கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 22

  1. கொன்றை
கொன்றைப்பூ

கொன்றைப்பூக்கள் மிகமிக அழகானவை. சரம் சரமாக ஒள்ளிய மஞ்சள் நிறத்தில் மாலைகள் தொங்கினாற் போன்று பூத்துக் குலுங்கிக் கண்களைக் கவர்ந்தீர்க்கும். கொன்றைமரம் பூத்துக் குலுங்கும்போதும், மரமெல்லாம் கொழுந்துகளாக அரும்பியிருக்கும் காலத்திலும் பார்ப்பதற்கு மிகக் கவர்ச்சியாக இருக்கும்.

இக்காலத்தில் காணப்படும் கொன்றையில் இரண்டு மூன்று இனங்களில் மஞ்சள் பூவுடையதே சங்கப் பாடல்களில் கூறப்பட்ட கொன்றையாகும். பிற கொன்றைகள் வெளிநாட்டிலிருந்து கொணரப்பட்டு இங்கு வளர்வன. கொன்றை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. இதன் இலை, நெல்லியிலைபோல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர்வரிசையாகத் தோன்றும்.  ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுகள் விட்டு சிவப்பு நிறப் பூக்கள் மலரும். இந்தப் பூ ஆவாரம் பூவின் வடிவத்திலிருக்கும்; இடையிடையே இலேசான மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். இது விதை மூலம் இனப் பெருக்கம் ஆகின்றது.

இது முல்லை நில மரம். இதனைக் ‘கடுக்கை’ என்று அகநானூறு (393 : 15) குறிக்கின்றது. கொன்றை மரங்கள் புதிய பூக்களுடன் பொலிந்து தோன்றி, தலைவியிடம் கார்ப் பருவத்தின் வருகையை உரைத்து நிற்கும்.

            ……….  புதுப் பூங் கொன்றைக்

               கானம், கார் எனக் கூறினும்”        (குறுந்தொகை, 21 : 3-4)

              “ஆய்பொன் அவிர்இழை தூக்கியன்ன

               நீடுஇணர்க் கொன்றை”               (அகநானூறு, 364 : 4-5)

இடையர் ஆக்கும் சோற்றின் நிறம் கொன்றைத் தாதின் நிறத்தைப் பெற்றிருப்பதைக் கண்ட சங்கப் புலவர் ஒருவர்,

              “களிபடு குழிசிக் கல்அடுப்புஏற்றி,

               இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதின்,

               குடவர் புழுக்கிய பொங்குஅவிழ்ப் புன்கம்”  (மேலது, 393 : 14-16)

என்று பாடுகின்றார்.

அன்றலர்ந்த மலரை, ‘சுடுபொன் அன்ன கொன்றை’ என்றும், ‘பொன் என மலர்ந்த கொன்றை’ என்றும், ‘பொன் எனக் கொன்றை மலர’ என்றும், ‘சுடர்ப் பூங்கொன்றை’ என்றும் ‘தூங்குஇணர்க் கொன்றை’ என்றும்  சங்க இலக்கியம் (ஐங்குறுநூறு, 432 : 2, 420 : 1; நற்றிணை, 242 : 3; மதுரைக்காஞ்சி, வரி 277; அகநானூறு, 115 : 11; குறிஞ்சிப்பாட்டு, வரி 86) கூறும். தலைவனின் பிரிவால், தலைவியின் கண்கள் கொன்றைப் பூப்போலப் பசந்தனவாம். இதை, ‘கொன்றைப் பூவின் பசந்த உண்கண்’ என்று ஐங்குறுநூறு (500 : 1) சுட்டுகிறது.

      நீள வளர்ந்த கொன்றைக் காயைக் கொண்டு உருவாக்கிய குழலில் இனிய இசையைக் கோவலர் இசைத்ததை, ‘ஒழுகியகொன்றைத் தீம்குழல் முரற்சியர் ……… கோவலர்’ என்ற கலித்தொகைப் பகுதியாலும் (106:3-4), பனங்குருத்தின்கண் வைத்துக் கண்ணி தொடுக்கப்பட்டதை, ‘நாறு இணர்க் கொன்றைவெண் போழ்க் கண்ணியர்’ என்ற பதிற்றுப்பத்துப் பாடலாலும் (57 : 13) அறிய முடிகிறது.

ஆங்கிலத்தில் கொன்றையை ‘Laburnam’ என்று அழைப்பர். இதன் பொருள் பொன்மாலை என்பதாகும். மேலும் இதன் பூங்கொத்தை ஆங்கிலத்தில் ‘Golden Shower’ என்றும், ‘Streaming gold’ என்றும் கூறுவர். கொன்றைப்பூவை சுடுபொன்னுக்கும், அடர்பொன்னுக்குமாக “அடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும்,”  “சுடுபொன் அன்ன கொன்றை சூடி” (430 : 2, 432 : 2) என்று ஐங்குறுநூறு உவமிக்கின்றது.

அரும்பும், மொக்கும், பூவுமாக மாலையில் கோக்கப்பட்டனபோல் தொங்கியிருப்பதால், கொன்றைப்பூங்கொத்துச் சங்க நூல்களில் பொன்னிழைக்கும், பொன்மாலைக்கும் ஒப்பிடப்பட்டு பாடப்பட்டிருக்கின்றது.

            “இழையணி மகளிரின் விழைதகப் பூத்த

             நீடுசுரி இணர சுடர்வீக் கொன்றைக்

             காடுகவின் பூத்த ஆயினும்” —  நற்றிணை(302 : 1-3)

இதே ஒப்புமை ஆங்கில இலக்கியத்திலும் காணப்படுவது வியப்பைத் தருகிறது.

மாமல்லபுரத்துச் செல்வமகளிர் தம் இடையில் கொன்றை அரும்பு போன்ற பொற்காசுகள் கோர்த்த வடத்தை அணிந்திருந்ததை, “மகளிர், கொன்றை மென்சினைப் பனிதவழ் பவைபோல், பைங்காழ்” எனும் பெரும்பாணாற்றுப்படை வரிகள் (327-329) சுட்டுகின்றன. முல்லை நிலத்தில் கார்கால மழையால், ஆராய்ந்து எடுத்த பொன்னால் செய்த  அணிகளைத் தொங்கவிட்டாற் போன்ற நீண்ட பூங்கொத்துகளைக் கொண்ட கொன்றை மரங்கள் பூத்திருந்தன. அதனோடு, காடு முழுவதும் அழகு பெற விளக்குப் போன்ற தோன்றிப் பூக்களும், முல்லைப் பூக்களும், தேற்றாவின் பூக்களும் மலர்ந்து காடெல்லாம் மணம் பரப்பியதை அகப்பாடல் ஒன்று (364 : 4-7) நயம்படக் காட்சிப்படுத்துகின்றது.

பொதுவாகவே, கொன்றை மலரும் பொற்காசும் உவமப்படுத்தப் பெறுதலைப் பல இடங்களில் காணலாம்; சிறப்பாகக் கம்பராமாயணத்தில்,

              “நன்னெடுங் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென்பூ

               துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் தும்பி

               இன்னிசை முரல்வ நோக்கி இருநில மகள் கைஏந்திப்

               பொன்னொடும் காசை நீட்டிக் கொடுப்பதே போன்றதன்றே”

— (கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலம், 31)அறியலாம்.

கொடையாளிகள் பொன் மோதிரங்களையும், பொற்காசுகளையும் விருப்பத்தோடு பிறருக்குக் கொடுப்பது போல, மலையிலிருக்கும் கொன்றை மரங்கள் நரம்பும், இதழுமாகப் பூக்களைச் சொரிகின்றமை, பொன் மோதிரங்களையும், பொற்காசுகளையும் வாரிப் பிறருக்குக் கொடுப்பது போலுள்ளது என்று பெரியாழ்வார் திருமொழி கற்பனை நயத்துடன் இயம்புகின்றது.

  1. அடும்பு
அடும்பு

அடும்பு கடற்கரை ஓரங்களிலும், கழிகளிலும் படர்ந்துகிடக்கும்.

            “இருங்கழி பொருத ஈரவெண் மணல்

             மாக்கொடி அடும்பின் மா இதழ் அலரி”      (நற்றிணை, 145 : 1-2)

குதிரையின் தார்க்குச்சியின் நுனியில் கட்டப்பட்டுள்ள சிறிய மணியைப் போல அடும்பின் ஒள்ளிய மலர்கள் விளங்குவதையும், கொடி அடும்பின் ஆராய்ந்த பூக்களை விரவித் தொடுக்கப்பட்ட நெய்தலாகிய கண்ணியை விளையாட்டு மகளிர் சூடியதையும்  குறுந்தொகைப் பாடல்கள் (243 : 1-2, 401 : 1-3) உரைக்கின்றன. மலை போல் உயர்ந்த வெண்மையான மணல்மேட்டில் படர்ந்த அடப்பங் கொடியின் மலர்களைப் பறித்ததை, ‘குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்’ என்றும், தலைவிக்கு வளைந்த கழியின் அருகிலுள்ள அடும்பின் மலரைத் தலைவன் பறித்துக் கொடுத்ததை, ‘கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்’ என்றும் நற்றிணைப் பாடல் வரிகள் (254: 2, 349 : 2) காட்டுகின்றன. குளிர்ந்த கடற் பரப்பில் அடப்பங் கொடிகள் தழைத்து வளர்ந்த நீர்க்கரையில் நண்டுகள் விளையாடுகின்றனவாம் (பதிற்றுப்பத்து, 51 : 6-7).  நெய்தல் நில பரதச் சிறார்கள் மணலில் படர்ந்த அடப்பம் பூவினைத் தம் தலையில் சூடியதை, “வறள் அடும்பின் மலர் மலைந்தும்” என்று பட்டினப்பாலை (வரி65) கூறுகிறது.

      அடுப்பங்கொடி பச்சையாகக் காணப்படும். இதைப் ‘பாசடும்பு’ என்று சங்க நூல்கள் கூறுகின்றன. “ஆய்கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு,”  “ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு” (அகநானூறு, 330 : 15, ஐங்குறுநூறு, 101 : 2) என்று அடுப்பங்கொடி வருணிக்கப்படுகின்றது.

  1. ஆத்தி (ஆர்)
ஆத்திப்பூ

சோழர் ஆர் என்ற அத்திப்பூவையும், பாண்டியர் வேப்பம்பூவையும் சேரர் போந்தை என்ற பனம்பூவையும் சின்னங்களாகப் பெற்றிருந்தனர். கோவூர்கிழார் சோழ மன்னனைப் பார்த்து நின்னைப் பகைத்தவன் சேரனும் அல்லன், பாண்டியனும் அல்லன், வேறு ஒரு சோழனே என்று எடுத்துரைக்க அவரவர் பூச்சின்னங்களைப் பயன்படுத்தினார்.

              “இரும் பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

               கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;

நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு

                பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே” — புறநானூறு (45 ; 1-4)

பூவரசம்பூபோன்ற அமைப்புடன், அதன் நான்கில் ஒருபங்கு அளவினதாக வெள்ளை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் பூக்கும் மலரினை இக்காலத்தில் ஆத்தி என அழைக்கின்றனர்.

      ஆர் என்பது ஆத்தி மலர். தமாலம் என்பது வெற்றிலைக் கொடி. அது படர்ந்த மரம் ‘ஆர்’. வெற்றிலையைக் கொடிக்காலில் அகத்தி மரத்தில் படரவிடுகின்றனர். இந்த அகத்திதான் மருவி, ஆத்தியாயிற்று.

      அகத்தி என்று அழைக்கப்படும் இம்மரம் ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பலதரப்பட்ட மண்வகைகளிலும் வறட்சியைத் தாங்கி மிக வேகமாக வளரும் வளரும் தன்மையுடையது. ஆனாலும் கரிசல்மண் இதற்கு மிகவும் ஏற்றது. இது 6 முதல் 8 மீட்டர் உயரம் வளரும். இதன் இலைகள் மருத்துவ குணம் கொண்டுள்ளதால் வெற்றிலை, மிளகுத் தோட்டங்களில் கொடிகளின் தாங்கியாகவும், ஊடுபயிராகவும் வளர்க்கப்படுகிறது. இம்மரத்தின் பட்டையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. அகத்தி இலையை ஆடுகள் விரும்பி உண்கின்றன. இந்தியாவில் அசாம், வங்காளம், பஞ்சாப், ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் பரவலாக இது பயிர் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

பல சத்துக்களையும், வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக் கீரை. அகத்திப் பூவைச் சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டுவர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்தச்சூடு நீங்கும். பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் நீங்கும். அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு குறையும். அகத்தி இலைச் சாறு ஒரு தேக்கரண்டியும், அதே அளவு தேனும் கலந்து அருந்த வயிற்று வலி தீரும். இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும். அகத்திக் கீரை பால்சுரப்பைக் கூட்டும், மலச்சிக்கலைத் தீர்க்கும்.

பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி குணமாகும். அகத்திப் பூச் சாற்றினை இரு துளி மூக்கில் விட தும்மல், நீர்க்கோவை குணமாகும். அகத்திக் கீரை பித்த நோயைப் போக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் எனக் கூறுவர்

  1. அவரை

இது மொச்சை என்றும் வழங்கப்படுகிறது. அவரை, முன்பனிக் காலத்தில் மிகுதியாக மலரும். இது நீலநிறத்திலும் சிவப்புநிறத்திலும் காணப்படும். கொத்துக் கொத்தாக மலரும் அவரையின் சிவந்த மொட்டு, பவழம் போன்று பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இதனை, ‘நெடுங்கொடி அவரை’ என்று குறிஞ்சிப்பாட்டு (வரி 87) குறிப்பிடுகின்றது.

அவரையின் பசிய பூக்கள் முல்லை நிலத்தில் எங்கும் மலர்ந்து காணப்படும் என்பதை, “பைந்நனை அவரை பவழம் கோப்பவும்,” “மணிப்பூ அவரை,” “அவரைப் பைம்பூப் பயில” (சிறுபாணாற்றுப்படை, வரி 164, மதுரைக்காஞ்சி, வரி 292, அகநானூறு, 294 : 9) என்னும் இலக்கிய வரிகளால் அறியமுடிகிறது. மலையைச் சார்ந்த புனங்களில் அவரை மிகுதியாக வளர்ந்திருக்கும். தினை வளர்வதற்கு முன்னர் அப்புனத்தில் அவரையை விதைப்பர் மலைவாணர். தினை விளைந்து அறுக்கப்பட்ட பின்னர், அதன் தண்டிலே அவரைக்கொடி படர்ந்திருக்கும். புனத்தில் காணும் புதர்களிலும் இது படர்ந்து பூக்கும். அவரையின் பூக்கள் கிளியின் அலகினைப் போன்று இருக்கும் என்பர். இவற்றை,

“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்

 கொழுங்கொடி அவரை பூக்கும்

அரும்பனி அற்சிரம்”                                

“பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்

கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு பல்மலர்”            

என்ற பாடல் வரிகள் (குறுந்தொகை, 82 : 4-6, 240 : 1-2) உணர்த்துகின்றன. அவரைப் பூப்போன்ற நிறம் கொண்டு விளங்கும் வெண்மேகம் என்பதை, “கொண்டல் அவரைப் பூவின் அன்ன” எனும் ஐங்குறுநூற்றுப் பாடல் வரி (209 : 3) சுட்டுகின்றது.

source : tamizhtharakai.wordpress.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *