இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்: குறுந்தொடர்
இன்றைக்கும் வாழும் சங்கவழக்குகள் வழக்கு என்பது ஒரு சமூகத்தின் மொழி வழங்கும் முறை அல்லது சொல்லாட்சி எனலாம்.இந்த வழக்குகளை இலக்கியத்திலும் பேச்சிலும் காணலாம். பேச்சில் காணப்படுவது பேச்சு வழக்கு. சங்ககால மக்கள் எவ்விதம் பேசினார்கள் என்று அறியமுடியாது. ஆனால் அவரின் எழுத்து வழக்கை அறியப் பல நூல்கள் இருக்கின்றன. சில வழக்குச் சொற்கள் அன்றைய சூழ்நிலையில் சில குறிப்பிட்ட பொருளைத் தாங்கி நிற்கின்றன. இன்றைய வழக்கில் அச்சொற்களைக் கலைச்சொற்கள் எனலாம். சங்ககாலத்தில் இருந்த அத்தகைய சிலவழக்குகள் இன்றைக்கும் வழக்கிலிருப்பதைக் காண முடிகிறது. அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம். கூட்டாஞ்சோறு – கூட்டுணவு பலபேர் சேர்ந்துகூட்டாக ஆக்கி உண்ணும் சோறு என்பது இதன் பொருள். ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் கிராமப்புறங்களில் ஆரம்பப்பள்ளியில் படித்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமான சொல் இது. ஏதேனும் ஒருநாளில் ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் ஒவ்வொரு வரும் தத்தம் வீட்டிலிருந்து பல்வேறு சமையல் பொருள்களைக் கொண்டு வர, அவற்றை மொத்தமாகப் போட்டு ஒன்றாக ஆக்கி, அனைவரும் வட்டமாக அமர்ந்து சாப்பிடுவது அந்நாளையப் பள்ளிகளில் வழக்கம். ஊர்களில் ஒரே தெருவில் வசிப்பவர்களோ அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ கூட்டாஞ்சோறு ஆக்கி உண்பதும் வழக்கம் மலைகளில் வாழும் வேடவர்கள் பலர்சேர்ந்து முயல் வேட்டையாடுவது வழக்கம். அவ்வாறாகப்பலர் சேர்ந்து முயல்களை வளைத்துப் பிடித்து, அவற்றைக் கொன்று சமைத்து, ஒன்றாக அமர்ந்து உண்ணும் ஒரு காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை என்னும் பத்துப்பாட்டு நூல் வருணிக்கிறது. நெடும்செவிக்குறு முயல் போக்கு அறவளை இகடுங்கண்கானவர் கடறு கூட்டுண்ணும் அரும்சுரம் . . (பெரும் 115 – 117) நீண்ட காதுகளைக் கொண்டசிறிய முயல்களைப் (வேறு) போக்கிடம் இல்லாதவாறு வளைத்து கடுமையானகானவர் (அக்)காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்) கூடியுண்ணும் அரியவழி என்பது இதன் பொருள். கூட்டாஞ்சோற்றைச் சாப்பிடுதல் இங்கு “கூட்டுண்ணுதல்” என்று கூறப்படுகிறது இதேநூலில் மற்றோர் இடத்தில் கூட்டுணவு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. வலிக்கூட்டுணவின்வாள் குடிப்பிறந்த புலிப்போத்து அன்னபுல் அணல்காளை – பெரும் 137,138 என்ற அடிகளுக்கு, வலிமையால் கொண்ட கூட்டாஞ்சோற்றை உடைய, வாள்(தொழிலே செய்யும்) குடியில் பிறந்த, புலியின் போத்தை ஒத்த, குறுந்தாடியினையுடைய தலைவன் என்பது பொருள். கூட்டாஞ்சோறு என்ற பேச்சு வழக்குச் சொல்கூட்டுணவு என்று இலக்கிய வழக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது பலர்கூடி ஒரே உணவைத் தமக்குள் பரிமாறிக்கொண்டு உண்பதை கூட்டுண்ணல் என்பதுபோல், பலஅறிஞர்கூடித் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு உரையாடுவதுவும் கூட்டுண்ணல் என்று இலக்கியங்களில் கூறப்படுகிறது. மதுரைக்காஞ்சியின் கீழ்க்கண்டவரிகள் இதனை விளக்கும் தொல்ஆணை நல்ஆசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலம் தருதிருவில் நெடியோன்போல (மது 759 – 763) தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்களின், ஒன்று சேர்ந்த கருத்துப் பரிமாற்றத்தை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய நிலந்தருதிருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று என்பதுஇதன்பொருள். ஒருசாதாரணப் பேச்சுவழக்குச் சொல், இலக்கிய வழக்குப் பெற்று, அதனினும் மேலாக, இலக்கிய நயத்துடன் ஒரு உருவகமாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதை இங்குக் காண்கிறோம். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்னனார் சோழநாட்டைச் சேர்ந்தவர். மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். எனவே, இச்சொல் ஒரு வட்டாரவழக்குச் சொல்லாகமட்டும் இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் சங்ககாலத்தில் வழக்கிலிருந்தது எனவும் காண்கிறோம். இதேசொல் இன்றளவும் பொருள்மாறுபாடின்றி அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படுவதைக்காணும் போது என்று முள்ள தென்தமிழ் என்ற சொல் எவ்வளவு உயிரோட்டமுள்ளது என உணர முடிகிறது.
முனைவர்.ப.பாண்டியராஜா துணைமுதல்வர்,
தலைவர்,கணிதத்துறை இயக்குநர், கணினித்துறை அமெரிக்கன் கல்லூரி, மதுரை
வழக்கு என்பது ஒருசமூகத்தின் மொழி வழங்கும் முறைஅல்லது சொல்லாட்சி எனலாம். இந்தவழக்குகளை இலக்கியத்திலும் பேச்சிலும் காணலாம். அது குறித்த ஒரு குறுந்தொடர். பகுதி:ஒன்று
குறுந்தொடர்கள்
தமிழர்பெருமை
தமிழ்
ப.பாண்டியராசா
வாழ்வியல்