கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 4
2. ஆம்பல்

அல்லி அல்லது ஆம்பல் நீரில் வளரும் ஒரு கொடியும், அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம்,பொய்கை, நீர்ச்சுனைகளிலும், கழனிகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் மிகுதியாக மலர்ந்திருக்கும். கொடியில் முள்போன்ற அமைப்பு இருக்கும். அதனை, ‘அம்முள் நெடுங்கொடி அருவி ஆம்பல்’ என்று வழங்கினர் (அகநானூறு, 96: 4-5). கார்காலத்தில் மழை பெய்து நீர் நிலைகள் நிறைந்திருக்கும்போது இது மிகுதியாக மலரும். அதனால்‘மாரி ஆம்பல்’ என்று குறித்தனர் (குறுந்தொகை, 117 :1). இது காலையில் நெய்தல் மலர்களுடன் மலர்ந்திருக்கும். மாலையில் குவியும். எகிப்தில் உள்ள நைல் நதியில் பூக்கும் நீலநிற அல்லி இரவில் மலர்ந்துபகலில் குவியும். ஆனால், அதே நதியில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
“நீர்ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய நேர்இதழ் ஆம்பல் நிரைஇதழ்”
என்று கலித்தொகையும் (கலித்தொகை, 75 : 1-2),
“குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே வந்தன்று, வாழியோ மாலை”
எனக் குறுந்தொகையும் (122 : 2-3) கூறுகின்றன.
செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து,ஆம்பல் மலர்கள் குவிந்ததை,
“செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்” என்று திருப்பாவை (பாடல் 14) சுட்டுகிறது. ஆனால், இரவில்மலரும் ஆம்பல் இனங்களும் உள்ளன என்பதை,
“ஆம்பல் ஆய்இதழ் கூம்புவிட, வளமனைப் பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி” (குறிஞ்சிப்பாட்டு, வரிகள் 223-224)
“மதி நோக்கி அலர்வீத்த ஆம்பல் வால்மலர்”
என்ற இலக்கிய வரிகள் (கலித்தொகை, 72 : 6) சுட்டுகின்றன.
ஆம்பல் குளிர்ச்சியுடைய மலர். அதனால், ‘ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே’ (குறுந்தொகை, 84 : 5) என்று அதன் தன்மை தலைவியின் மேனித்தன்மையுடன் உவமித்துக் கூறப்படுகிறது. ஆம்பலில் வெள்ளாம்பல், செவ்வாம்பல் என்ற இரு வகை உண்டு. அதனால், ‘செவ்வாய் ஆம்பல்’ (பரிபாடல், 8 : 116) என்றும், ‘நாற்ற நாட்டத்து அறு காற் பறவை, சிறு வெள்ஆம்பல் ஞாங்கர் ஊதும்’ (புறநானூறு, 70 : 11-12) என்றும் புலவர்கள் பாடுகின்றனர்.
ஆம்பல் மொட்டு கூம்பியிருக்கும். கொக்கைப்போலக் காட்சியளிக்கும். ‘கொக்கின் அன்ன கூம்பு முகை, கணைக்கால் ஆம்பல்’ (நற்றிணை, 230 : 2-3) என்பது சங்கப் புலவரின் கூற்று. நீரின் சிறு அசைவிலேயே அதன் பிணி அவிழ்வதை, ‘ஆம்பல், சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,வெளிய விரியும்’ (மேலது, 345 : 3-5)என்று சுவைபடக் கூறுகிறார் மற்றொரு புலவர். ஆம்பல் பூ வாடிய பிறகு அதன் அழகும் மாறிவிடுவதை வீட்டில் குருவியின் இறகின் தோற்றத்துக்கு உவமையாவதை,‘ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன, கூம்பிய சிறகர் மனைஉறை குரீஇ’என்ற குறுந்தொகை அடிகள் (46 : 1-2) உணர்த்துகின்றன.
தலைவி நீரில் வளரக் கூடிய அல்லியின், உள்துளைபொருந்திய தண்டினுடைய நாரை உரித்தாற்போன்ற அழகு குறைந்த மாமை நிறம் உடையவள். குவளைப்பூப் போன்ற அழகு தங்கப் பெற்ற குளிர்ச்சியுள்ள கண்ணைக் கொண்டவள் என்பதை,
“நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார்உரித் தன்ன மதன்இல் மாமைக்
குவளை அன்ன ஏந்துஎழில் மழைக்கண்”
என்று நற்றிணை (6 : 1-3) சுவைபடக் கூறுகின்றது.
ஆமபல் பூ பொய்கையில் இருக்கும். அதன் தண்டு துளை உடையது. பூந்துகள் மஞ்சள் வண்ணம் கொண்டது. தலைவனைப் பிரிந்த தலைவியின் கண்கள் பசலை பரவியதால் மஞ்சள் வண்ணம் கொண்டதை,
“பொய்கை பூத்த புழைக்கால் ஆம்பல்
தாதுஏர் வண்ணம் கொண்டன
ஏதிலாளர்க்குப் பசந்த என்கண்ணே”
என்று ஐங்குறுநூறு (34 : 2-4) சுட்டுகின்றது.
திங்களைப் பார்த்து ஆம்பல் மலர்ந்ததை, “மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல்வால் மலர்” என்ற கலித்தொகைப் பாடலால் (72 : 6-8) புலப்படுகிறது. அரும்பாக இருந்து மலர்ந்த ஆம்பல் பூவைப் போன்றது மது உண்ணும் கலம் என்பதை, “கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல், தேம்பாய் உள்ள தம்கமழ் மடர்” என்ற புறப்பாடல் (383 : 7-8) புலப்படுத்துகின்றது.

மேலும் துணங்கைக் கூத்து ஆடிய இடத்தில் சிந்திய ஆம்பல் பூக்களை முதிய பசு தின்பதை, “கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின், வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்” என்று பதிற்றுப்பத்து (13 : 5-6) சுட்டுகின்றது.
ஆம்பல் மலர் மருத்துவ குணம் கொண்டது. உடல் சூடு, நீரிழிவு பாதிப்புகள், சிறுநீர் எரிச்சல் மற்றும் கண் நோய்கள் போன்றவை இதன் பல்வேறு பகுதிகளை மருந்தாகப் பயன்படுத்துவதன் மூலம் குணமடைகின்றன. அல்லி முளை தின்று, ஐம்பது நாள் தவமிருந்து, முல்லை முளை தின்று முப்பது நாள் தவமிருந்து மலடி ஒருத்தி பிள்ளை பெற்றதாக ஒரு நாட்டுப்பாடல் கூறுகிறது. இதிலிருந்து இந்த மலர்களுக்குப் பெண்களின் மலட்டுத் தன்மையைப் போக்கும் ஆற்றல் உண்டு என்பது தெரிய வருகிறது. அத்துடன் வெள்ளை அல்லி, செவ்வல்லி, கருநெய்தல் ஆகிய மூவகை பூக்களும் கருவுற்ற பெண்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
3.அனிச்சம்

மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. கைகளால் தீண்டினாலோ அல்லது முகர்ந்து பார்த்தாலோ வாடிவிடும் அளவுக்கு மென்மையானது. மென்மைக்கு உதாரணமாகத் திருக்குறளில் கூறப்படும் மலர் அனிச்சம் பூ ஆகும். இளம் சிவப்பிலும், அழகிய ஆரஞ்சிலும், ஊதா நிறத்திலும் அழகாய் மலர்ந்திருக்கும். சூரியன் ஒளி இருக்கும் திசையில் இலைகள் திரும்பிக் கொண்டே இருக்கும். இது ஒரு செடி வகைத் தாவரமாகும். மென் செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்குத் தனியழகு.
இலக்கியங்களில் அனிச்சம் பூ
திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக அனிச்சம் பூவின் இயல்பைக் கையாண்டுள்ளார். அவற்றைக் காண்போம்.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும்விருந்து” (குறள் – 90)
முகர்ந்தவுடனேயே வாடிவிடுவது அனிச்சப்பூ. அதுபோல முகத்தில் தோன்றும் சிறு மாறுபாட்டை நோக்கியவுடனே விருந்தினர் உள்ளமும் வாடிவிடுமாம்.
“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்” (மேலது, 1111)
மெல்லிய அனிச்சமே, உன்னையும், உன் மென்மையையும் நான் அறிவேன். ஆனால் தேனென இனிக்கும் என் காதலி உன்னையும்விட மென்மையானவள்.
“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை” (மேலது, 1115)
பூவினும் மெல்லிய பூங்கொடி தானென்று அறியாமல், இவள் காம்பு களையாத அனிச்ச மலரைத் தன் கார்குழலில் சூடிக்கொள்வாளானால் அதன்பிறகு அவளுடைய இடையைப்பற்றி நல்ல பேச்சு பிறக்காது (இடை ஒடிந்து போயிற்று என்ற துன்பச்சொல்தான் பிறக்கும்).
“அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்” (மேலது, 1120)
காற்றில் பறக்கும் அனிச்சமலர். ஒரு கனமும் இல்லாதது அன்னப்பறவையின் சிறகு. அவையிரண்டும் மென்மையானவை. ஆனால் இவளது பாதம் அவற்றின் மீது பட்டால் நெருஞ்சிமுள் குத்தியதுபோலத் துடிப்பாள். காரணம் இவளது பாதங்கள் அவற்றையும் விட மென்மை. இச்சான்றுகள் அனிச்சமலரின் மென்மையை மிகச்சிறப்பாக விளக்குகின்றன.
கலித்தொகையில் அனிச்சப்பூ:
“அரிநீர் அவிழ்நீலம், அல்லி, அனிச்சம்,
புரிநெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த
தெரிமலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்” (பாடல் – 91 : 1-3)
என்று அனிச்சம் கண்ணியும் தாருமாகச் சூடுதற்குரியது என்பதைக் குறிப்பிடுகிறது.
‘அனிச்சப்பூக் கால்களையாள்’ என்னும் குறள்வழி அனிச்சப்பூ தனிமலர் என்பதும், நீண்ட காம்பினை உடையது என்பதும், அனிச்சப் பூவைக் காட்டிலும் அதன் காம்பு கனமானது என்பதும் பெறப்படுகின்றன.
பிற்கால இலக்கியங்களில் அனிச்சம்
திருக்குறளுக்குப்பின் வந்த் இலக்கியங்களான பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருக்கோவையார், திருப்புகழ் முதலியன அனிச்சம் பற்றிக்குறிப்பிடுகின்றன. இவற்றுள் திருப்புகழ் தவிர்த்த ஏனைய இலக்கியங்கள் அனிச்சப்பூ மாதரடிக்கு நெருஞ்சியாக உணரப்படும் என வள்ளுவர் குறளை வழிமொழிந்து அனிச்சத்தின் மென்மையை மரபு வழியே போற்றுகின்றன. பெருங்கதை,
“அணிநிற அனிச்சம் பிணியவிழ்ந்து அலர்ந்த
அந்தண்நறுமலர் அயர்ப்பிற்று ஆங்குஞ்”
(நரவாணகாண்டம் : 1, வயாக்கேட்டது : 134 – 135)
என்றும், சீவக சிந்தாமணி, “அனிச்சத்தம் போதுபோலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி” என்றும்,“அம்மெல் அனிச்சம் மலரும் அன்னத் தூவியும், வெம்மையாம் என்று அஞ்சி மெல்ல மிதியாத” என்றும், “அனிச்ச மலரும் பொறையாகி ஒவ்வாப் பஞ்சி மெல்லணை” (பாடல்கள் 2939, 2454 மற்றும் 2701) என்றும் போற்றுகின்றன.
அனிச்சம் மாலையாகப் புனைதற்குரியது என்பதைச் சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகியன குறிப்பிடுகின்றன.
4. குவளை
குளிர்ந்த குளத்துச் செங்கழுநீர்ப் பூ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவார்.குவளை ஆம்பலைப் போன்ற நீர்த்தாவரம். பார்க்கும்போது குவளையும், ஆம்பலும் ஒரே மலர் போன்று தோன்றினாலும் இரு மலர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது. இது மலைப்பக்கச் சுனைகளில் மிகுதியாகப் பூத்திருக்கும். சில இடங்களில் கழி, பொய்கை போன்றவற்றிலும் வளர்ந்திருக்கக் காணலாம்.
“பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனிமலர்க் குவளை” என்றும், “கயத்துவளர் குவளை” என்றும் ஐங்குறுநூறு (225 : 1-2 மற்றும் 277 : 5) கூறும். மேலும், ‘அரக்கு இதழ்க் குவளை’ (பெரும்பாணாற்றுப்படை, வரி 293), ‘மா இதழ்க் குவளை’ (பட்டினப்பாலை, வரி 241) என்ற இலக்கியப் பகுதிகளால் குவளையில் செங்குவளை, நீலக் குவளை ஆகிய இரு இனங்கள் உள்ளதை அறிகிறோம். சங்கப் பாடல்களில் உவமையாக இம்மலர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தேவாரம், திருப்புகழ், திருமந்திரம் என அனைத்திலும் பாடப்பட்ட மலர் இது. மலர்ந்தவுடன் குவளை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். ஆகவேதான் பெண்ணின் அழகு பெற்ற மையுண்ட விழிகளுக்கு ஒப்பிடப்படுகின்றது. இலக்கியங்களில் குவளை மலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படுவதை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
“காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று” (திருக்குறள், 1114)
“குவளை உண்கண்” (குறுந்தொகை, 167 : 3)
மேலும், பெண்களின் கூந்தல் குவளை மலரின் மணம் வீசுவதை, “குவளை நாறும் குவைஇருங் கூந்தல்” என்று குறுந்தொகை (பாடல் 300 : 1) சுட்டுகிறது. குவளை காலையில் மலர்ந்திருக்கும்; மாலையில் கூம்பும். கயங்களில் தொகுதி தொகுதியாக மலர்ந்திருக்கும். மொட்டு, கூம்பு போன்ற அமைப்புடன் இருக்கும் என்பதை, “குவளைக்கூம்புவிடு பல்மலர்” என்ற அகப்பாடல் (பாடல் 36 : 3-4) கூறுகின்றது. குவளை மலர் மிகவும் மென்மைத் தன்மை கொண்டது. வண்டு உழக்கச் சிதைந்துவிடும் தன்மையுடையதை,

4. குவளை
வண்டுபடு மலரின் சாஅய்த் தமியென்; மன்ற அளியென்”
என்று குறுந்தொகை (பாடல் 30 : 4-6) காட்டுகிறது.
ஆடவர் மனதைக் கவர பொதுமகளிர் பூச்சூடிக்கொள்வதை ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.
தம்முடைய கரிய கூந்தலில் வெண்மையான தலைமாலையைச் சூடிக்கொண்டனர். ஆடவரோடு கூடியபிறகு, வளையல் ஒலிக்க கைவீசி நடந்தனர். தெருவில் அவர்தம் தலையில் இருந்த மலர்கள் சிந்தின. பெரிய பல வண்டுகளால் மலர்த்தப்படுவதைப் போல குவளைப் பூப்போன்ற மலர்களைக் கையால் மலர்த்தி மோந்தபோது மிகுந்த மணம் வீசியது. அப்பூக்களை, புதரில் மழையில் பூத்த பூக்களைப் போலத் தம் தலையில் சூடிக்கொண்டனர். இதனை,
“ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போதுஅவிழ் புதுமலர் தெருவுடன்கமழ . . . . . .
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப்புதல் மானப்பூ வேய்ந்து”
என்று மதுரைக்காஞ்சி (வரிகள் 563 – 568) படம் பிடித்துக் காட்டுகிறது.
கதவுகளை மூடுவதற்கும், திறப்பதற்கும் அவற்றில் கைப்பிடிகள் வைப்பர். அப்பிடிகள் மலர்ந்த செங்கழுநீர்ப்பூ வடிவத்தில் செய்யப் பெற்றிருந்ததை, “போதுஅவிழ் குவளைப் புதுப்பிடி கால்அமைத்து” என்று நெடுநல்வாடை (வரி 83) காட்டுகிறது. குவளை மலர் மிகுதியான இதழ்களை உடையது. எனவே குவளையைப் ‘பல்லிதழ்’ என்று அழைத்தனர். வீடுகளிலும் குவளை மலரைத் தாழி எனப்படும் பூந்தொட்டிகளில் வைத்து வளர்த்தனர். அதனைத் ‘தாழிக் குவளை வாடுமலர் சூட்டி’ (அகநானூறு, 165 : 11) என்ற அடியால் உணரலாம்.
source : tamizhtharakai.wordpress.com