கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 5

குறிஞ்சி

குறிஞ்சிமலர்

கடல் மட்டத்திற்கு ஆறாயிரம் அடிக்கு மேற்பட்டுள்ள இடத்தில் இயற்கையில் காணக்கூடிய செடி குறிஞ்சிச் செடியாகும். பிறசெடிகளுக்கு அத்தகைய வரையறை இச்செடிக்கிருப்பதுபோல்  கிடையாது. ஆறாயிரம் அடிக்கு மேற்பட்ட நிலம், மலையும் மலைசார்ந்த பகுதியாகத்தான் இருக்கும். இத்தன்மையின் அடிப்படைக் காரணத்தாலேயே, மலையையும் மலை சார்ந்த இடத்தையும் இச்செடியின் பெயரால் அழைத்தனர்.

இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது இச்செடியின் பூவின் தனித்தன்மையாகும். இச்செடி ஒன்பது ஆண்டுகளிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைச்சாரலில் கூட்டங்கூட்டமாகப் பூக்கும்.

இயற்கையில் இத்தகைய வியப்பிற்குரிய பூ வேறின்மையால் மலையிலும், மலைசார்ந்த இடத்திலும் காணப்படும் இந்தப் பூவின் பெயராலேயே இந்த இடத்தை அழைத்தனர். இயற்கையின் எத்தனையோ அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி மலர். ஒரே நாளில் இரண்டுமுறை பூக்கும் தாவரங்கள் ஒருபக்கம்; பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மறுபக்கம். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் மத்திய இந்தியாவிலும் இச்செடி காணப்படுகின்றது. நீலகிரி மலையிலும், பழனி மலையிலும், கோடைக்கானல் மலையிலும் பல ஆண்டுகளாக இச்செடி பூக்கும் காலத்தைக் கண்டுவைத்திருக்கின்றனர். இது முதன்முதலில் நீலகிரி மலைப்பகுதியில் மட்டும் மலர்ந்திருந்ததால் இதற்கு நீலகிரி யேந்தஸ் (Nilgrianthus) என்ற சிறப்புப் பெயர் உண்டு.

மணிபோன்ற வடிவம்கொண்ட குறிஞ்சி மலர்கள் மலைச்சரிவுகளில் பூத்துக் குலுங்கி, மலைப்பகுதிகளுக்குப் புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக் குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், மேற்குத் தொடர்ச்சிமலைத்தொடரின் முக்கிய பகுதிக்கு நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது என்பர்.

உலகம் முழுக்க இருநூறுக்கும் மேற்பட்ட குறிஞ்சி மலர் வகைகள் உள்ளன. அவற்றில் நூற்றைம்பது வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மேற்கு மலைத்தொடரிலேயே வளருகின்றன. தமிழக  வனப்பகுதிகளில் காணப்படும் குறிஞ்சி இனச் செடிகளைக் கண்டறிந்து, அவற்றைப் பாதுகாக்கும் பணியைத் தோட்டக்கலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிஞ்சித் தேன்

இந்தப் பூவில் நிறையத் தேனுண்டு. தேன் மிகவுடையதாக அறிஞர்கள் கூறும் பூக்களில் இதுவுமொன்று. பல்லாயிரக்கணக்கான பூக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றுவதால் தேன்மலிந்து போய்விடுகின்றது. அதனால் தேனீக்கள் மலைச்சாரல்களில் பெரியபெரிய தேன்கூடுகளை நிறையக் கட்டுகின்றன.

இதைக் கண்டே சங்கப் புலவரொருவர், “கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு, பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே” என்று பாடினார். ‘குறிஞ்சிப் பெருந்தே னிறால்’ என்று கலித்தொகையும் கூறுகிறது. குறிஞ்சிப் பூவின் தேனை மிக இனியதெனக் கருதினர். “கருங்கோற் குறிஞ்சி  மதன் இல் வான்பூ,……… நாறுகொள் பிரசம் ஊறு நாடற்கு” என்ற நற்றிணைப் பாடலில்(268:3,5) குறிஞ்சித் தேனின் இனிமை கூறப்பட்டிருக்கின்றது.

குறிஞ்சிப் பூவின் தேனை மிகவுயரியதாகக் கருதியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பொதுவாகத் தேன்கூடுகளில் பலவகைப் பூக்களின் தேன் காணப்படும். ஆனால் குறிஞ்சிப் பூக்களின் தேனால்  இழைக்கப்படும் கூட்டில் பிறபூக்களின் தேன் கலப்பதில்லை. ஏனெனில் குறிஞ்சிச்செடி பூக்க ஆரம்பித்தால் தேனீக்கள் குறிஞ்சித் தேனையே கூடுகளில் சேர்க்கின்றன. இத்தகைய தேனைத் ‘தனிப் பூந்தேன்’(Unifloral Honey) என்று அறிஞர்கள் அழைக்கின்றனர்.

குறிஞ்சித் தேனின் அருமை பெருமைகளைத் தமிழர் மட்டுமன்றிப் பிற பழங்குடி மக்களும் அறிந்திருந்தனரென்று தெரியவருகின்றது. குறிஞ்சிச் செடி பூக்கும் காலத்தில் நடு இந்தியாவிலும், அந்தமானிலும் உள்ள பழங்குடி மக்கள் தேன்விழாவே கொண்டாடுகின்றனர்.

டாக்டர் வெரியர் எல்வின்(Dr. Verrier Elwin) என்ற அறிஞர் பழங்குடி மக்களைப் பற்றிப் பல ஆராய்ச்சிகளை வெளியிட்டிருக்கின்றார். சூடுநாகபுரியில் வாழும் பைகர்கள் (Baiga) என்ற இனத்தாரைப் பற்றியும் எழுதியுள்ளார்.

அவர் சொல்வதாவது : “குறிஞ்சிப் பூக்கள் கூட்டம் கூட்டமாகப் ஒன்பதாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அப்பொழுது பைகர்கள் தேனீவிழா கொண்டாடுவர். விழாமுடிவு நாளில் மலைத் தேனைச் சடங்குகளுடன், நடனத்துடன் உண்பர்”.

பைகா பழங்குடி நடனம்

இச்செடியை இம்மக்கள் ‘மேர்கடே, ஆமெரா’என்று அழைப்பதாகக் கூறுகிறார். பைகர்கள் இச்செடியில் ஆண்-பெண் வேற்றுமைகூடப் பார்க்கின்றார்களாம். இச்செடியைப்பற்றிச் சில புராணக்கதைகள்கூட இவர்களிடையே வழங்குகின்றனவாம். தேனீவிழாக் காலத்தில் கூடைகூடையாகக் குறிஞ்சித் தேனடைகளைச் சேகரித்துக்கொண்டு வந்து ஆடவரும், பெண்டிரும் தீயைச் சுற்றி நடனமாடுவார்களாம். குறிஞ்சிச் செடிகளைத் தலையிலும், இடுப்பிலும் செருகிக்கொண்டு ஆடுவார்களாம்.

நீலகிரியில் தோடர்கள் தங்கள் குழந்தைகளின் வயதைக் குறிஞ்சிச்செடி பூப்பதைக் கொண்டே கணக்கிடுகின்றனராம். பழங்குடி மக்களின் வாழ்க்கைப்பண்பாட்டுடன் குறிஞ்சிமலர் பல்வேறு வகைகளில் பின்னிப் பிணைந்துள்ளது. பழங்குடிகள் இந்த மலரை அன்பின் அடையாளமாகவும், இவை பூக்கும் காலத்தை நல்லகாலமாகவும் கருதுகின்றனர். காலங்காலமாக தமிழ்க் கடவுளான முருகனின் மலராகக் குறிஞ்சிமலர் கருதப்படுகிறது. எப்பொழுதாவது அரிதாக நிகழும் நல்ல நிகழ்ச்சிக்கு உவமையாகத் திகழ்கிறது குறிஞ்சி மலர்.

குறிஞ்சிச்செடி எப்படிப் பழங்குடி மக்களையும், பழந்தமிழரையும் கவர்ந்ததோ, அதுபோலவே நீலகிரியிலும் கோடைக்கானலிலும் வாழ்ந்த வெளிநாட்டாரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது. இரண்டு நூற்றாண்டுகளாக இதைப் பற்றிய நாட்குறிப்பும் (Diaries) எழுதியுள்ளனர். இச்செடியின் பூவைப் படம்வரைந்தும் பாடம் செய்தும் வைத்திருக்கின்றனர்.

குறிஞ்சிச்செடி இனங்கள்

குறிஞ்சிச் செடியில் பல இனங்கள் உள்ளன. அதில் ஓரினம் (Strobilanthes Walliechi) விளையும்போது பிறசெடிகளை வளரவிடாது அழுத்திவிடுமாம். மலைச்சாரலில் குறிஞ்சிச் செடியைத் தவிர பிறசெடிகளைக் காணமுடியாதாம். இந்தச் செடி வளர்வதும் தனிப்பட்ட முறையாகும்.  ஆண்டுதோறும் இளவேனிலில் குருத்துத் தோன்றும். பல கணுக்கள் விட்டு வளரும். இக்குருத்து, ஆண்டிறுதியில் கீழ்க்கணுவைத் தவிர்த்து முழுவதும் அழிந்துவிடுமாம். இம்முறையில் ஒவ்வோரு ஆண்டும் கீழ்க்கணுவை விட்டுப் பிற கணுக்கள் அழ்ந்து போவதால் இச்செடியின் வயதைப் பழைய கணுக்களின் எண்ணிக்கையைக் கொண்டு சொல்லிவிடலாம்.

