ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓசூர்: ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் அரிய வகை பாறை கல்வெட்டு மற்றும் நடுகல் தொகுப்பு கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், சிவகுரு மற்றும் வெங்கடாசலபதி ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஓசூர் அருகே படுதேப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட நடுகல் தொகுப்பு மற்றும் பாறை கல்வெட்டு, பழமையான கோட்டை சுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழுவினர் கூறியதாவது: படுதேப்பள்ளியில் சுமார் 10 அடி உயரமுள்ள இரண்டு சிற்ப தூண்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மாரியம்மனாக வணங்கி வருகின்றனர்.

இதே பகுதியில் கோட்டையின் நுழைவு வாயில் போன்ற அமைப்பும் உள்ளது. இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும், மண்ணாலான கோட்டை மற்றும் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் கோயிலும் உள்ளது. தெலுங்கு மொழியில் 6 வரிகள் கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. இது, படித்து உணர முடியாத அளவிற்கு சிதைந்துள்ளது. மேலும், 13 மற்றும் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நடுகல் தொகுப்பும் காணப்படுகிறது.

போர் வெற்றியை கொண்டாடும் வகையில், 2 வீரர்கள் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பிடித்து, மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் நடுகல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பாம்பு கடித்து உயிரிழந்த போர் வீரனின் நடுகல்லும் உள்ளது. அதன்படி, இப்பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்தது தெரிய வருகிறது. இங்குள்ள கரியலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. கோயிலுக்குள் இருப்பதால் இந்த கல்வெட்டுகள் பாதுகாப்புடன் காணப்பட்டாலும், வெளியில் உள்ள கல்வெட்டுகள் சிதிலமடைந்த நிலையில், பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இதனை சீர்செய்து வருங்கால சந்ததியினர் பார்வையிட வசதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

source : dinakaran.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *