கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 12
- செருந்தி

ஒரு வகை கோரை இனத்தைச் சார்ந்தது. இதனை, ‘வாட்கோரை’, ‘நெட்டிக்கோரை’ என்று நச்சினார்க்கினியரும்,. ‘பஞ்சாய்க்கோரை’, ‘தண்டாங்கோரை’ என உ.வே.சா.வும் வழங்குவர். மணம் வீசும் செருந்திமலர்கள் பொன்னிற வண்ணத்துடன் காட்சியளிக்கும்.
இப்பூவை நெய்தலுடன் சேர்த்துக்கட்டி மாலையாக அணிந்துகொள்வர்.
“நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்” –ஐங்குறுநூற்றுப் பாடல் (182 : 1-2).
கண்டார் பொன் என்று மருளச் தோன்றும் செருந்தி என்பதை, “தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்” என்று சிறுபாணாற்றுப்படையும் (வரி 147), வண்டுகள் மொய்த்தலால் விரிந்த செருந்தி என்பதை,“வண்டுபட விரிந்த செருந்தி” என்ற அகப்பாடலும் (240 : 12-13), நெடிய காட்டின்கண் அரும்புமலர்ந்த செருந்திப் பூக்களின் மணம் கமழ்வதை,“அரும்பு அலர் செருந்தி நெடுங்கால்மலர்கமழ்” என்ற பாடல் வரியும் (390 : 3) காட்டுகின்றன.
நல்ல மஞ்சளில் இதழ்கள் செய்து, அதை அழகுற அருகருகே அடுக்கி வைத்ததுபோல மொட்டும் மலர்களும் கொத்துக்கொத்தாய் மலர்ந்திருக்கும். செருந்தி பொய்கையில் புதர் புதராக வளரும். கடற்கரை மணல் மேடுகளில் ஞாழல் பூவும், செருந்திப் பூவும் மணம்பரப்பும். செருந்திப்பூவின் கால் செந்நிறம்கொண்டது. செருந்தி வண்டு அருந்தும் தேன் உள்ள மலர். இதன் விதைகளுக்கான அமைப்பு மாறுபட்டது. சிறுகுவளை போன்ற சிவந்த அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் அழகிய விதைகள் காணப்படும். விதைகள் முதலில் பச்சை நிறத்தில் இருக்கும்; முற்றுகையில் மாறும்.
- அதிரல்

அதிரல்கொடி மரத்தில் படரும். இதன் பூக்கள் பூனைப் பற்கள் அளவில் இருக்கும். ஆற்றுமணலில் கொட்டிக்கிடக்கும். இதனை ஆடவரும், மகளிரும் தனியாகக் கட்டியும், பிற பூக்களோடு சேர்த்துக்கட்டியும் அணிந்து கொள்வர்.
இதனைப் ‘புனலிப் பூ’ என்று நச்சினார்க்கினியரும் (முல்லைப்பாட்டு 51 உரை), ‘காட்டு மல்லிகை’ என்று அரும்பதவுரையாசிரியரும், ‘மோசிமல்லிகை’ என்று அடியார்க்கு நல்லாரும் (சிலப்பதிகாரம், 13 : 156 உரை) குறிப்பிடுகின்றனர். இது இளவேனிற் காலத்தில் மிகுதியாக மலரும்.
‘முதிரா வேனில் எதிரிய அதிரல்’ என்று நற்றிணை (337 : 3) பாடுகிறது. அதிரல் மொட்டின் வடிவம் கூர்மையாகவும், நீட்சியுடையதாகவும் இருப்பதை ‘குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல்’ என்ற புறப்பாடலால் (269 : 1) உணரலாம். வெண்மைநிறமாக விளங்கும் அதிரல் மொட்டுக்களின்மீது மெல்லிய வரிகள் காணப்படும். அவை வெருகின் கூரிய எயிறுகளைப் போன்றிருக்கும் என்பதை,
“பார்வல் வெருகின் கூர்எயிற்று அன்ன
வரிமென் முகையநுண்கொடி அதிரல்”
என்றும், இம்மலர் இரவில்மலர்வதை,.
“எல்லிமலர்ந்த பைங்கொடி அதிரல்
பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
கான யானை கவளம் கொள்ளும்”
என்றும் அகப்பாடல்கள் (391 : 1-2 மற்றும் 157 : 6-8) காட்டுகின்றன.
மழைத் தூறலுடன் வீசுகின்ற காற்றில் அதிரல் பூக்கள் பூத்த சிறுசெடிகள் அசைந்தாடுவதை, “அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்” என்று முல்லைப்பாட்டு (வரி 51) குறிப்பிடுகிறது. இளவேனில் விருப்பத்திற்குரிய பருவம். அப்பருவத்தில் மகளிர் கூந்தல் போன்று நெளிநெளியாக ஆற்று ஓரக் கருமணல் அமைந்திருக்கும். அம்மணலில் புனலிக் கொடி தன் புதிய பூக்களைப் பரப்பி இருந்த காட்சியை,
“புதுப்பூ அதிரல் தாஅய்க்
கதுப்பு அறல்
அணியும் காமர் பொழுதே”
என்று ஐங்குறுநூறு (345 : 2-3) காட்டுகிறது.
மணமில்லா இப்பூ காட்டு மல்லிகை எனப் பேச்சுவழக்கில் சொல்லப்படும்
- சண்பகம்
சண்பகமரம் மணல் பாங்கான இடத்தில் நன்கு வளரும். மற்ற வளமான இடங்களில் அழகுக்காக பூங்காக்களிலும், தோட்டங்களிலும் வளர்ப்பார்கள். நட்ட மூன்று ஆண்டுகளில் பூக்கத் துவங்கும். சண்பகம் இளவேனிற் காலத்தில் மலர்கின்ற மலர். இது மணமும், குளிர்ச்சியும் உடையது.

இதனை, ‘மணம் கமழ் சண்பகம்’, ‘பெருந்தண் சண்பகம்’ (பரிபாடல், 12 : 77 மற்றும் குறிஞ்சிப்பாட்டு, வரி 75) என்று இலக்கியங்கள் விவரிக்கின்றன. இது ஒரு காட்டு மலராகும். சண்பகத்தில் களிம்பு நிறம் முதல் மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் வேறுபாடுகள்கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்படுகின்றன. தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் இதனை ஒத்த இனங்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பினங்கள் காணப்படுகின்றன.
சண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவில் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும், பெண்களும் இப்பூக்களை அழகுக்காகவும், இயற்கையான நறுமணத்திற்காகவும் தலையில் சூடிக்கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் கமழ்வதற்காக நீர்ப் பாத்திரங்களில் இடப்பட்டு வைக்கப்படுகின்றன. மணவறைக் கட்டில்களிலும், மணமாலைகளிலும் இப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெண்கள் கூந்தலில் சூடிக்கொள்ளும்போது தனியொரு பூவே சூடப்படுகிறது; சில வேளைகளில் கொத்தாகவும் சூடப்படுகிறது. மிக அரிதாகவே இம்மலர் மாலைகள் அணியப்படுகின்றன. மணவறைக் கட்டில்களை அலங்கரிப்பதில் மல்லிகையும், ரோசாவையும் போன்றே இம்மலர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
நறுமணத்தின் காரணமாக இது, ‘களிப்புறு நறுமணமரம்’ என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் நறுமணத் தயாரிப்பாளர்கள் சண்பகப் பூவைக் கொண்டு நறுமணப் பொருளைத் தயாரிக்கின்றனர்.
சண்பகம் பிறப்பிடம் இந்தியா. இது மற்ற நாடுகளான அமெரிக்கா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, சீனா, மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்குப் பரவிற்று. இதனைத் தல மரமாகக் கோயில்களில் வளர்த்து வருகிறார்கள். இது விதை மூலமும், ஒட்டுக்கட்டுதல் மூலமாகவும் இன விருத்தி செய்யப்படுறது.
இலக்கியங்களில் சண்பகம்
சூர மகளிர் தம்மை அலங்கரித்துக்கொண்ட மலர்களில் சண்பக மலரும் இடம் பெற்றதை, ‘பெருந்தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு’ என்று திருமுருகாற்றுப்படை (1: 27) சுட்டுகிறது. ஆதிரை நாளினையுடைய சிவபெருமான் திருமார்பு அழகுபெற, மலர்ந்த பெரிய குளிர்ந்த சண்பகம் என்று கலித்தொகை (150 : 20-21) பாடுகிறது. இதனை இப்பாடல் வரிகளால் அறியலாம்.
“அரும்பெறல் ஆதிரையான் அணிபெறமலர்ந்த
பெருந்தண்சண்பகம்போல”
திருமருதத்துறையில் பல்வகைமலர்களொடு சண்பக மலரையும் அருவி நீர் கொண்டு வந்து சேர்த்ததை, ‘வண்டு அறைஇய சண்பக நிரை தண்பதம்’ என்று பரிபாடல் (11 : 18) சுட்டுகிறது.
வையையின் வெள்ளத்தில் வரும் பல்வேறு மலர்களின் வரிசையைக் கூறவந்த புலவர், ‘மல்லிகை, மௌவல், மணம் கமழ் சண்பகம்’ (மேலது, 12 : 77) என்று சண்பகமலரையும் குறிப்பிடுகிறார்.
செண்பக மலரின் சாரமான தேனை உண்டு, இன்புற்று இசை பாடும் குயில் என்பதை,
“கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடும் குயிலே”
என்று ஆண்டாள் (நாச்சியார் திருமொழி, 5 ; 2) பாடுகிறார்.
source : tamizhtharakai.wordpress.com