கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 11
- போங்கம்

போங்கம் உயர்ந்த மரமாகும். குறிஞ்சி நிலத்தது. நச்சினார்க்கினியர் இதனையும், திலகத்தையும் மஞ்சாடி என்கிறார். போங்கம், குனி, குன்னி, மலமஞ்சடை, கல்மாணிக்கம் எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் மரம் இது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்குப் பகுதிகளின் பசுமைமாறாக் காடுகளில் (கடல் மட்டத்திலிருந்து 800 – 1200 மீட்டர் உயரமான மலைகளில்) தெற்கு சயாத்திரி மலைகளிலும் மற்றும் அரிதாக கூர்க் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
மரங்கள் 30 மீட்டர் உயரம்வரை வளரக் கூடியவை. மரத்தின் பட்டை மாநிறமானது, வழுவழுப்பானது. சிறிய நுனிக்கிளைகள் தட்டை அல்லது குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றவை. உரோமங்களை உடையவை. மலர்கள் இளஞ்சிவப்பு நிறமானவை. கனி நீள்வட்ட வடிவமானது. இதன் விதை சிவப்பு நிறமானது.
- திலகம்
குறிஞ்சி நிலத்ததான இதன் மலர் செம்மை நிறம். இதன் மறுபெயர் மஞ்சாடியாக இருக்கலாம். இது ஆசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும். வெட்டுமரத் தேவைக்காகவே இது பெரிதும் பயன்படுகிறது. எனினும் இது வலிமை குறைந்ததாகும்.

திலகமரம் மண்ணின் நைட்ரசன் அளவைச் சமப்படுத்துவதற்காக முதன்மையாகவும், விலங்குகளின் உணவுக்காகவும், மருந்து மூலிகையாகவும், வீட்டுத் தோட்டங்களிலும், நகர்ப்புறங்களில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது. இதன் தரமான, அழகிய விதைகள் அழகு காரணமாக விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள், மற்றும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதால் இதன் பரவல் எளிதாகிறது. மஞ்சாடியின் இளம் காய்களைக் குரங்குகள் விரும்பி உண்கின்றன.
இதன் பூக்கள் சற்று நீளமாகவும், பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். கொட்டைகள் செந்நிறமாக இருக்கும். மஞ்சாடி மரத்தின் வைரப்பகுதி மிகவும் கடினத்தன்மை கொண்டதாகும். ஆகவே தோணி செதுக்குவதற்கும், மரத் தளவாடங்கள் செய்வதற்கும் இம்மரம் பயன்படுத்தப்படுகின்றது.
இலக்கியங்களில் திலகம்
சுரபுன்னைப் பூ, திலகப்பூ, நறிய வைரத்தையுடைய சந்தனம் ஆகியவை, பல்வேறு விலங்குகள், பறவைகள், மரங்கள், நறுமணப் பொருள்களோடு மலர்களும் நன்னனின் அரண்மனை வாயிலில் குவிந்திருந்தனவாம். அவ்வாறு குவிந்திருந்த மலர்களில் ஒன்றாக திலகமும் குறிப்பிடப்படுகிறது (மலைபடுகடாம், வரி 520).
சிலப்பதிகாரத்திலும் திலகம்பற்றிய குறிப்பு காணப்படுகிறது. வையை ஆற்றின் வடகரையில் மலர்ந்திருந்த மலர்கள் பலவற்றில், ‘மரவமும், நாகமும், திலகமும், மருதமும்’ என்று கூறப்படுகிறது. செங்குட்டுவன் மலைவளம் காணச்சென்றபோது மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களின் வரிசையில் நாகம், திலகம், சந்தன மரங்கள் சுட்டப்படுவதை, ‘நாகம், திலகம், நறுங்காழ் ஆரம், உதிர்பூம் பரப்பின்’ (சிலப்பதிகாரம், 13:152 மற்றும் 25:18-19) என்ற வரிகள் காட்டுகின்றன.
- பாதிரி
பாதிரி காட்டுப் பெருவழிகளில் மிகுதியாக வளர்ந்து நிற்கும். ‘அத்தப் பாதிரி’, ‘கானப் பாதிரி’ (அகநானூறு, 191:1, 261:1), ‘தேன்கமழ் பாதிரி’ (தேன்சிந்தும் பாதிரிப்பூ) என்றெல்லாம் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. பாதிரி மலர் செம்மையானது, மணம் மிகுந்தது, பஞ்சுபோன்ற துய்யினை உடையது, இதழ்கள் மெல்லியதாக இருக்கும். இருப்பினும், பாதிரியின் பூ மஞ்சள் நிறமானது, பொன்னிறமானது என்ற செய்தி சில இடங்களில் கூறப்பட்டிருக்கின்றது.
“பைங்கூழ்ப் பாதிரிப் போதுபிரிந் தன்ன
வங்கோ சிகமும் வங்கச் சாதரும்”
(பெருங்கதை, உஞ்சைக்காண்டம், 42:204-205)
“கோசிக ஆடை பூத்தன பாதிரி” (சீவக சிந்தாமணி, பாடல் 1650)
கோசிக ஆடை என்பது காசியில் நெய்யப்பட்ட பொன்னிறப் பட்டாடையாகும். பாதிரிப்பூ கோசிக ஆடைக்கு ஒப்பிட்டிருப்பது முக்கியமான செய்தியாகும்.
பாதிரிமலரின் அடிப்பகுதியில், இதழ் உள்ளகத்தில் குறுமயிர் இருப்பதாகச் செடிநூல் (Botany) கூறுகின்றது. மலரிதழின் அடிப்பகுதியில் மகரந்தத் தாள்கள் துவங்கும் இடத்தில் சுற்றிலும் ஒரே வரிசையாக குறுமயிர்கள் உண்டு என்று செடிநூல் கூறுகின்றது. இதே செய்தியை சங்கநூல்கள் கூறுவது மிக வியப்பைத் தருகின்றது.
“முதிரா வேனில்எதிரிய அதிரல்
பராஅரைப் பாதிரி குறுமயிர் மாமலர்” (நற்றிணை, 337:3-4)
“வேனிற் பாதிரி கூன்மலர்ரன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை” (குறுந்தொகை, 147:1-2)
பாதிரி மலரில் மயிர் உண்டென்பதைச் சீவக சிந்தாமணியும் (பாடல்52) குறிப்பாக உணர்த்துகின்றது.
இம்மலர்கள் வேனிற் காலத்தில் மலரும். செடிநூற்படி ஏப்ரல்-மே மாதங்களில் இது பூக்கின்றது. ‘வேனிற் பாதிரி’ என்றொரு வழக்கே ஏற்பட்டுவிட்டதன் காரணமாக “வேனிற்கட் பாதிரி” என்று நன்னூல், மயிலைநாதர் உரையும், ‘வேனிற் பாதிரி’ என்று குறுந்தொகையும் (167), அகநானூறும் (257) அழைக்கின்றன. பாதிரியின் மலர் சிறிது வளைந்து இதழ்வட்டம் குழாய் போன்று வளைந்து உள்ளதால் சங்கநூல்களில் ‘கூன்மலர்’ என அழைக்கப்படுகின்றது. “வேனிற் பாதிரி கூன்மல ரன்ன” என்று குறுந்தொகையும் (147), “வேனிற் பாதிரிக் கூனி மாமலர்” என்று அகப்பாடலும் (257) சுட்டுகின்றன.
“கானப் பாதிரி கருந்தகட்டு ஒள்வீ”
என அகநானூறு (261:1 மற்றும் 257:1) பாடுகிறது. விறலி, பாதிரிப் பூவின் மணம் கமழும் கூந்தலைக் கொண்டவள் என்று புறம் (70:14-15) பேசுகிறது. மேலும், வேனிற் காலத்தில் பாதிரிமலர் மலர்ந்து காணப்படுவது ஓவியனின் துகிலிகை போன்றுள்ளது என்பதை,
“ஓவ மாக்கள் ஒள்அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன, துய்த்தலைப் பாதிரி”
என வரும் நற்றிணைப் பாடல் பகுதியால் (118:7-8) அறியலாம். ஓவியத்தில் மிக நுண்ணிய திறனைக் காட்டுதற்கேற்பத் துகிலிகையின் நுனிப்பகுதி மிக மென்மையாக இருத்தல் வேண்டும்; அத்தகைய மிக மென்மையுடன் பாதிரி மலர் விளங்குகிறது என்பதால் கவிஞன் எங்ஙனம் இயற்கை மலரையும், செயற்கைத் துகிலிகையையும் கூர்ந்து நோக்கி, இணைத்து ஒப்புமை கண்டிருக்கிறான் என்பது அறியலாகும்.
பசிய இலையினை உதிர்த்த பருத்த அடி பொருந்திய பாதிரி மரம் என்பதை, “பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி” என்று பெரும்பாணாற்றுப்படை (வரி 4) சுட்டுகிறது.
பாதிரிமலர் இதழ்கள் தண்ணீருக்கு நறுமணம்தரும் இயல்பு உடையவை; அவைபோலக் கற்றவரைச் சார்ந்து கல்லாதாரும் அறிவில் முதன்மை பெறலாம் என்பதனை நாலடியார் ‘கல்வி’ என்னும் அதிகாரத்தில்,
“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”
என்ற பாடல் (139) புலப்படுத்துகிறது.
இளவேனில் காலம். புல்லிய அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் வரியுள்ள நிறம் கொண்ட திரண்ட மலர்களும், நுண்ணிய கொடியை உடைய அதிரல் மலர்களும் நுண்ணிய கருமணலில் அழகுபட உதிர்ந்திருப்பதை,
“புன்கால் பாதிரி அரிநிறத் திரள்வீ
நுண்குரல் அதிரலொடு நுணங்குஅறல் வரிப்ப”
என்று அகப்பாடல் (237:1-2) பதிவு செய்துள்ளது. காட்டாற்றில் விளக்கம் உற்ற மணல் உள்ள அகன்ற துறை. அங்கு வேனில் காலத்துப் பூக்கும் பாதிரிப் பூக்கள் சிந்தி இருந்தனவாம். தலைவி அவற்றைக் குவித்து மாலையாகக் கட்டியதை ஐங்குறுநூறு (361:1-3) சுட்டுகிறது.
“உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகன்துறை
வேனில் பாதிரி விரிமலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே”
பாதிரி மரத்தில் அதிரல் கொடி ஏறிப் படரும். பாதிரி மலர்கள் பூத்துக்குலுங்கும் ஓவியத்தை யாழ் என்னும் இசைக்கருவியின் வயிற்றுப் பகுதியில் வரைந்திருப்பார்கள்.
தற்காலத்தில் பூம்பாதிரி என்று அழைக்கப்படும் பாதிரிமரத்தையே சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. இலைகளை உதிர்த்தபின் இந்த மரங்களே பூக்கின்றன. வறட்சியான இடங்களிலும், காடுகளிலும் இந்த மரவகையே காணப்படுகின்றன. பூமாதுளை, பூமருது என்ற பெயர்களில் பூவின் சிறப்புக்காக பூ என்ற அடைமொழிப் பெயருடன் வழங்கப்பட்டதுபோல சிறந்த பூவுடைய ஒருவகைப் பாதிரிக்கே பூம்பாதிரி என்று பெயரிட்டழைத்ததாகத் தெரிகின்றது. இதன் வேர், காய், பூ ஆகியவை மருத்துவக் குணங்கள் நிறைந்தவையாகக் கருதப்படுகின்றன. மலர்ந்த பாதிரிப்பூவை சிறிது நேரம் மண்பானையில்போட்டு பின்னர் அதில் குடிநீரை ஊற்றி வைத்தால் நீர் சுவையாக மணத்துடன் இருக்கும் எனக் கூறுவர்.
source : tamizhtharakai.wordpress.com