து காணப்படுவதால் ‘உளைப்பூ’ என்றனர். பூவிதழ் உதிர்ந்து தரையடியில் அழகாக இருக்கும் என்றும், மருதப் பூவின் புல்லிதழ் கருந்தகடுபோலக் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. புல்லிதழ்களும் பச்சையாக இருக்கும். சங்ககாலத்து மருதமரத்தைக் காண்பது அரிதாக உள்ளது. இப்போது கூறப்படும் பிள்ளை மருது, கரு மருது ஆகியவை சங்ககால மருதன்று. சங்ககால  மருதமரத்தை மணி மருது, பூ மருது என்று இக்காலத்தில் அரிதாக அழைக்கின்றனர். மருதமரதின் பூ அழகாக இருப்பதால், நாகரிகத் திணைக்கு ‘மருதம்’ என்று பெயரிட்டனர் (பி. எல், சாமி, ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு விழா மலர், ப. 188).

மருதமரம் மருத்துவ குணங்கள் நிறைந்த, மக்களின் ஆற்றங்கரை நாகரிகத்தோடு ஒன்றிவிட்ட அழகிய மரம் ஆகும். இது மூன்று முக்கிய திருத்தலங்களில் தலமரமாகவும், ஒரு தூயமரமாகவும் போற்றப்படுகிறது.

  1. கோங்கம்
பூக்கள் நிரம்பிய கோங்கமரம்

  விரி பூ கோங்கம் — இதழ்விரிந்த கோங்கம் பூ என்று குறிஞ்சிப்பாட்டு கூறும். கோங்குமரம் பளபளப்பான மஞ்சள்நிறப் பூக்களை உடையது. அதனால் பொன்போன்று கோங்கு பூத்ததாகச் சங்கநூல்கள் கூறும்.

            பொரி அரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ

            விரிஇணர் வேங்கையொடு, வேறுபட மிலைச்சி  (ஐங்குறுநூறு, 367:1-2)

புதுமலர்க் கோங்கம் பொன்எனத் தாது ஊழ்ப்ப  (கலித்தொகை, 33:12)

      நன்கு பூத்த பூ, சுரிதகம் என்றழைக்கப்படும் அணிகலன் போன்று இருந்ததாகக் கூறப்படுகிறது.

“கைவல் வினைவன் தையுபு சொரிந்த

சுரிதக உருவின ஆகிப் பெரிய

கோங்கம் குவிமுகை அவிழ”

கோங்கு பூக்கும்பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடும்.

“அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்       

செல்சுடர் நெடுங்கொடிபோல,

பல் பூங் கோங்கம் அணிந்த காடே”

புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப்பூ

வைகுறு மீனின்நினையத் தோன்றி”

(நற்றிணை, 86:5-7, 202:9-11 மற்றும் 48:3-4)

என்ற வரிகள் கோங்கு வரிசையாகப் பூப்பதைக் கார்த்திகை விளக்குபோலப் பூக்கும் என்றும், விடியற்காலையில் ஒளிவீசும் வீண்மீனைப்போலத் தோன்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் பூவைத் தலைகீழாகப் பார்க்கும்போது கோயில்குடைபோலத் தெரியும். அதனால் குடைப்பூ என்று அழைத்தனர். சங்கநூல்களில் கூறப்பட்ட அழகிய பூக்களில் கோங்கமும் ஒன்றாகும். ஆனால் இலையுதிர்க் காடுகளில்தாம் கோங்கத்தைக் காணமுடியும்.

காடுகளில் கோங்கம் மிகுதியாக வளர்ந்திருக்கும். இளவேனிற்பருவம் தொடங்கியவுடன் இது மிகுதியாகப் பூக்கத் தொடங்கும். இதன் முகை உருண்டிருக்கும். எனவே மகளிரின் நகிலுக்கு உவமையாகிறது.

      ‘வேனில் கோங்கு’ (புறநானூறு, 321:4) என்றும், ‘கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து’ (அகநானூறு, 240:11) என்றும் புலவர் பாடுகின்றனர். தேனும், தாதும் நிறைந்த இம்மலர் இணராக மலர்ந்திருக்கும். அவற்றில் வண்டுகள் மொய்ப்பதைத், தேம்பாய்ந்து ஆர்க்கும் தெரிஇணர்க் கோங்கு (மேலது, 153:16) என்றும், தாது சூழ் கோங்கின் பூ (மதுரைக்காஞ்சி, வரி 338) என்றும் வரும் இலக்கிய வரிகளால் அறியலாம். கோங்கமரத்தின் அழகிய கிளையின்கண் வண்டின் திரள் ஆரவாரிக்கும்படி முலையின் அழகு போன்ற மென்மையான அரும்புகள், இதழ்விரிந்து முதற் பூக்கள் தோன்றியதை,

இலைஇல் அம்சினை இனவண்டு ஆர்ப்ப,

முலைஏர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்”

என்று குறுந்தொகை (254:1-2) இயம்புகிறது.

      மலைத்தொடரின் உச்சியில் இருந்தது கோங்கமரம். அதன் பூக்களில் வண்டுகள் பொருந்தி ஆரவாரித்ததை,

மீனொடு பொலிந்த வானில் தோன்றித்

தேம்பாய்ந்து ஆர்க்கும் தெரிஇணர்க் கோங்கின்”

என்ற அகப்பாடல் (153:15-16) காட்டுகிறது. புல்லிய புற இதழ்களைக் கொண்டது கோங்கமரத்தின் பூ. அவை வைகறையில் தோன்றும் விண்மீன்களாய் விளங்கும். காட்டினைக் கொண்ட அம்மலை வழியில் அப்பூக்கள் அழகோடு விளங்குவதை,

புல்இதழ்க் கோங்கின் மெல்இதழ்க் குடைப்பூ

வைகுறு மீனின் நினையத் தோன்றி,

புறவு அணிகொண்ட பூநாறு கடத்திடை”

என்று நற்றிணை (48:3-5) நயம்படக் கூறுகிறது. இளவேனிலில் உறுதியான கோங்கமரம் உண்டாக்கிய அழகு மிகுந்த வளமான மொட்டு மலர்வதை,

திணிநிலைக் கோங்கம்பயந்த

அணிமிகு கொழுமுகை உடையும் பொழுதே”

என்று ஐங்குறுநூறு (343:2-3) காட்டுகிறது. மேலும், குளிர்ந்த மணம் வீசும் கோங்கமரம் மலர்ந்த மலை எல்லாம் பொன்மாலை அணிந்த யானை போல் தோன்றுவதை,

“தண்நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்

பொன்அணி யானைபோல் தோன்றுமே”

என்று கலித்தொகை (42:16-17) சுட்டுகிறது.

      வேனில்காலத்தில் பூக்கும் கோங்கின் பொகுட்டுப்போன்ற வளைந்த செவியை உடையது எலி என்பதை, வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன, குடந்தைஅம் செவிய கோட்டு எலி  என்ற புறப்பாடல் (321:4-5)  காட்டுகிறது.

      இளமஞ்சளில் மொட்டுகளும், பளீரிடும் மஞ்சளில் மலர்களும் அடர்பச்சையில் இலைகளும், அதைத் தாங்கும் மெல்லிய கிளைகளும், வெளிர்பச்சைநிறப் பிஞ்சுகளுமாய்க் கோங்கமரம் காட்சியளிக்கும்.  விதைகள் பஞ்சால் சுற்றப்பட்டதுபோல தோற்றம் கொண்டவை. காற்றில் பறக்க ஏதுவாக இருக்கும்.

      கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப் பொருள்கள்செய்யப் பயன்படுகிறது. இதனால் செய்யப்பட்ட பொருள்கள் இலேசாகவும், மழமழப்பாகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

source : tamizhtharakai.wordpress.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *