கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 8

  1. குடசம்
குடசம்பூ

குடசம், குடப்பாலை என அழைக்கப்படும் மரமாகும்.  இதனை ‘வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப் பூ’ எனக் குறிஞ்சிப்பாட்டு கூறுகிறது.

இலக்கியங்களில் குடசம்

      மகளிர் மலர்ப்படுக்கை மேலிருந்தபோது, செம்பட்டாடையை அரையில் உடுத்து, தலையில் முடிந்த கூந்தலில் செங்கூதாளப்பூ, குறிஞ்சிப்பூவுடன் வெட்பாலைப் பூவையும் (குடசம்) சூடினர் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இச் செய்தியை, குரல்தலைக் கூந்தல் குடசம் பொருந்தி (14. ஊர்காண் காதை, வரி 87) என்ற பாடல்வரி உணர்த்துகிறது. மேலும் வைகை ஆற்றங்கரையில் பூத்திருந்த பல்வேறு மலர்களைக் குறிப்பிடும்போது, அம்மலர்களில் ஒன்றாக குடசம் சுட்டப்படுகிறது. இதனைக் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் (13. புறஞ்சேரியிறுத்தகாதை, வரி 157) என்ற பாடல் வரி உணர்த்துகிறது. இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் மலர்வனம் புக்ககாதையில், புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்களுள் ஒன்றாகக் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்  (மலர்வனம் புக்க காதை, வரி 164) எனக் குடசம் கூறப்படுகிறது.

      பன்னிரு திருமுறைகளில் ஒன்றான சம்பந்தர் தேவாரத்தில், குருந்துமா குரவமுங் குடசமும் பீலியும் சுமந்துகொண்டு  (மூன்றாவது திருமுறை, 89 : 1) என்ற அடியில் குடசம் கூறப்பட்டுள்ளது.

  1. எருவை
எருவை

இது கோரை என்று அழைக்கப்படும் ஒருவகை நாணற்புல்லாகும். இதனைப் பஞ்சாய்க்கோரை அல்லது கொருக்கச்சி என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

இலக்கியங்களில் எருவை

எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி என நற்றிணை (156 : 7) குறிப்பிடுகிறது. எருவை கொறுக்கச்சி, கொறுக்காத்தட்டை எனவும் (நாராயணசாமி ஐயர் உரை) அழைக்கப்படுகிறது. மேலும் எருவை நல்ல மணமுள்ள பூ என்பதை, ‘எருவை நறும்பூ நீடிய’ (நற்றிணை, 261 : 9) என்ற பாடல்வரி உணர்த்துகிறது. நீர்நிலையை நாடிச்சென்ற யானைக்கு அருவியால் தரப்பட்ட இனிய கொறுக்கச்சித்தட்டை (எருவை) உணவாகக் கிடைத்ததை, ‘அருவி தந்த நாட்குரல் எருவை’  என்ற குறுந்தொகைப் பாடல் வரி ( 170 : 2) காட்டுகிறது.

      கலப்பைகொண்டு உழுத நிலத்தில் பஞ்சாய்க்கோரை (எருவை) உயர்ந்து வளர்ந்ததை, “கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை என ஐங்குறுநூறு (269 : 1) பாடுகின்றது.திருப்பரங்குன்றச் சுனையின் பக்கத்திலே எருவையின் நறிய மணமுடைய தொகுதியான பூக்களும், எரியும் சுடர் போன்ற, கொத்தாய் மலர்ந்த வேங்கையும் மலர்ந்திருந்த காட்சியை, எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை என்று பரிபாடல் (19 : 77) காட்டுகிறது. மேலும்,சுனை நீரில் வளைந்திருந்த கொறுக்கச்சிமேல் மலர்கள் பூத்துக்கிடந்த தோற்றம், சுனை வானவில்லைக் கொண்டது போன்றிருந்ததை,

            எருவை கோப்ப, எழில்அணி திருவில்

            வானில் அணித்த வரிஊதும் பல்மலரால்

            கூனி வளைத்த சுனை

என்றும் பரிபாடல் (18 : 48 – 50) நயம்படக் கூறுகிறது.

  1. செருவிளை
செருவிளைப்பூ

செருவிளை என்பது வெண்ணிறம் கொண்ட சங்குப்பூ வகையாகும். வெண்காக்கணம்பூ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கொடிவகைத் தாவரம். தனித்தும், வேலிகளிலும், புதர்களிலும் படரும். வெப்பநாடுகளில் அதிகம் காணப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டுதவிர வேறு சங்க இலக்கியங்களில் இத்தாவரம்பற்றிய குறிப்பு காணப்படவில்லை. இந்த மலர் சிறந்த மருத்துவக் குணம் வாய்ந்த மலர் ஆகும். யுனானி, ஆயுர்வேதம், மற்றும் சித்த மருத்துவத்திலும் தலைசிறந்து விளங்குகிறது.

  1. கருவிளை

சங்க நூல்களில் கருவிளத்தை ‘வெள்ளில்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.  வெண்மையற்றது என்ற பொருளில் வெள்ளில் என்ற பெயர் தோன்றியதாகத் தெரிகின்றது. கருவிளத்திற்குக் கரிய அடிமரம் உண்டு. கருவிளமும், கூவிளமும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. இரண்டுக்கும் இனிய, புளிப்பான, திரண்ட பழம் உண்டு. இதன் காரணமாகவே பழந்தமிழர் இரண்டையும் ‘விளம்’ என்றழைத்து, கருவிளம். கூவிளம் என்று பிரித்துக்காட்டினரெனத் தோன்றுகின்றது. கூவிளத்தைப் பிற்காலத்தில் ‘வில்வம்’ என்றனர். ஆனால் மலையாளத்தில் இன்றும் பழந்தமிழ்ப் பெயரான கூவிளம் வழங்குகின்றது.

கருவிளை

இலக்கியங்களில் கருவிளை

      கருவிளை முரணிய தண்புதல் பகன்றை என்ற அகப்பாடலால் (255 : 11) கருவிளைமலர் பகன்றைமலருக்கு நிறத்தால் மாறுபட்டது என்பதை அறியமுடிகிறது;  பகன்றைமலர் வெண்ணிறமுடையது; கருவிளை நீலமணி போன்ற பூக்களை உடையது. நீலப்பைம்போது உளரி, புதல பீலி ஒண்பொறிக் கருவிளை என்ற குறுந்தொகைப் பாடல் வரியும் (110 : 3-4) கருவிளை நீலநிறம் கொண்டதைக் குறிப்பிடுகிறது.

      தம் காதலரைப் பிரிந்து வாடும் செயலற்ற மகளிரது நீர்சொரியும் கண்களைப்போலக் கருவிளம்பூக்கள் மலர்ந்ததை,

            காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்

            நீர்வார் கண்ணின் கருவிளை மலர

என்று அகப்பாடல் (294 : 4-5) சுட்டுகிறது. மேலும், கருவிளைமலர்கள் கண்களோ என ஐயுறுமாறு மலர்ந்ததை, கண்ணெனக் கருவிளை மலர என ஐங்குறுநூறு (464 : 1) பதிவுசெய்துள்ளது. நீலமணியால் செய்ததுபோன்ற கரியநிறமுடைய காக்கணம்பூ என்பதை, மணி கண்டன்ன மா நிறக் கருவிளை என்ற நற்றிணைப் பாடல் (221 : 1) உணர்த்துகிறது.

      இதன் இலை, வேர், மற்றும் விதை முதலியவை மருத்துவக் குணம் கொண்டவை. இது சிறுநீர் பெருக்கும்; குடற்பூச்சிகளைக் கொல்லும்; வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றைக் குணப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

  1. பயினி
பயினி

குறிஞ்சிப்பாட்டில் கபிலர், ‘பயினி வானி பல் இணர்க் குரவம்’ எனக் குறிப்பிடுகிறார். ‘பயினி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘பயினிப்பூ’ என்று உரை கூறியுள்ளார். அகநானூற்றில், ‘சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய’ (356 : 9) என்று கூறப்பட்டுள்ளது. பிற்கால இலக்கியமான பெருங்கதையில் ‘பயில்பூம் பயினி’ என வரும் சொற்றொடரைப் பார்த்தால், பயினிமரத்தில் பூக்கள்அடர்ந்திருக்கும் என அறியலாம். வட்டேரியா இண்டிகா என்ற தாவரப்பெயருள்ள இதன் மரத்தைப் ‘பயின்’ என்று மலையாளமொழியில் அழைப்பர் எனக் கூறப்படுகிறது. இது ஒரு பெரியமரம்; இம்மரம் ஒருவகையான பசைப்பொருள் கொண்டது. இதன் அகன்ற இலை முட்டைவடிவமானது. மலர் வெண்மைநிறமானது, மணமுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் தென்கன்னடத்திலிருந்து திருநெல்வேலி வரையில், கடல்மட்டதிலிருந்து 2500 அடி உயரமுள்ள மலைப்பாங்கில் வளரும் மரம் இது.

      பெருங்கதையில், ‘திகிரியும் தில்லையும் பயில்பூம் பயினும் (2.இலாவண காண்டம், 12 ; 17) எனப் பயினி குறிக்கப்பட்டுள்ளது.

  1. வானி
வானிப் பூ

வானி சிறியமரம். ஆறு மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை, மெல்லிய வெடிப்புகளை உடையது. உள்பட்டை, இளஞ்சிவப்பு கலந்த வெள்ளை இலைகள் தனித்தவை; எதிரடுக்கானவை. குறுக்குமறுக்கமானவை. மலர்கள் ஏழுக்கும் மேற்பட்டவை. இலைக்கோணங்களில்  சிவப்புநிறமான மலர்கள் அமைந்திருக்கு. இது கீழ்மட்ட அடுக்குமரமாக, குறிப்பாக 700 மீட்டர் முதல் 1400 மீட்டர் உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகிறது. இம்மரங்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில்மட்டும் காணப்படுகிறது.

இளஞ்சேரல் இரும்பொறை, ‘சாந்துவரு வானி நீரினும்,தீம்தண் சாயலன்’ (பதிற்றுப்பத்து, 86 : 12-13) எனப் போற்றப்படுகிறான். வானியாறு இக்காலத்தில் சிறுவானியாறு என வழங்கப்படுகிறது. இது கோயமுத்தூருக்கு நீர் வழங்கும் ஆறு. இந்த ஆற்றுப் படுகையில் வானி மலர் மிகுந்திருந்தது பற்றி இவ்வாற்றுக்கு இப்பெயர் வந்தது எனக் கூறுவர்.

  1. குரவம்

பல் இணர்க் குரவம் – பல இதழ்களையுடைய குரவம்பூ என நச்சினார்க்கினியர் உரை கூறுவார். குரவம்பூ வெண்மையானது, நறுமணம் மிக்கது;  இது குரா என்றும், குரவம் என்றும் சங்கநூல்களில் அழைக்கப்படுகின்றது. குராமரத்தின் பெயரால் ‘குராப்பள்ளி’ என்றொரு ஊரும் உண்டு.   குரவமலரை, ‘நறுங் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை’ என்று ஐங்குறுநூறு (344 : 2-3) கூறுகின்றது. குரவம், முல்லைநிலத்து மரம். முன்பனிக்காலத்தில் அரும்புகட்டத் தொடங்கும் என்பதையும், இளவேனிற்காலத்தில் மிகுதியாகப் பூக்கும் என்பதையும்,

குரவம்பூ

         பின்பனி அமையம் வரும் என, முன்பனிக்

         கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே (நற்றிணை, 224 : 2-3)

என்ற வரிகளும்,

         “குரவு மலர்ந்து,

         அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்       (அகநானூறு, 97 : 16-17)

என்ற வரிகளும் உணர்த்துகின்றன. குரவம்பூவின் உருவம்பற்றிய செய்திகளை  இலக்கியங்களிலிருந்து காணலாம்:

அரவுஎயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்

தேனிமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்” (மேலது, 237 : 3)

“குராவரும் பனைய கூர்வாளெயிற்று வெங்குருளை நாகம்”

(கம்பராமாயணம்)

“குரவங் கொண்ட குறும்பூழ் போல் கொழுங்கான் முகை சுமந்தன”

(சீவக சிந்தாமணி, பாடல் 1651)

குராவின் அரும்பைப் பாம்பின் கூரிய பல்லிற்கு உவமித்துக் கூறியிருப்பது சிறந்த உவமையாகும். குரவின் அரும்பிற்கும், பாம்பின் நச்சுப்பல்லிற்கும் உருவத்தில் ஒப்புமை உண்டு. கூரிய வாள்போன்ற பாம்பின் பல்லின் உருவை குரவின் அரும்பு ஒத்திருக்கின்றது. இதன் மொட்டுகளும், பூக்களும் சிறியதாகவே இருக்கும். மலர் வெண்மைநிறத்துடன் குவிந்து இணராகப்பூக்கும் தன்மையினையும், மணம் மிகுந்துவிளங்கும் பண்பினையும், ‘குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ’, ‘குறுநிலைக் குரவின் சிறு நனை நறுவீ’ என்ற நற்றிணை பாடல்வரிகள்  (266 : 2 மற்றும் 56 : 1) குறிப்பிடுகின்றன.

      மேலும், குரவமலரின் நனை அரும்புகள் மரக்கிளைகளில் பசுமைநிறத்தில் காணப்படும்; நறுமணம்மிக்க குரவம்பூவைச் ‘செய்யாப் பாவை’ என்பர் — குரவமும், மரவமும் இளவேனிற் பருவத்திற்குரியன — அவை பூத்துநிற்பதால் காடு முழுவதும் புத்தழகு பூண்டுநிற்கும் — குரவமரம் நீண்ட கிளைகளையுடையது — இதன் கிளைகளில் குயில்கள் உறையும் — குரவம்பூ மிகுதியான மகரந்தப்பொடியை உடையது — இச்செய்திகளை சங்கப்பாடல்கள்  (ஐங்குறுநூறு, 344 : 1, 357 :1-2 மற்றும் 369 : 4; அகநானூறு, 317 : 10-11) தருகின்றன.

  1. பசும்பிடி

பசும்பிடியாவது பச்சிலைமரமாகும். உரையில் இதனைப் பச்சிலைப்பூ என்று நச்சினார்க்கினியர் கூறுவர். ‘பசும்பிடி’ என்பதற்கு பச்சிலைமரம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது.

பசும்பிடி மரமும், மலர்களும்

      பசும்பிடிமரம் 14 மீட்டர் வரை வளரக்கூடியது. மரத்தின் பட்டை, ஒழுங்கற்ற பெரிய செதில்களாகப் பெயரும் தன்மையுடையது. உள்பட்டை பாலேடுபோன்ற நிறமானது. சிறிய நுனிக்கிளைகள் மஞ்சள்நிறமானவை. குறுக்குவெட்டுத் தோற்றதில் கோணங்களுடையது. உரோமங்களற்றது. இதன் இலைகள் தனித்தவை, எதிரடுக்கானவை, குறுக்குமறுக்கமானவை. இலைக்காம்பு தடித்தது, கோணங்களுடையது, சுருக்கக் கோடுகளுடையது. அலகின் நுனி கூரியது; அலகின் விளிம்பு பின்புறம் சிறிது வளைந்து காணப்படும். உலரும்போது இலையின் பின்புறம் மஞ்சள் அல்லது மாநிறம் அல்லது தவிட்டு நிறம் அடைகிறது. மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை. இம்மரம் அரிதானவை; பசுமைமாறாக் காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1450 மீட்டர்  உயரத்திற்குமேல் மலைகளில் காணப்படுகின்றன. இவை இண்டோ-மலேசியா, மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அரிதாகவும், தெற்கு, மற்றும் மத்திய-சயாத்திரி மலைகளிலும் காணப்படுகின்றன.

      பசும்பிடி இளமுகிழ் (பரிபாடல் 19 : 75) பச்சிலையின் இளங்கொழுந்து. பெண்கள் இருவாட்சி மலரொடு பச்சிலையையும் விரும்பிச் சூடியதை, பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து என்று பதிற்றுப்பத்து  (81 : 25) சுட்டுகிறது.

      திருப்பரங்குன்றத்தின் சுனையின் பக்கத்தில் பச்சிலையின் இளங்கொழுந்தோடு பெண்டிர் வாய்போல் மலர்ந்த அல்லியும், அவர்கள் கைபோல் மலர்ந்த காந்தளும், எருவை, வேங்கை, தோன்றி, கோங்கம், இலவம் ஆகிய மலர்களும் மலர்ந்திருந்ததைப் பின்வரும் பரிபாடல் பகுதி  (19 : 75-79) காட்டுகிறது.

பசும்பிடி இளமுகிழ், நெகிழ்த்த வாய் ஆம்பல்,

கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,

எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை,

உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,

பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்”

  1. வகுளம்

மகிழம்பூ, இலஞ்சிப்பூ என மணம்கமழும் பெயர்கள் இம்மலருக்கு உண்டு. மகிழ் என்றால் மகிழ்ச்சியாக இரு எனப் பொருள்படும். மனதுக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும் தருவதால் இம்மலர் மகிழம்பூ என அழைக்கப்பட்டதாம். அழகிய சிறு நட்சத்திரம்போன்ற மலர்கள் மஞ்சளும், வெள்ளையும் கலந்த வண்ணத்தில், அடர்பச்சையில் சற்றே நீண்ட இலைகளைத் தாங்கும் கிளைகளோடு மாலையில் பூத்து, காலையில் உதிர்ந்துவிடும். மனதைமயக்கும் மணம்கொண்டது இப்பூ. சிவனுக்குரிய  மலர்களிலேயே சிறப்பான மலராக மகிழம்பூ பாடல்களில் இடம்பெற்றுள்ளது.

காதுகளில் எந்தத் தொல்லை ஏற்பட்டாலும் மகிழம்பூவை எண்ணெய்விட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்து, சற்றுநேரம் குளிரவைத்து, அதன்பின் குளிர்ந்தநீரில் குளித்தால் நல்லபலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

source : tamizhtharakai.wordpress.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *