கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 3
பூக்களைக் குறிக்கும் பாடல் அடிகள்
“ …….. ……… ………. ….. வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கோடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்.
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாட் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர் பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும்புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,
அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்”
— குறிஞ்சிப்பாட்டு, அடிகள் 61-96
தோழியும், தலைவியும் அருவியில் நீராடி பல்வகை மலர்களைப் பறித்துப் பாறையில் குவித்து வைத்தனர். அவ்வாறு பறித்த 99 மலர்கள் பின்வருமாறு:
- காந்தள் (Variety of Glory Lily)
- ஆம்பல் (White Water Lily)
- அனிச்சம் (A delicate flower)
- குவளை (Purple Indian Water – Lily)
- குறிஞ்சி (Kurinji, Neela kurinji flower)
- வெட்சி (Scarlet Ixora)
- செங்கோடுவேரி (Rosy – flowered leadwort)
- தேமா (Sweet Mango)
- மணிச்சிகை – செம்மணிப் பூ (Crab’s eye)
- உந்தூழ் – பெருமூங்கிற் பூ (Largebamboo)
- கூவிளம்– வில்வம் (Bael)
- எறுழம் (A hill country tree with red flowers)
- சுள்ளி – மரம் (Ceylon ebony)
- கூவிரம் (A mountain tree)
- வடவனம்
- வாகை(Sirissa, Albizzia)
- குடசம்– வெள்ளை நிறப்பூ(Conessi bark)
- எருவை – நாணல்(European bambooreed)
- செருவிளை ( White – flowered mussel – shell)
- கருவிளை
- பயினி (A kind of tree peculiar to hilly tracts)
- வானி (A species oftree)
- குரவம் (Common bottle flower tree)
- பசும்பிடி – பச்சிலை மரம் (Mysore gamboge)
- வகுளம் – மகிழ் மரம் (Pointed – leaved ape – flower)
- காயா – காசாமரம் (Ironwood tree)
- ஆவிரை – செடி (Tanner’s senna)
- வேரல் – சிறு மூங்கில் (Small bamboo)
- சூரல் – சூரைச் செடி, தூதுவளை (Oblique – leaved jujube)
- சிறுபூளை – களை (A common wayside weed)
- குறுநறுங்கண்ணி – குன்றி, குன்னி முத்து (Crab’s eye)
- குருகிலை (Flower of a tree)
- மருதம் – மருத மரம், நீர் மருது, கரு மருது (Black winged myrobalan)
- கோங்கம் – மரம் (False tragacanth)
- போங்கம் – மரம் (Red – wood)
- திலகம் – மஞ்சாடி மரம் (Barbados pride)
- பாதிரி – மரம் (Yellow flowered fragrant trumpet – flower tree)
- செருந்தி – மரம் (Panicled golden- blossomed tree )
- அதிரல் – மல்லிகை வகை (Wild jasmine)
- சண்பகம் – மரம் (Champak)
- கரந்தை – திருநீற்றுப்பச்சை (Fragrant Basil)
- குளவி –மர மல்லிகை, காட்டு மல்லிகை (Wild jasmine, Indian cork)
- மா – மாமரம் ( Wild Mango tree)
- தில்லை – மரம் (Blinding tree)
- பாலை (Blue – dyeing rosebay, Woolly dyeing rosebay)
- முல்லை (Arabian jasmine)
- கஞ்சங்குல்லை – நாய்த் துளசி (White – Basil)
- பிடவம் (Bedaly emetic – nut)
- சிறுமாரோடம் (Red catechu)
- வாழை (Plantain)
- வள்ளி – கிழங்கு, கொடி(Canvolvulus batatas)
- நீள்நறுநெய்தல் (White Indian water – lily) .
- தாழை – தெங்கம்பாளை (Coconut flower with the integument covering it)
- தளவம் – மஞ்சள் முல்லை (Goldenjasmine)
- தாமரை (Lotus)
- ஞாழல் –மரம்(Heritiera Littoralis – Dryander)
- மௌவல் – காட்டு மல்லிகை (Wild jasmine variety)
- கொகுடி – முல்லைக்கொடி வகை (A variety of jasmine creeper)
- சேடல் – பவள மல்லிகை (Night – flowering jasmine)
- செம்மல் – சாதிப் பூ, முல்லைப் பூ வகை (Large flowered jasmine)
- சிறுசெங்குரலி –கருந்தாமக்கொடிப்பூ (A mountain creeper)
- கோடல் – வெண் காந்தள் (White species of Malabar glory lily)
- கைதை – தாழம் பூ (Fragrant screw -pine)
- வழை – சுரபுன்னை (Long – leaved two – sepalled gamboge)
- காஞ்சி –ஆற்றுப் பூவரசு மரம் (River portia)
- மணிக்குலைகள் கமழ் நெய்தல் – நீலமணி போலுங் கொத்துக்களையுடைய தேன்
- நாறும் கருங்குவளை (Blue Nelumbo)
- பாங்கர் (Tooth – brush tree)
- மராஅம் – வெண்கடம்பு (Seaside Indian oak)
- தணக்கம் – நுணா என்னும் கொடி (Small ach root)
- ஈங்கை – ஈங்குச்செடி (Species of sensitive – tree)
- இலவம் – மரம் (Red – flowered silk – cotton tree)
- கொன்றை – சரக்கொன்றை (Indian laburnum)
- அடும்பு – கொடி (Hare leaf)
- ஆத்தி – மரம் (Common mountain ebony)
- அவரை – கொடி (Field – bean)
- பகன்றை – சிவதைக் கொடி (Indian jalap)
- பலாசம் – புரச மரம் (Palas – tree)
- பிண்டி (Asoka tree)
- வஞ்சி (மரம் மற்றும் கொடி)– ஆற்றிலுப்பை மரம் (Glabrous mahua of the Malabar coast
- பித்திகம் – பித்திகை (Large flowered jasmine)
- சிந்துவாரம் – கருநொச்சி (Three – leaved chaste tree)
- தும்பை – செடி (White dead nettle, Bitter toombay)
- துழாய் (Sacred basil)
- தோன்றி – செங்காந்தள் (Malabar glory lily)
- நந்தி – நந்தியாவட்டம் (East Indian rosebay)
- நறவம் – நறுமணக்கொடி (A fragrant creeper)
- புன்னாகம் – சிறு மரம்
- பாரம் – பருத்திச்செடி (Indian cotton plant)
- பீரம் – பீர்க்கு, கொடி (Sponge – gourd)
- குருக்கத்தி – மாதவிக்கொடி (Common delight of the woods)
- ஆரம் – சந்தன மரம் (Sandal – wood tree)
- காழ்வை – அகில் (Eagle – wood)
- புன்னை – மரம் (Mast – wood)
- நரந்தம் – நாரந்தை (Bitter Orange)
- நாகப்பூ (Iron wood of Ceylon)
- நள்ளிருள்நாறி – இருவாட்சி (Big jasmine variety)
- குருந்தம் – புனவெலுமிச்சை (Wild lime)
- வேங்கை – பெரிய மரம் (East Indian Kino tree)
- புழகு – எருக்கம் பூ (East Indian satin – wood)
காந்தள்:

தமிழிலக்கியத்தில் போற்றப்படும் அழகிய பூ காந்தள் பூவாகும். இப்பூ தமிழ்க் கடவுள் முருகனுக்குரிய பூவாகக் கருதப்பெற்றது. காந்தள் மலர் தமிழீழத்தின் தேசியமலர். தமிழகத்தின் மாநிலப் பூ.ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலரும் இதுவே. மழைக் காலத்தில் வேலியோரங்களில் பூத்துக் குலுங்கும், இக்காந்தளைச் சிற்றூர்களிலும் வயற்புறங்களிலும் வாழும் மக்கள் நன்றாக அறிவர். இதற்குப் பல பெயர்கள் தமிழ் நாட்டில் உண்டு. எல்லாம் காரணப் பெயர்கள். கார்த்திகைக் காலத்தில் இதன் பூ அகல்விளக்கு போலப் பூப்பதால் கார்த்திகை விளக்கிற்கு ஒப்பிட்டுக் கார்த்திகைப் பூ என்று வழங்கினர். இதன் கிழங்கு கலப்பையைப் போலிருப்பதால் கலப்பைக் கிழங்கு என்று பெயரிட்டனர். கோயம்புத்தூர்ப் பகுதிகளில் இதைக் ‘காக்கைமூக்குக் கொடி’ என்று அழைப்பர். இதன் காய் நீண்டு மூக்குப் போல் சிறிது வளைந்து இருப்பதால் இப்பெயர் பெற்றது.காந்தள் இந்தியாவின் பல பகுதிகளிலும் மலேசியா, பர்மா, இலங்கை, அயன மண்டல ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் வளர்கிறது.
செடிநூற்படி இஃது ஒரு கொடி. இது கார் காலத்தில் பூக்கும். இதன் தண்டு மெல்லியதாகவும்,இலைகள் ஒள்ளிய நெய்ப்புடன்அழகாகவும் இருக்கும். இலைகளின் நுனிகளில் மெல்லியகம்பிகள் உண்டு. கம்பிகள் வேலியையோ பிற மரச் செடிகளையோ தழுவி ஏற உதவுகின்றன. ஒரே பூவில் காணப்படும் மாறுபட்ட நிறங்கள் கண்களை ஈர்க்கும். பூவில் ஆறு அழகிய பூவிதழ்கள் புரிவுகளோடு இருக்கும். பூக்கும்போது இவ்விதழ்கள் இளம்பச்சை நிறமாகவும்,பின்னர் மஞ்சளாகவும், கிச்சிலி நிறமாகவும் இறுதியில் சிவப்பு, கடுஞ்சிவப்பாகவும் (crimson) மாறுவது வியப்பளிக்கிறது. மற்றும் இதழ்களின் அடிப்பகுதி ஒருநிறமாகவும், நடுப்பகுதி வேறு நிறமாகவும், நுனிப்பகுதி பிறிதொரு நிறமாகவும், ஓரங்கள் வெவ்வேறு நிறமாகவும் காணப்படுவது இப்பூவின் தனித் தன்மையாகும். இதன் காரணமாகவே இதைச் சீனர்களின் பல்நிற, ஒளிநிற விளக்குகளுக்கு (Chinese lantern) ஒப்பிட்டு, மலேயாவில் பெயரிடப் பெற்றிருக்கிறது. வெய்யிலில் ஒள்ளிய நெய்ப்புடன் பச்சைப்பசேலென்று தோன்றும் இலைகளுடன், தண்டுடன் நிறம்நிறமாகக் காணப்படும் பூக்களுடன் கூடிய காந்தள் செடி கண்ணுக்கு மிக இனியதாக இருக்கும்.
சங்கநூல்களில் மற்றைச் செடி கொடிகளைவிட மிகப் பல இடங்களில் கூறப்படுவது காந்தள் பூவேயாகும். இதிலிருந்து காந்தளை அதன் அழகுக்காக எவ்வளவுபோற்றினார்கள் என்பது தெரியும். இந்தச் செடியை அழகுக்காகத் தொட்டியில் வளர்க்கும் வழக்கம் பரவி வருகிறது. மோந்தாலும் குழைந்துவிடும் என்று இதன் இலையின் மென்மைத் தன்மைகூறப்பட்டிருக்கின்றது. செடி நூலாரும்இதன்இலை மென்மையானது என்றே கூறுகின்றனர் (Leaf blade soft, smooth and bright). இதன் இலைகள் வாழைமடல் போன்று உருவிலும் அமைப்பிலும் இருப்பதால் ‘கொழுமடல்’ என்று கூறப்பட்டிருக்கின்றது (பி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், பக் 64-66).
காந்தள் மலர் மலைச்சாரலில் வளரும்.நவம்பர் முதல் மார்ச்சு வரையிலான காலத்தில் பூக்கிறது. இதன் மலர் குலைகுலையாகப் பூத்திருக்கும். சங்க நூல்களில் இதன் பூ பலவாறாக உவமிக்கப்படுகின்றது. முதிரும் பருவத்தில்பூ நன்றாக சிவந்து காணப்படுவதால் குருதியின் நிறத்தோடு ஒப்பிடப்படுகின்றது “குருதிப் பூவின் குலைக்காந்தட்டே”என்றும், “காந்தட் குருதி யொண்பூ” என்றும்,“குருதியொப்பின் கமழ்பூங் காந்தள்” (குறுந்தொகை, 1 : 4; நற்றிணை, 34 : 2-3 மற்றும் 399 : 2) என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கு நல்ல மணமுண்டு. “நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்” என்று ஐங்குறுநூறு(262:2)கூறும். காந்தட்கொடி குறிஞ்சி நில மக்கள்தம் வீடுகளின் வேலியோரங்களிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து, நிமிர்ந்து, அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். செங்காந்தள் மொட்டுக்கள் நள்ளிரவில் மலரும். அது விளக்கைப் போன்று காட்சியளிக்கும்.
“துன் அருங் கூர்இருள்,
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழுமடற் புதுப்பூ ஊதும் தும்பி
நல்நிறம் மருளும் அருவிடர்”
(அகநானூறு, 138 : 16-19)
என வரும் கூற்று இதற்குச் சான்றாகிறது.
காந்தள் மலர் மொட்டாக இருக்கும்போது குவிந்து நீண்டிருக்கும். இதனாலேயே அது கைவிரலுக்கு உவமையாக அமைகிறது.‘மணிக்காந்தள் மெல்விரல்கள்’எனச் சிலப்பதிகாரம் (கானல் வரி, 1) கூறும். புறநானூறு, ‘காந்தள் முகைபுரை விரல்’ (வரிகள் 8-9) எனக் காந்தள் முகையினை விரலுக்கு ஒப்புமையாக்கிக் கூறுகின்றது. ‘காந்தள் மெல்விரல்’ என்று குறுந்தொகை(167:1) குறிப்பிடுகிறது. காந்தள் மலர் மனிதக் கையைப் போலவே இருக்குமாம்.‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரைப் பெண்களின் விரலுக்கு ஒப்பிடுகின்றனர். காந்தள் பூக்கும் காலத்தில் நாள்தோறும் புதிய பூக்கள் மலர்வதும் ஒரே செடியில் பல பருவ நிலைகளில் பூக்கள் காணப்படுவதும் உண்மையே. நுனி சிவந்து காந்தள் மொட்டு விரியும்போது இரத்தம் தோய்ந்த யானைத் தந்தம் போன்று காட்சியளிப்பதை,
“கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்”
என்று நற்றிணையும்,
“புகர் நுதல் புண்செய்த புய்கோடு போல
உயர்முகை நறுங்காந்தள் நாள்தோறும் புதிது ஈன”
என்று கலித்தொகையும் கூறுகின்றன ( 6. நற்றிணை, 294 : 6-7; கலித்தொகை, 53 : 4-5). இதன் இதழ்கள் நீண்டு காணப்படுவதால் மலர்ந்த மலர், கை விரித்தது போலத் தோற்றமளிக்கிறது. காந்தள் மலரின் இதழ்கள், உடைந்த வளையல் துண்டுகள் போலத் தோற்றம் தருகின்றன. இதனை,
“கைபோல் பூத்த கமழ்குலைக் காந்தள்” ( பரிபாடல், 19 : 76)
“செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்” ( சிறுபாணாற்றுப்படை, வரி 167)
“வளை உடைந்தன்னவள்இதழ்க் காந்தள்” (மலைபடுகடாம், வரி 519)
என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
காந்தள் மலர் நன்றாக விரிந்ததும் துடுப்புப் போன்று காட்சி தரும். இதனை,“காந்தள் நீடுஇதழ் நெடுந் துடுப்பு”என்றும்,பூக்கும் காலத்தில் பல நீண்ட காம்புகளில் பூக்கள் தோன்றுவதால் “பல் துடுப்பு எடுத்த அலங்குகுலைக் காந்தள்” என்றும் அகநானூறு (பாடல் 78 : 8-9 மற்றும் 108 :15) கூறுகின்றது. “காந்தள் கமழ்குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்” என்றும், “அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து”என்றும் நற்றிணையில் ( பாடல், 185 : 8 மற்றும் 313 : 6-7 கூறப்பட்டுள்ளது.
காந்தள் பூவுக்குத் தெய்வத் தன்மை உண்டு என்ற கருத்தில், இதனை வண்டுகள் மொய்த்ததில்லை என்று ஒரு கொள்கையும் உண்டு.
“மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறைத் தும்பி சூர் நசைத்தா அய்
பறை பண்அழியும்”
என்று பதிற்றுப்பத்து (.திருமுருகாற்றுப்படை, வரி 43; பதிற்றுப்பத்து, 67 : 19-21) கூறுவதைக் காணலாம். குலையாக மலர்ந்திருக்கும் காந்தள் கைகூப்பித் தொழுவதைப் போன்று தோற்றம் அளிக்கிறதென்று கூறுவர்.
“காந்தள்அம் துடிப்பின் கவிகுலை அன்ன
செறிதொடி முன் கை கூப்பி” ( பட்டினப்பாலை, வரிகள் 153-154)
“கொடிச்சியர் கூப்பி வரைதொழு கைபோல்,
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்” ( கலித்தொகை, 40 : 11-12
காந்தள் பூவின் இதழ்கள் வாடியவுடன் உதிர்ந்து விடுகின்றன. மலரிதழ்கள் வாடிய காட்சி பாம்பு பை அவிந்ததுபோலத் தோன்றுவதை,
“பாம்புபை அவிந்ததுபோலக் கூம்பி,
கொண்டலின் தொலைந்த ஒண்செங்காந்தள்”
என்று குறுந்தொகை(குறுந்தொகை, 185 : 5-6) விளக்குகிறது.
வண்டுகள் மொய்க்காத ஒளியுள்ள பூ காந்தள் பூ. அப்பூவாலாகிய பெரிய, குளிர்ச்சியுள்ள தலைமாலையைத் தலையில் சூடியவன் முருகன் என்பதை,
“சுரும்பு மூசாச் சுடர்ப் பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்”
என்று திருமுருகாற்றுப்படை (வரிகள் 43-44) சுட்டுகின்றது.
கரிகாலனுக்குரிய நெய்தல் நிலப் பாக்கத்தில் வளமையான காந்தள் மலர்களும்,சுரபுன்னை மலர்களும் இருந்ததை,“கொழுங்காந்தள், மலர் நாகத்து, துடிக்குடிஞை குடிப்பாக்கத்து” என்ற பாடல் வரிகள் (பொருநராற்றுப்படை, வரிகள் 209-210) உணர்த்துகின்றன. திருச்சிராப்பள்ளிக் குன்றின் சாரலில் காந்தள் பூத்ததாகக் கூறப்படும்தெளிவான செய்தியொன்றை அகப்பாடலில் காண்கிறோம்.
“கறங்குஇசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்
போது அவிழ் அலரின் நாறும்” (அகநானூறு, 4 : 14-16 )
திருவெஃகா என்ற ஊரில் உள்ள அத்தி மலையில் திருமால் பாம்பணைப் பள்ளியில் கிடக்கின்றான். இக்காட்சி, நீண்ட உயர்ந்த பூங்கொத்துகளைக் கொண்டகாந்தள் செடியின் மேல் ஓர் ஆண்யானை படுத்துக்கிடப்பது போல் தோன்றியதை,
“நீடுகுலைக்
காந்தள்அம் சிலம்பில் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்”
என்று பெரும்பாணாற்றுப்படை (வரிகள் 371-373) நயம்படக் கூறுகின்றது.

மழையில் செழித்த செங்காந்தள் செடியில் தோன்றிய அரும்புகள் பருந்துகளுக்கு இறைச்சித் துண்டங்களாக தோன்றின. ஆனால் அவை இறைச்சித் துண்டங்கள் அல்ல என்று தெரிந்ததும் அவற்றைச் சிதறின. நெருப்பினை ஒத்த காந்தளின் பல இதழ்கள் வெறியாடும் களத்தைப் போன்று அகன்ற பாறைகள் தோறும் வீழ்ந்து பரவிக் கிடந்தன. மணம் கொண்டிருந்ததால் திருமண வீடு போலவும் இருந்ததை,
“தீயின் அன்ன ஒண் செங் காந்தள்
தூவல் கலித்த புதுமுகை ஊன் செத்து
அறியாது எடுத்த புன்புறச் சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பின் அன்ன பல்இதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியல்அறை தோறும்
மணஇல் கமழும் மாமலைச் சாரல்”
என்று மலைபடுகடாம் ( வரிகள் 145-147) காட்டுகின்றது.
சோலையைக் கொண்ட மலைத்தொடர் நள்ளி என்ற வள்ளலுக்கு உரியது. அச்சோலையில் வண்டுகள் தேன் உண்டதால் விரிந்த, முருகனுக்குரிய காந்தள் மலராலும், வியப்புக்குரிய வேறுபல மலர்களாலும் மணம் வீசுவதை,
“ . . . . . . . . . . . நள்ளி
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுள் காந்தள் உள்ளும் பலவுடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி” (அகநானூறு, 152 : 15-18)
என்று அகநானூறு உணர்த்துகின்றது.
காந்தளின் வளமான அரும்புகள் தாமே மலரும் வரை காத்திருக்காமல் வண்டுகள் அவற்றைக் கிண்டித் திறக்குமாம். இதனை,
“காந்தள்அம் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும்”
என்று குறுந்தொகை (வரிகள் 265 : 1-2) பாடுகின்றது.
காந்தள் கொடியின் தண்டு பசுமையானது. வலுவில்லாதது. இக்கொடி,10 முதல் 20 அடிவரை வளரும். கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும்.
source : tamizhtharakai.wordpress.com