குறிஞ்சிச் செடியில் 28 இனங்கள் ஈழத்தில் காணப்படுகின்றன. பர்மாவிலும், அசாமிலும் காணப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அவை சிறப்புடையனவாகக் காணப்படுகின்றன என்று செடி நூலறிஞர்கள் கருதுகின்றனர். ஏனெனில் வேறெங்கும் அவை செழிப்பாகவும் பெரியதாகவும் தமிழ் நாட்டில் வளர்வதுபோல் இருப்பதில்லை.

குறிஞ்சிப் பூக்களின் நிறம்

குறிஞ்சி இனங்களில் பூக்களின் நிறம் மாறுபடுகின்றது. மிக அழகிய பூக்களையுடைய இனங்கள் பல ஆண்டுகளுக்கொரு முறையே பூக்கின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அறிவியல் அறிஞர்கள் இச்செடியை ‘மலைவாழ் புதர்ச்செடி’என வருணிக்கின்றனர். குறிஞ்சிப் பூவின் நிறங்களில் நீலநிறத்தையே தமிழர் போற்றினர். நீலக் குறிஞ்சிப் பூவையே நறுங் குறிஞ்சியாகக் கருதினர். அசாமில் வளரும் ஒருவகை நீலநிறக் குறிஞ்சிப் பூக்களை நீலச்சாயமிறக்குவதற்காக அசாம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

குறிஞ்சித்திணையில் குறிஞ்சிப்பண் தோன்றியது. குறிஞ்சிப் பண்ணில் தோன்றும் இராகங்களைக் குறிஞ்சி இனப் பூக்களின் நிறத்தால் பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். ‘மேகராகக் குறிஞ்சி’ என்பது ஓர் இராகம். இது மேக நிறம் (Grey) போன்று உள்ள குறிஞ்சிப் பூவின் நிறத்தால் பெயர் பெற்றது. பிற்காலப் பாடலொன்று குறிஞ்சிப் பூவைக் குங்குமத்திற்கு ஒப்பிடுகின்றது.“குறிஞ்சிப்பூங் கோதை போலும்குங்கும முலையினாடன்” என்று சீவக சிந்தாமணிப் (1568) பாட்டில் வருகின்றது. சிவந்த பூக்களுடைய குறிஞ்சி இனங்கள் பழனி, பீர்மேடு மலைகளில் காணப்படுகின்றன. பொன் வண்ணக் குறிஞ்சி என்ற இராகம் மஞ்சள் நிறக் குறிஞ்சிப் பூவைக் குறித்திருக்கலாம். செடி நூலிலும் குறிஞ்சிப் பூக்கள் பல நிறங்களை உடையனவென்று கூறப்பட்டிருக்கின்றது  (பி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் பக். 28 – 34).

இலக்கியங்களில் குறிஞ்சி மலர்

குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, மதுரைக்காஞ்சி, புறநானூறு, நற்றிணை, அகநானூறு, மலைபடுகடாம், பரிபாடல், திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பண்டைத் தமிழ் இலக்கியங்களில், ‘கருங்காற் குறிஞ்சி’ மலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நீலக் குறிஞ்சிக்குப் பதிலாக இந்த இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கருங்காற் குறிஞ்சி என்னும் மலரின் நிறம் வெள்ளை; குறிஞ்சியின் காம்பு கருமையான நிறமுடையது என்பதையும், அது தேனுடைய பூ என்பதையும் இவ்வரிகளால் அறியமுடிகிறது.

கருங்காற் குறிஞ்சிமலர்

“கருங்காற் குறிஞ்சி மதன் இல் வான்பூ,

ஓவுக்கண்டன்ன இல்வரை இழைத்த

நாறுகொள் பிரசம் ஊறு நாடற்கு  

(நற்றிணை, 268 : 3-5)

“இலங்கு வெள்அருவியொடு சிலம்பகத்து இரட்ட,

கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து”

“கார்மலர்க் குறிஞ்சி சூடி, கடம்பின்

சீர்மிகு நெடுவேட் பேணி, தழூஉப்பிணையூஉ” 

(மதுரைக்காஞ்சி, வரிகள் 299 – 300 மற்றும் 613 -614)

மணம் மிக்கதாய், இனிமையான தேனைப் பருகிய வண்டுகள் குறிஞ்சிப் பண்ணைப் பாடுகின்றனவாம். இதனைப் பெரிய திருமொழி (5:2:2),  “நறுந்தண் தீந்தேன் உண்ட வண்டு குறிஞ்சி பாடும்” என்று பதிவு செய்துள்ளது.

குறிஞ்சி கார் காலத்தில் மலரும் என்பதைக் ‘கார்மலர்க் குறிஞ்சி’ என்னும் தொடர் உணர்த்துகிறது.குறிஞ்சி மலரையும், குறிஞ்சி பூக்கும் மலை அடுக்கத்தையும் ,“கருங்கோற் குறிஞ்சி அடுக்கம்பாட” என்று புறநானூறு (பாடல் 374 : 8) கூறியுள்ளது.

source : tamizhtharakai.wordpress.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *