இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள் – பகுதி: இரண்டு

கால் கழுவுதல்.கிராமப்புறங்களில், வீட்டிற்கு வெளியில் சென்று வருகிறார்கள், ஒரு திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள நீரால்.கை, கால், முகம் ஆகியவற்றை கழுவிய பின்னரே வீட்டிற்குள் நுழைவர். துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருபவர்களும் அவ்வாறு செய்வர் ஆனால் பொதுவாக கால் கழுவுதல் என்று கூறுவர் (இரண்டு சொற்களுக்கும் நடுவில் இடைவெளி உண்டு). அதேபோல், கழிப்பிடம் சென்று வருபவர்கள் ஒரு மறைவிடத்தில் தங்களை சுத்தம் செய்து கொள்வதாகவும் கால் கழுவுதல் என்று குறிப்பிடப்படும் (சொற்களுக்கு நடுவில் இடைவெளி இல்லை)

நன்றாகக் கால் கழுவி விட்டு வா என்று பெரியவர்கள் சிறியவர்களுடன் கூறுவது வழக்கம். இங்கு, வெளியே என்பதுவும், கால் கழுவு என்பதுவும் இடக்கரடக்கலாக வேறு பொருளைக் குறிப்பது அறிவோம். எனவே, கால் கழுவுதல் என்பது சுத்தப்படுத்தல் அல்லது அசிங்கங்களை கழுவி அகற்றுதல் என்ற கூடுதல் பொருளைப்பெறுகிறது. இப்போது இக்காட்சியைப் பாருங்கள் திறந்த வெளியான ஒரு முல்லைக் காட்டில் மழை பெய்கிறது. ஆனால் வெள்ளம் ஓடைகளில் பெருக்கெடுக்கிறது. அவ்வாறு வரும் முதல் வெள்ளம், ஓடையில் உள்ள கழிவுகளை அடித்துக் கொண்டு போகிறது. அசுத்தங்கள் அகற்றப் பெற்ற ஓடை வெள்ளம் வடிந்த பின் சுத்தமாகக் காட்சியளிக்கிறது. இதனைப் பார்த்த புலவர் கூறுகிறார் புனல் கால் கழீஇய மணல் வார் புறவில் மலை படுகடாம் வெள்ள நீர் தூய்மைப்படுத்தும் மணல்பரப்பு (ஆங்காங்கே) நீண்டு கிடக்கும் முல்லை நிலத்தின் கண் என்பது இதன் பொருள்.வெள்ள நீர் ஓடையின் அசுத்தங்களை அகற்றியது என்று கூற வந்த புலவர், இதனை, வெள்ளம் ஓடைக்கு கால் கழுவி விட்டது என்று கூறும் நயம் வியந்து போற்றுதற்குரியது. புனல் கால் கழீஇய பொழில் தொறும் என்ற பெரும்பாணாற்றுப்படை(380) அடியில் இந்தப் பயன்பாட்டை காணலாம். ஓர் இடக்கரடக்கல் சொல்லைக் கூட, இலக்கிய நயம் பட கையாளும் சங்கப் புலவர்களின் திறம் எண்ணி எண்ணிப் பாராட்டுக்குரியது. அன்றைய இலக்கிய வழக்கும் இன்றைக்கும் தமிழ் மக்களிடம் பேச்சு வழக்காகும் இருப்பது விந்தையான செய்தி அன்றோ.

முனைவர்.ப.பாண்டியராஜா முன்னாள் துணை முதல்வர், தலைவர்,கணிதத் துறை இயக்குநர், கணினித்துறை. அமெரிக்கன் கல்லூரி, மதுரை

வழக்கு என்பது ஒரு சமூகத்தின் மொழி வழங்கும் முறை அல்லது சொல்லாட்சி எனலாம். இந்த வழக்குகளை இலக்கியத்திலும் பேச்சிலும் காணலாம். அதுகுறித்த ஒரு குறுந்தொடர். பகுதி:இரண்டு

குறுந்தொடர்

குறுந் தொடர்கள்

தமிழர்

தமிழர் பெருமை

தமிழர் வரலாறு

நாகரிகம்

ப.பாண்டியராஜா

வாழ்வியல்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *