அரிக்கமேடு : வரலாறு மறைத்த புதுவையின் சிறப்பு

பெயரைப்படித்தால் மிகச்சாதாரணமாக தோன்றும். ஆனால், எத்தனை நாடுகளுக்கு போனாலும் கிடைக்காத பெருமை ,பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று புதையல் தமிழகத்தின் கிழக்குக்கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பலவணிகத்தளங்கள் இருந்தன . அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு காவிரிப் பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ்சேர்க்கும் முகவரிப்பகுதியாக விளங்குகிறது. ஆங்கிலத்தில் அரிக்கமேடு என்னுமிடம், தென்இந்தியாவின் பாண்டிச்சேரியூனியன் பிரதேசத்தின அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும். சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து, இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின்கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலதுகரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில்,மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறுவளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு பிஞ்ஞோதெபெகெய்ன் என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் அத்ரான் சாமியார் வீடு என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, புதுச்சேரியில் இருந்த கிருத்து சபைக்கு சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும்,பிற்பகுதி முழுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும்,முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே மீட்டர்தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது. 1937-ஆம் ஆண்டு திரு.ழுவோதுய்ப்ரேய் என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார்.

இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறுசிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும் பளபளக்கும் பல்வகைக்கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர்.

திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப்பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டு வந்துகொடுப்பதில் ஆர்வம் காட்டினர் அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டியபகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப்பகுதியை அகழாய்வுவழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது. அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக்காட்சிகள் எதுவும் காணமுடியாதபடி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும்.

ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுகாப்பாக மூடிவிட்டனர். ஆனால், அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையேபழையபானை ஓடுகள்,செங்கல்,கட்டடச்சுவர் அமைப்புகளின் எச்சம், சிறுசிறுமணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம். தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர்நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது.

இப்பகுதியில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலமான, நீளமான கற்கள் இடம் பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக்கல் என நம்புவோரும் உண்டு.

பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச்சீற்றமோ, சமயமதப் பூசல்களோ, அயல்நாட்டினரின் படையெடுப்போ இவ்வூரின் பெருமையை அறியமுடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றிய போது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரிவந்தது. 1940 அளவில் அரிக்கமேட்டுப்பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளை நடகுழி தோண்டிய பொழுது மண்சாடி,மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944 இல் மார்ட்டின்வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன. அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள் அரிக்கமேட்டுப்பகுதியில் அகழாய்வு செய்துப்பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல்சுவர், ஈமத்தாழிகள், பலவண்ணமணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறுமணிகளை ஒத்துக்கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில்,கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. பதினொரு அடி ஆழத்தில் ஒருமண்டை ஓடும், பூனைக்கண்மணிகளும் கிடைத்துள்ளன. மணிஉருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்தஓடுகள், கோமேதகக்கல், பச்சைமணிக்கல், படிக மணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமானியகாசு, மோதிரம், உறை கிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும்.இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும்தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அரிக்கமேட்டுப்பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணிஉருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கிகாய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளன. இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்புமணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக்காசுகளும் செப்புக்காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன.

ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில அண்டியமகர் அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. கூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்தயவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன. எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்தகலைப்பொருள், மீன்முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன.சுடுமண்பொம்மைகளில் மனிதஉருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம்சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன. உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன.

ரோமப்பேரரசன் அகஸ்டஸ் தலைபொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு.இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்குவரை. அக்காலத்தில் அரிக்கமேடு சிறந்த வாணிபத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டுஅவ்விடம் 2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர்.

அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணிநெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்குவளையல் செய்தல், உருக்குமணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரியநகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பலசாயத் தொட்டிகள், உறைக்கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன. அரிக்கமேட்டில் உருக்குமணி செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந்தன்மையுடைய மணற்பொருட்களைச் சூளையிலிட்டு உருகச் செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊதுகுழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறுசிறு துண்டுகளாக வெட்டிமணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு,பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன.

அங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக்கிண்ணங்களும் கிடைத்துள்ளன. ஒளியூடுருவக்கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள் செய்தனர்.

நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலியகற்களைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டிப்பட்டை தீட்டித்துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும் போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் கடலில் கிடைக்கும் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப்பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்துவிடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர்.  அங்கே அருகன் (புத்தன்) சிலையுள்ளது. ஆதலால் அருகன் மேடு – அருக்கன்மேடு – அரிக்கன்மேடு – அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர்.இங்குள்ள புத்தர்சிலை பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்டதென்றும் அதனால் அது பர்மாக்கோயிலென வழங்கப்பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் பிர்மன்கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பௌத்தம் பரவியதென்பதற்கு இச்சிலையே சான்றாக உள்ளது. அயல்நாட்டார் குறிப்பிடும் புதுச்சேரி அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப்பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப்பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே பொதுகே என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக்குறித்துள்ளனர். பொது கேஎன்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலாபெக்லி,பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர். புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் பொதுகெ என்றும், எழுதிய நூலில் பொதுகா என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே போல், தமிழகக்கடற்கரையை டிரிமிக்கா எனவும், காவிரிப்பூம்பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு.முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவொருவணிகத்துறைமுகநகரம் இருந்ததைக் காட்டுகின்றன. சங்கஇலக்கியமும் புதுச்சேரியும் புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீரைவெளியனாரும், வீரைவெளியந்தித்தனாரும் பாடியபாடல்கள் இலக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ்இலக்கியங்களில் காலத்தாற் பழைமையானவை சங்க இலக்கியங்கள். அவை கி.மு. 500 ஆண்டுகளை மேல் எல்லையாக உடையன. அவற்றில் வீரைவெளியனார்,வீரைவெளியந்தித்தனார் என்னும் புலவர்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வீரைவெளி என்னும் ஊர், புதுச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூராகும். வீரர்வெளி என்ப தேவீரைவெளியென மருவியது என்பர். அப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இவ்விருபுலவர்களையும் கருத இடமுண்டு. வீரைவெளியனார்பாடல் அகநானூற்றில் முன்னூற்று இருபதாம் பாடலாகவும், வீரைவெளியன்தித்தனாரின் பாடல் அந்நூலில் நூற்று எண்பத்தெட்டாம் பாடலாகவும் காணப்படுகின்றன. இவ்விருவரும் ஒருவரேஎனக் கருதுவாரும் உண்டு. அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக்காக்கப்படும் அரிக்கமேட்டுப்பகுதியில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்வதால் பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழிவணிகத்தையும் நிலைநாட்டமுடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தை தொல்பொருள் குறித்து ஆய்வும் , குறிப்புகளை சேகரிக்கும் திட்டப்பணியிலும் செயல்பட்டு வருகிறேன். கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பூமிக்கு நெடுக புதைந்துள்ள ஒருமாபெரும் நகரம் அருகிலுள்ள ஆற்றிலும் மறைந்துள்ளது .

மேலதிக செய்திகள் விரைவில் பேசுபுக் பக்கம் :

தமிழ்தொகுப்பும் , குறிப்புகளும் ஜேரீபார்ன்

மனமார்ந்த நன்றி : முனைவர் இளங்கோ , திரு. இராச.தியாகராசன் , அறிஞர். சு.வேல் முருகன் அவர்கள் , பொறிஞர். பாலசுப்ரமணியன் அவர்கள் ஆச்சரியக்கத்தக்க புகைப்படங்கள்.

அரிக்கமேடு

சோழர்கள்

தமிழர் வரலாறு

தொல்பொருள்

புதுவை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *