கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 9
காயாம்பூ காய்ப்பது இல்லை. எனவே இதனைக் ‘காயா’ என்றனர். திருமாலைக் ‘காயாம்பூ மேனியன்’ என்பர். மைநிறம்கொண்ட இத்தெய்வத்தைத் தொல்காப்பியம் ‘மாயோன்’ எனக் குறிப்பிடுகிறது. மாயோனைத் தெய்வமாகக்கொண்ட முல்லை நிலத்துக் கருப் பொருள்களில் ஒன்று காயாமலர். காட்டுப் பகுதிகளிலும், செந்நிலப் பகுதிகளிலும் இது வளர்ந்திருக்கும். முதுவேனிற் காலத்தில் பொலிவிழந்திருந்த மரத்தின் கிளைகள், மழை பெய்தவுடன் தழைத்துக் கருமையுடன் பளபளப்பாகத் தோற்றமளிக்கும். காயா இணராக மலரும் தன்மையைப் ‘பல் இணர்க் காயா’ (குறிஞ்சிப்பாட்டு, வரி 70) எனக் கபிலர் பாடுகிறார். சின்னச்சின்ன ஊதாமலர்களை அடுக்கியதுபோல பூங்கொத்துகளுடன் காயாமரக் கிளைகள் தோற்றமளிக்கும்.

இலக்கியங்களில் காயாமலர்
காயா மொட்டாக இருக்கும்போது கரியநிறத்துடன் இருக்கும். விரியும்போது நீலமணியின் நிறத்தைப் பெறுகிறது. அப்போது அதன் நிறம் மயிலின் கழுத்தைப்போன்ற நிறத்துடன் விளங்குவதை, ‘கருநனைக் காயாக் கணமயில் அவிழவும்,’ எனச் சிறுபாணாற்றுப்படை (வரி 165) குறிப்பிடுகிறது. மேலும், மழைபொழிவதற்குமுன் பொலிவிழந்து காணப்பட்ட காயாமரம், பூக்களோடு கூடிய பெரிய கொம்புகளுடன் மழை பெய்தபின் மயிலின் கழுத்தைப்போல் தோற்றம் அளித்ததை,
“புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
மென்மயில் எருத்தின்தோன்றும்”
என்று குறுந்தொகையும் (183 : 5-6) புலப்படுத்துகின்றன.
முல்லை நிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக்கொண்ட காயாமலர் மைபோல்மலர்ந்திருந்ததை, “அயிரசெறி இலைக் காயா அஞ்சனம் மலர,” என்று முல்லைப்பாட்டும் (வரிகள் 92-93), நீலமணி எனும்படியான பலமலர்கள் காயாவில் குறுகிய கிளைகள்தோறும் நெருங்கி அழகு செய்ததை, “மணி எனப்பல்மலர் காயாங் குறுஞ்சினை கஞல” என்று நற்றிணையும் (242 : 3-4) ,‘மணிக்காயா’ என்று பொருநராற்றுப்படையும் (வரி 201) கூறுகின்றன.
கார்காலத்தில்தான் இம்மலர் மிகுதியாகப் பூக்கும். கொன்றை, தளவம், முல்லை இவற்றுடன்மலர்ந்து காணப்படுவதை,
“காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போதவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூஅணிகொண்டன்றால் புறவே”
என்ற ஐங்குறுநூற்றுப் பாடலால் (412 : 1-3) அறியலாம். மணி நிறத்திலிருக்கும் காயாம் பூ, வாடியவுடன் கரியநிறத்தை அடைவதை, ‘கரிபரந்தன்ன காயாஞ் செம்மலொடு’ என அகநானூறு (133 : 8) குறிப்பிடுகிறது.
குன்றில் மேகம்போலக் காயாமலர்கள் மலர்ந்திருந்தன; இடையிடையே சரக்கொன்றைகள் மலர்ந்ததுபோல மலையின் பிளவில் மின்னல் மின்னியதை, “காயாங் குன்றத்துக் கொன்றைபோல, மாமலை விடரகம் விளங்க மின்னி” என நற்றிணை (371 : 1-2) படம்பிடித்துக் காட்டுகிறது. ஆயர் காயாம் பூவாலான தலைமாலை உடையவர் என்பதை, “காயாம்பூக் கண்ணி கருந்துவர் ஆடையை” என்று கலிப்பாடல் (108 : 10) சுட்டுகிறது.
- ஆவிரை

ஆவிரை, ஆவாரம் எனவும் வழங்கப்படுகிறது. ஆவிரம்பூ விரிந்த இதழ்களையுடையது. ஆவிரை அனைத்துவகை நிலங்களிலும் தானே வளரும். வணிகநோக்குடனும் பயிரிடப்படுகிறது. பளிச்சிடும் மஞ்சள்நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி இது ஓர் ஆண்டுப் பயிர்; வேர் எடுக்காவிட்டால் ஆண்டுக் கணக்கில் உயிருடன் இருக்கும். கொத்துக் கொத்தாய் மிக அழகாகப் பூத்துக் குலுங்கும் புதர் வகை ஆவிரை. வெளிர் பச்சையில் சின்னச்சின்ன இலைகளுடன், காண்போர் கண்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் இம்மலருக்கு உண்டு. போகிப்பண்டிகையில் காப்புக்கட்டுகையில் அதனுடன் இம்மலரையும் சேர்த்து வைப்பர்.
பனைமடலால் செய்யப்பெற்ற மடல் மாவுக்கு (குதிரைக்கு) பொன்னிறம் உள்ள ஆவாரம் பூவாலாகிய மாலையைச் சூட்டுவர் என்பதை,
“பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல்நூல் மாலை பனைபடு கலிமா”
என்ற குறுந்தொகைப் பாடலால் (173 : 1-2) அறியமுடிகிறது.
‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ என்ற பழமொழியின் மூலம் ஆவாரம்பூ உயிர் காக்கும் மருந்தாவதை அறியலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நம் சித்தர்கள் பல மூலிகைகளைக் கண்டறிந்து கூறியுள்ளனர். அவற்றில் ஆவாரம்பூவும் ஒன்று. ஆவாரம்பூவின் வேதிப்பொருள்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
- வேரல்

சிறுமூங்கில் அல்லது சின்னமூங்கில் என்று அழைக்கப்படும் மரத்தின் பூ. உந்தூழ் என்பது பெருமூங்கிலின் மலர்; வேரல் என்பது சிறுமூங்கிலின் மலர். இந்த மூங்கில் துளை இல்லாத சிறுமூங்கில். பச்சையாய் உள்ள சிறுமூங்கில் முதிர்கையில் மஞ்சளும், பச்சையும் கலந்ததாய் மாறிவிடும். காட்டு மூங்கில், கல்மூங்கில் என்பன இதன் வேறு பெயர்கள். இது புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். இதனைப் பச்சைத் தங்கம், ஏழைகளின்மரம் என்றும் அழைப்பது உண்டு. பெருமூங்கில் பந்தல்கால் நடப் பயன்படும்; சிறுமூங்கில் கூடை முடையப் பயன்படும். ஊன்றுகோலாகவும் இதனைப் பயன்படுத்துவர்.
இலக்கியங்களில் வேரல்
பலாமரத்தினைக் காப்பதற்கு இயற்கை வேலியாக மூங்கில் புதர்கள் உள்ளதை, “வேரல் வேலி வேர்க் கோட் பலவின்” என்ற வரி (குறுந்தொகை, 18 : 1) காட்டுகிறது. மேலும் முள்ளாலமைந்த வேலியையுடைய சிறிய குடியிருப்புகள் உள்ளதை, “வேரல் வேலிச் சிறுகுடி” என்ற நற்றிணைத் தொடர் சுட்டுகிறது.
பழமுதிர்ச் சோலையில் அருவி வேகமாக வருகிறது. சிறுமூங்கிலின் கொம்பில் பூ. அக்கொம்பு அசைகிறது. அக்கொம்பு தனித்திருக்கும்படி அருவி வேரைப் பறிக்கிறது. இக்காட்சியை, “வேரல் பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு” என்று திருமுருகாற்றுப்படை (வரிகள் 297 – 298) காட்டுகிறது.
- சூரல்

சூரல் என்பது படர்கொடி. இக்கொடியில் பூக்கும் பூ சூரல்பூ. இது சூரைப்பூ எனவும் அழைக்கப்படும். சூரல்கொடியைப் பிரப்பங்கொடி என அகப்பாடல் குறிக்கிறது. பிரப்பங் கொடிகளைக்கொண்ட காவற்காட்டினையுடைய சாரல்பொருந்திய சுரவழி என்பதை, ‘சூரல் மிளைஇய சாரல் ஆர்ஆற்று’ என்று அகப்பாடல் (228 : 9) சுட்டுகிறது. நிறம் விளங்குகின்ற மயிரையுடைய கரிய குரங்கு, சிறிய பிரம்பங்கோலைக் கைக்கொண்டு அகன்ற பாதையில் மழையால் உண்டான மொக்குகளை அடிப்பதை,
“ …………… குரு மயிர்க்கடுவன்
சூரல்அம் சிறுகோல் கொண்டு, வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும்”
என்று ஐங்குறுநூறு (275 : 1-3) பாடுகிறது.
- சிறுபூளை

சிறுபூளையானது சிறுகண் பீளை, கண்பூளை என்று பலவாறு அழைக்கப்படும் காட்டுக் களைப்பூ வகையைச் சார்ந்த செடியாகும். இந்தச் செடி நன்றாக வளரும் தன்மைகொண்டது. வெள்ளைநிறப் பூக்கள்கொண்ட கதிர்கள் பூத்திருக்கும். தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இச்செடியைக் காணலாம்.
சிறப்பான நிறமோ, மணமோ இல்லாத மலர் எனினும், எத்தனை நாள் இருந்தாலும், வாடாதமலர்; இது மலரும்போதே காய்ந்ததுபோலத்தான் இருக்கும். அழகிய பச்சையில் சிறுசிறு வட்டங்களாக இலைகள், நீண்ட தண்டு போன்ற காம்புடன் சிறிய இலைகளையும், இலைக்கோணங்களில் மலர்க் கதிர்களையும் உடைய இது பொங்கல் பூ எனவும் அழைக்கப்படுகிறது. போகிப்பண்டிகைக்கு காப்புக் கட்டும்போது வைக்கப்படும் மலர்களில் இப்பூவும் ஒன்று.
தரிசுகளில் தானாகவே வளரும் செடி இது; இச்செடி நிறைய மருத்துவப் பயன்களைத் தன்னகத்தேகொண்டது. இச்செடியின் வேர் உடலில் தேங்கியிருக்கும் நீர்க்கோவை, கல்லடைப்புக்கு அருமருந்தாகும். காய்ந்த வேர்களை தேங்காய் எண்ணையில் காய்ச்சி, தலையில் தடவிவர மயிர்க்கால்கள் வலுவடைந்து முடிகொட்டுவது நின்றுவிடும்.
இலக்கியங்களில் பூளைப்பூ
பூளைப்பூ கோடைக்காலத்தில் பூப்பதை, ‘கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர’ என்றும், பூனையின் குட்டிகள் உடலிலுள்ள மயிர்கள் பூளைப்பூவினைப் போன்று உள்ளதை, ‘பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை’ என்றும் அகப்பாடல்கள் (217 : 5, 297 : 14) கூறுகின்றன.
மடல் ஊர்ந்த தலைவன் அழகிய பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகிமலர்களைக்கொண்டு மாலையைத் தொடுத்ததை, “அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து” என்ற கலிதொகைப் பாடலால் (138 : 9) அறியமுடிகிறது. அச்சந்தரும் பாழிடத்தில் பூளைச்செடி வளர்ந்துள்ளதை, ‘பூளை நீடிய வெருவரு பறந்தலை’ என்று புறப்பாடல் (23 : 20) கூறுகிறது.
வரகு ஒரு முல்லைநிலப் பயிர். அது குறுகிய தாளைக்கொண்டது. வரகு அரிசிச் சோறு கொத்தாகப் பூக்கும் பூளைப்பூவைப் போன்றது என்பதை, “நெடுங்குரல் பூளைப் பூவின்அன்ன, குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி” என்று பெரும்பாணாற்றுப்படை (வரிகள், 192-193) குறிப்பிடுகிறது.
திருமாவளவன் தன் பகைவருடைய மதிலை வளைத்துப் போரிட்டபோது, அவனும் அவனது படைவீரரும் பெரும்பூளைப் பூவையும், உழிஞை என்னும் சிறுபூளைப் பூவையும் சூடிக்கொண்டு போரிட்டதை, “தூறுஇவர் துறுகல்போல போர்வேட்டு, வேறுபல் பூளையொடு உழிஞை சூடி” (பட்டினப்பாலை, 234 – 235) என்ற பாடல் வரிகள் காட்டுகின்றன.
செந்நாய் துரத்தியதால் காற்றில் அகப்பட்ட பூளைப்பூப்போல ‘ஒய்’ என்ற ஒலியோடு அலறி தறிகெட்டு மான்கூட்டம் ஓடியதை, “செந்நாய் எடுத்தலின், வளிமுனைப் பூளையின் ஒய்யென்று அலறிய,கெடுமான் இனநிரை” என்று அகப்பாடல் (199 : 9-11) சுட்டுகிறது. பூளைப்பூ, உழிஞைப்பூ, ஆவிரம்பூ, மயில்பீலி, மணி ஆகியவற்றைக் கோர்த்துக் கட்டிய மாலையை மடல் ஏறுவோன் சூடி இருப்பான். இதனை,
“ . . . . . . பூளை உழிஞையோடு யாத்த
புனவரை இட்ட வயங்குதார்ப் பீலி . . . . . . .மணிகட்டி
அயர்பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங்கண்ணி”
என்ற நெய்தல்கலிப் பாடல் (140 : 4-7) காட்சிப்படுத்துகிறது.
source : tamizhtharakai.wordpress.com