கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 7
- செங்கோடுவேரி:
செங்கோடுவேரியைச் சிறுசெடி என்கிறார் இரா. பஞ்சவர்ணம் (கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், ப. 82). சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர மற்ற சங்கப் பாடல்களில் இத்தாவரம்பற்றிய குறிப்பு காணப்படவில்லை. ஆனால், கோவை இளஞ்சேரன் இதனை ஒரு மரம் என்கிறார். செம்மைநிறப் பூ உடையது. கொங்குவேளிரும் (பெருங்கதை) இதனை முல்லைநிலத்து ஆற்றங்கரை மரமெனக் கருதுகிறார். (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப.100).

- தேமாம்பூ

தேமாம்பூ, ஆம்பிரம், மாம்பூ என அழைக்கப்படும். முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது; முதலில் புளிப்பாகவும், கனிந்தபின் தேன்போல் இனித்து சுவை தரும் பழத்தைத் தரும் பூ.
மாமரம் 35 முதல் 40 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும், அடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 முதல் 35 செ. மீ. நீளமும், 6 முதல் 16 செ. மீ. அகலமும் கொண்டிருக்கும்.கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளரவளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளைநுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச் சிறியதாக, 5 முதல் 10 மி. மீ. நீளமுள்ள இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்களாக முற்றுகின்றன. மாம்பூ எளிதில் மரத்தினின்றும் உதிர்ந்து விழும். அவ்வாறு உதிர்ந்து விழும் காட்சி மழைத்துளி விழுவதைப் போலக் காட்சியளிக்கின்றது என சங்கப் புலவர் ஒருவர்,
“கருங்கோட்டு மாஅத்து அலங்குசினைப் புதுப்பூ
மயங்குமழைத் துவலையின் தாஅம்” (அகநானூறு, 236: 7-8)
என்று பாடுகிறார். மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்கள்; மற்றவை இருபால் பூக்கள். சாதாரணமாக நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த, அல்லது குளிர் தட்ப வெப்பம், மாமரம் பூப்பதைத் தூண்டுகிறது. பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன், அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருள்களும் பூப்பதைத் தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.
- மணிச்சிகை
மணிச்சிகை
இதனைச் செம்மணிப்பூ என்கிறார் நச்சினார்க்கினியர். மணிச்சிகை புதர்கள்போல் காணப்படும் ஒரு மெல்லிய கொடி. 3 முதல் 5 மீட்டர் வரை நீண்டு வளரும். முட்டை, இதய வடிவ இலைகளோடு இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை, புனல் வடிவ பூக்களோடு கடற்கரைகள் மற்றும் உவர்மண்ணில் ஆண்டு முழுமையும் பூக்கும் பூ இது.
10.உந்தூழ்
இதனை விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ என்று உரை கூறுகிறார் நச்சினார்க்கினியர். பெருமூங்கில் மலரின் பெயர்தான் உந்தூழ். இப்பூ தனக்குரிய மணத்துடன் விரிந்த கொத்தாக மலரும் என்பதை, “உரிதுநாறு அவிழ்கொத்து உந்தூழ்” என்று அடைமொழியிட்டுக் குறிஞ்சிப்பாட்டு (வரி 65) கூறுகிறது. உந்தூழில் எப்போதாவது மலரும்வகை, ஆண்டுக்கு ஒரு முறை மலரும் வகை, எப்போது பூக்கும் என்று தெரியாத வகை ஆகியன உண்டு.

மூங்கில், புல்வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல்வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. . மூங்கில் 40 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் பருமன் ஒரு செ.மீ. முதல் 30 செ.மீ. வரை இருக்கும். மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். கடல்மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் மூங்கில் நன்றாக வளரும் எனக் கூறுவர்.
மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்ற மூங்கில் இன மரங்களில் பெரும்பாலானவை, 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றாக பூக்கும். மூங்கில் பூ பூத்தால் அந்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்ற நம்பிக்கை பல இடங்களில் இருக்கிறது. உண்மையில் அதற்கான காரணம் மூங்கில் அரிசி என்றால் எலிகளுக்கு ரொம்ப ஆசை. அதை உண்ண சுற்று வட்டார எலிகளெல்லாம் அங்கே குடிபெயர்ந்துவிடும். மூங்கில் அரிசி தீரும்வரை அங்கேயே குடும்பத்தைப் பெருக்கும். மூங்கில் அரிசி தீர்ந்துவிட்டால் அப்போது பலமடங்காகப் பெருகி இருக்கும் எலிக்கூட்டம் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குப் படையெடுக்கும். அப்போது கண்டிப்பாக அந்த ஆண்டு விவசாயம் வழக்கத்தைவிட அதிக சேதாரத்தைச் சந்திக்கும். இதுதான் மூங்கில் பூத்தால் ஆகாது என்ற வழக்கத்தைத் தந்திருக்கும் எனலாம்.
11.கூவிளம்பூ

கூவிளம் பூவை மாலையாகக் கட்டி அணிந்ததை, “பெருவரை நீழல் வருகுவன் குளவியொடு, கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும்” என்று நற்றிணை (119 : 8-9) குறிப்பிடுகின்றது. எழினி எனும் தலைவன் கூவிளங்கண்ணி அணிந்ததை, “ஊராதுஏந்திய குதிரை, கூர்வேல், கூவிளங் கண்ணிக் கொடும்பூண்எழினியும்”என்றும், கூவிள மரத்தின் விறகை எரிக்கப் பயன்படுத்தியதை, “கூவிள விறகின்ஆக்குவரி நுடங்கல்” என்றும் புறநானூறு (158 : 8-9 மற்றும் 372 : 6) குறிப்பிடுகின்றது. சங்க நூல்களில் கூவிளத்தைப்பற்றி வேறுகுறிப்புகள் இல்லை.
கூவிளம், கூவிளை, வில்வம், வில்வ பத்ரி என அழைக்கப்படும். வில்வமரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. வில்வம் எல்லா இடங்களிலும் வளரும். இமயமலையின் அடிவாரம், ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்ப்பகுதி வரையிலும், தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. 15 முதல் 25 அடி உயரம்வரை வளரும்.
வில்வமரம் எல்லாச் சிவன் கோயில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை, மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது. இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது. ஈட்டி வடிவமானது. இலைப் பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்கமலர் வகையைச் சேர்ந்தவை. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை. இதன் காய்கள் நீள்வட்ட வடிவத்தில் காணப்படும். பூ பூக்காமலேயே காய்க்கும் மரம் வில்வமாம். என்றாலும் இதற்கும் பூ உண்டு. கனி பெரிய வகையைச் சேர்ந்தது. ஓடு கெட்டியாக இருக்கும். இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படுகிறது. வில்வ மரக் காற்றில் மருத்துவ சக்தி உள்ளது. இதன் வேர், இலை, பழம், பட்டை ஆகியன மருத்துவப் பயனுடையதாய்க் கருதப்படுகின்றன. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
இதன் இலைகள் உடல்வெப்பத்தைத் தணித்து இரத்தத்தைத் தூய்மைப்படுத்த வல்லவை. இலைகளை ஊறவைத்த நீரை அருந்தினால் பித்த நோய், கண் நோய் ஆகியன குணமாகும். இதன் பழச்சாற்றை அருந்துவதால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். நூறு ஆண்டுகளுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் நீங்கும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
- எறுழம்
எரிபுரை எறுழம் – நெருப்புப்போன்று தோன்றும் எறுழம்பூ என்று உரை கூறப்படுகிறது. பெரிதாகப் பெய்கின்ற மழையைநோக்கிப் பூத்திருக்கின்ற எறுழ மலர்கள் நீலமணிபோன்ற நிறம்கொண்டவை. அடர்ந்த புதர்களில் உள்ள நல்ல பூங்கொத்துக்களை உடைய இவை, மழைக்காலம் நீங்கியதால் தம் இயல்பான நிறத்தினின்று மாறி வெண்மைநிறமாக மாறியிருத்தலை,
“வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்
நறைதிறம் படுத்த நல் இணர்த்து எறுழ்வீ”
என்று நற்றிணை (302 : 4-5) காட்டுகின்றது.
முருகன் வீற்றிருக்கும் மலையில் எறுழம் பூங்கொத்துகளின் காம்பில் உள்ள மலர்கள் கழன்று வீழ்ந்து பரவிக்கிடப்பதை,
“ . . . . . . விரிஇணர்க்
கால்எறுழ் ஒள்வீ தாஅய
முருகுஅமர் மாமலை”
என்று ஐங்குறுநூறு (308 : 2-4) காட்டுகிறது.
எறுழம் குளிர்காலத்தில் பூக்கும். தண்டு மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டதெனக் கூறப்படுகிறது. இத்தாவரம் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும், குறைந்த மட்டவெப்பமண்டல பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படுகிறது.
13.சுள்ளி

சுள்ளி – மராமரப் பூ; ‘சுள்ளி’ என்ற சொல் தாவரங்களைச் சுட்டும் சொல்லாக சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ‘சுள்ளி’ என்ற சொல்லுக்கு நிகண்டுகள் அனிச்சம், நறவம், மராஅம், நாகம், ஞாழல், ஆச்சா போன்ற பல தாவரங்களைச் சுட்டுகின்றன. இச் சொல்லின் பொருள் மென்மை, கூர்மை, ஈரமற்று காய்ந்தது ஆகியவையாகும், ‘சுள்ளிவேலி’பற்றி இலக்கியமும், கல்வெட்டுகளும் கூறுகின்றன. எனவே இது ஒரு தனியான தாவரமா அல்லது பல தாவரங்களுக்கான பொதுப்பெயரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் கு. வி. கிருஷ்ணமூர்த்தி (தமிழரும் தாவரமும், ப. 120).
சுள்ளி புதர்ச்செடியில் பூக்கும் பூவாகும். இதனை, வெண்பூஞ்சுள்ளி, பணிப்பூஞ்சுள்ளி என்று பெருங்கதை குறிப்பிடுகிறது.
“தண்பூந் தணக்கந் தமாலந் தகரம்
ஒண்பூங் காந்தள் வெண்பூஞ் சுள்ளி”
“மணிக்குருக் கத்தியும் பணிப்பூஞ் சுள்ளியும்”
“பைங்கூ தாளமும் வெண்பூஞ் சுள்ளியும்”
(பெருங்கதை, இலாவண காண்டம், 15. விரிசிகை மாலை சூட்டு : 15-16 மற்றும் 12. மாசன மகிழ்ந்தது ; 22)
சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டைத் தவிர வேறு இலக்கியங்களில் இத்தாவரப் பெயர் காணப்படவில்லை.
- கூவிரம்

இது ஒரு மலை மர வகை. இதில் பூக்கும் மலர் கூவிரம் பூ. இது பாலை நிலத்துத் தாவரம். காய், வாள் போன்று தட்டையாக நீண்டு காணப்படும். சங்கப் பாடல்களில் குறிஞ்சிப்பாட்டுத் தவிர வேறு எங்கும் இத்தாவரம் பற்றிய குறிப்பு காணப்படவில்லை.
- வடவனம்

வடவனம் என்னும் மலரைத் துளசி என சில அறிஞர்கள் கருதுகின்றனர். வடவனம் மரவகையாகும் எனக் கு. வி. கிருஷ்ணமூர்த்தி கருதுகிறார். “வடவனம், வாகை, வான்பூங்குடசம்” என்பதிலிருந்து இது வடக்கிலிருந்து வந்த வாகையாக இருக்கலாம் என்று ஒரு சிலர் கருதுகின்றனர் (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, மு. நூ., ப. 99). இத்தாவரம் பற்றிய செய்தி குறிஞ்சிப்பாட்டுத் தவிர வேறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.
- வாகை

சங்க இலக்கியச்செய்திகளை மிகக்கவனமாக ஆய்ந்தறியும்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மரங்கள் வாகை என்று அழைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. மேலும், இலக்கியத்தில் வாகை, கருவாகை, அத்தவாகை, கடவுள்வாகை, குமரிவாகை, பார்ப்பனவாகை, பெருவாகை போன்ற மரப்பெயர்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நிச்சயமாக Albizia பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங்களாகும். இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள வாகையின் பண்புகள் பின்வருவன:
ஒருவகை வாகை மிகப் பெரிய மரம்; வறண்ட நிலத்தில் வளர்வது; கவட்டு இலைக் கொண்டது; கொத்தாகப் பூக்கும்; மென்மையான பூக்கள் கொண்டது; மலர் வெண்மையானது; காற்றில் நெற்றுகளில் உள்ள விதைகள் ‘கலகல’ வென ஒலிக்கும்; இன்னொரு வகை வாகையின் மலர்கள் செந்நீல நிறமுடையவை; பூக்கள் திரண்ட காம்பை உடையவை (மேலது, ப. 95).
வாகைமரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழமையான மரங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சங்க காலத்தில் போரில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாகைமலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பைப் பகிர்ந்ததாக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.
வாகைமரம் 18 முதல் 30 மீட்டர் வரை வளரக்கூடிய பெரிய மரமாகும். இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும், இரவுநேரங்களில் மூடிக்கொள்ளும் பண்புடையனவாகவும், முதிர்ந்தநிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய நிலையிலும் காணப்படும். இளமஞ்சள் அல்லது வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தூள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையவை.
வாகைமரம் புல்லிய புறத்தினையுடைய, சுவடு பொருந்திய இலையையும் உடையது. அவ்விலையை, அறுகம்புல்லின் கழுவிய நீலமணி போன்ற கருநீல இதழ்களை உடையதும், குளிர்ந்த நறுமணம் கமழும் மொட்டுடன் விரவிக் கட்டிய வெண்மையான காப்பு நூலை,அக்காலத் திருமணத்தில் காப்பு கட்டும் சடங்கில் கட்டியதை அகநானூறு (136 : 10-11 மற்றும் 13-14) பாடுகிறது.
“மென்பூ வாகை புன்புறக் கவட்டுஇலை
. . . . . . . . . . . அறுகை . . . . . .
மண்ணுமணி அன்ன மாயிதழ் பாவைத்
தண்நறு முகையொடு வெண்நூல் சூட்டி”
வாகை மரத்தின் நீண்ட காம்புடைய பூ, மயிலின் கொண்டையைப் போல் தோன்றுவதை, “குமரி வாகைக் கோல்உடை நறுவீ, மடமாத் தோகைக் குடுமியின் தோன்றும்” என்று குறுந்தொகை (347 : 2-3) சுட்டுகிறது.
இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையதாகக் கருதப்படுகின்றன.