சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 2

சங்ககாலத்தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300) மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரி வடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரிவடிவங்களாக கருதப்பெற்றது. ஒரு மொழிக்கு இருவேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. வடஇந்தியாவில் அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு படித்துணரப்பட்ட பிராமி வரிவடிவத்திலிருந்தே தமிழ் வரிவடிவமும்,வட்டெழுத்து வரிவடிவமும் தோன்றின என்பதை ஒப்பீட்டாய்வின் அடிப்படையில் டி.ஏ.கோபி நாதராவ், தி.நா.சுப்பிரமணியன் போன்றோர் நிறுவிய போதிலும் தமிழகத்தில் கிடைத்த சங்ககாலக் (தமிழி) கல்வெட்டுக்களின் தனித்தன்மையினை அக்காலத்தில் அறிய இயலாது போயிற்று. பிராமியின் தோற்றம் குறித்து ஆய்வாளர்களின் கருத்துகள் ஐராவதம் மகாதேவன் இவ்வெழுத்துகள் வடஇந்திய அசோக பிராமியிலிருந்தே தோன்றியது என்கிறார். சமயங்களின் சமண,புத்த மதத்தாக்கத்தின் விளைவாகத் தமிழகத்திற்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றார். மேலும், இதன் மேலெல்லை காலம் பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டு என்பது இவரது காலக்கணிப்பு மகாதேவன் அவர்களது காலக்கணிப்பைக் குறித்து அவரது நூலை மதிப்புரை செய்த பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களது கருத்து இங்குச் சுட்டத்தக்கது. முதலில் குறிப்பிடவேண்டிய சிறப்பு ஆசிரியரின் காலக்கணிப்பு. தமிழ்பிராமி எழுத்துக்களின் மாற்றங்களை விரிவாகப் பகுப்பாய்வு செய்து அவற்றுடன் அகழாய்வுகளில் கிடைத்த எழுத்துக்கள் இந்தியாவில் பிறஇடங்களிலும் இலங்கையிலும் கிடைத்த பிற பிராமி எழுத்துக்கள் ஆகியவற்றுடன் ஒப்பீட்டாய்வு செய்து எல்லாக் கல்வெட்டுகளுக்கும் காலத்தைக் கணித்து வரிசைப்படுத்தியுள்ளார். இந்தக் காலப்பாகுபாடு அறிவியல் கன்ணோட்டத்துடன் இக்கல்வெட்டுகளை அணுகுபவர்கள் யாவரும் பெரும்பாலும் ஏற்கத்தக்கதாகவுள்ளது. எனவே எ.சுப்பராயலு அவர்களும் இக்காலக்கணிப்பை ஏற்றுக்கொள்கிறார் என்பது தெளிவு இவ்வரிவடிவம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் இரா.நாகசாமி, நடன காசிநாதன், கே.வி.ரமேஷ், எம்.டி.சம்பத், கா.இராஜன், சு.இராசவேலு போன்ற அறிஞர்கள் மண்ணடுக்கு ஆய்வின் அடிப்படையில் கல்வெட்டு எழுத்தமைதி மற்றும் சமூகபண்பாட்டுச் சூழலின் அடிப்படையில் பழந்தமிழ் எழுத்துக்கள் அசோகபிராமிக்கு முற்பட்டது என்று உரைக்கின்றனர்.கே.வி.ரமேசு இந்தியாவிலும் அதைச்சுற்றியுள்ள முசுலீம்கள் அல்லாத நாடுகளிலும் வழங்கிய எழுத்துக்கள் பிராமி என்ற எழுத்துக்களிலிருந்தே தருவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராமியானது எவ்வித கலப்புமில்லாத ஆரம்ப நிலையில் உள்ளது இதிலிருந்தே தமது பகுதி மொழிக்கேற்ப எழுத்து நடைகளை மாற்றி அவ்வப்பகுதியிலுள்ள மொழி வல்லுநர்கள் அசோகபிராமி அல்லது மௌரியபிராமி, குசா(ஷா)ன பிராமி, சாதவாகன பிராமி,தமிழ் பிராமி எனப் பலவாறாகப் பகுத்துள்ளனர் என்று குறிப்பிடுவதுடன், தமிழ்நாட்டுக் குகைகளிலுள்ள முற்கால பிராமி எழுத்துப்பொறிப்புக்கள் கி.மு 4 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டகாலத்தைச் சேர்ந்தது என உரைக்கிறார். மேலும் இவர் அசோகர்காலத்து (மௌரியர்காலம்) மக்கள் நன்கு எழுத்தறிவைப் பெற்றிருந்தனர் என்றும் கூறுகின்றார். எம்.டி.சம்பத் கி.மு 54 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்தோ ஆரியர்களின் புலப்பெயர்ச்சியின் காரணமாக இலங்கையில் வரிவடிவம் உருவானது. இலங்கை பிராமிவடிவம் தொடக்கநிலை அடிப்படைக்கூறுகளைக் கொண்டு விளங்குகிறது எனக் கருத்துரைத்துள்ளார். கா.ராசன் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பாக மண்ணடுக்காய்வின் அடிப்படையில் தமிழ்பிராமியின் காலத்தை அசோகர்காலத்திற்கு முன்பாக எடுத்துச்செல்கிறார் .சு.இராசவேலு அசோகர்காலத்தில் இந்தியாவில் மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாக விளங்கியுள்ளனர் என்பதை மெகச்தனிசு.சு(ஸ்)ட்ராபோ, அர்ரியன் போன்ற அயல்நாட்டார் குறிப்பின் அடிப்படையில் கூறுகின்றார். அசோக பிராமி எழுத்துக்கள் ஒழுங்கான அமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. முழுமை பெற்ற அமைப்புடையனவாக விளங்குகின்றன. மேலும், ஓர் எழுத்து பல்வேறு வகையில் எழுதப்பட்டுள்ளது. எனவே அசோகர் காலத்திற்கு முற்பட்டே இந்தியாவில் எழுத்துக்கள் இருந்துள்ளது என்று கூறுகின்றார்.அசோகர்காலத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் அரசரின் ஆணைகளாகவே உள்ளன என்று உரைப்பதுடன் அசோகர்காலத்திற்கு முன்பே (கி.மு.400) தமிழகத்தில் பொதுமக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அழகன்குளம் மற்றும் பிற அகழாய்வுகளில் கிடைத்த மட்கலங்கள் மூலம் விளக்குகின்றார்.

சங்ககாலத்தமிழ் எழுத்துக்கள் அசோகர் பிராமிக்கு முற்பட்டது என்பது இவர்களது பொதுவான கருத்தாகும்.ஆயினும் இதன் தோற்றம் குறித்து இவர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். எம்.டி.சம்பத்,கே.வி.ரமேசு ஆகிய இருவரும் பிராமி என்ற வரிவடிவத்திலிருந்து இலங்கை எழுத்துக்களும் இந்திய எழுத்துக்களும் தருவிக்கப்பட்டன என்பதை ஏற்கின்றனர்.நடனகாசிநாதன் மற்றும் சு.இராசவேலு ஆகியோர் தொன்மைத் தமிழ் எழுத்துக்களிலிருந்தே (தமிழி) பிற வடஇந்திய, இலங்கை எழுத்துக்கள் தோற்றம் பெற்றிருக்கும் எனக் கூறுகின்றனர். கா.இராசன் அதன் தோற்றம் குறித்து அதிகம் பேசவில்லை.கொடுமணம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானைஓடு அண்மையில் நடந்துவரும் ஆய்வுகளின் மூலம் சிந்துவெளிப்பண்பாடு திராவிடப்பண்பாடே என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிந்துவெளிகாலத்தில் வழக்கிலிருந்த எழுத்துக்கள் பகுதி சித்திர எழுத்துக்களாகவும் பகுதி ஒலி எழுத்துக்களாகவும் இருக்கக்கூடும் என்பது தொல்லெழுத்து வல்லுநர்களின் கருத்து. சிந்துவெளி எழுத்திலிருந்து தான் பிராமி எழுத்துக்கள் தோன்றின என்று கன்னிங்காம் போன்ற சில அறிஞர்கள் கருதுகின்றனர்.சிந்துவெளி எழுத்துக்களின் தன்மையைக் நோக்கினால் அவற்றிலிருந்து உயிர்மெய் வகையைச் சார்ந்த (பிராமி எழுத்துக்கள் தோன்றி இருக்க முடியாது என்றும் பிராமி எழுத்துக்கள் வடசெமிடிக் (அராபிய) எழுத்துக்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டன என்றும் இது பொ.ஆ.மு. 700 இல் தோன்றியிருக்கக் கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். துறஒ ( தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டது ) தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்பிராமி எழுத்துகள் முதலில் பிராமி எழுத்துக்களும் வலமிருந்து இடமாகவே எழுதப்பெற்றுள்ளது.ஏரான் என்ற இடத்தில் கிடைத்த ஒரு காசில் தம்பலச என்று எழுதப் பெற்றுள்ளது.இதுவே நமக்குக் கிடைத்துள்ள பிராமி எழுத்துக்களில் மிகவும் தொன்மையானதாகும்.இது வலமிருந்து இடமாக எழுதப் பெற்று பின் இடமிருந்து வலமாக எழுதப்பெற்றுள்ளது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அராபிய எழுத்துக்களிலிருந்து பிராமி தோன்றியது என்றால் அராபிய எழுத்துக்களே பிராமியாக மாறி விட்டன என்று பொருள் அல்ல. சில எழுத்து ஒற்றுமையைக் கொண்டு சமசுகிருத மொழிக்கு ஏற்ப அராபிய எழுத்துக்களை அறிந்தவர்கள் இவ்வெழுத்துக்களைத் தோற்றுவித்தனர் என்பதே பொருள்.பிராமி தோன்றிய பொழுதே தமிழி எழுத்துக்களும் தோன்றியிருத்தல் வேண்டும். இங்கும் அராபிய எழுத்துக்களுக்கான கருத்துக்களை ஏற்றுத் தமிழ்மொழிக்கு ஏற்ப ழ, ள, ற,ன என்ற சிறப்பு ஒலிகளுடன் தமிழ்மொழி வல்லுநர்கள் தோற்றுவித்தனர் என்று கொள்வதும் பொருந்தும் இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் இடமிருந்து வலமாகவே எழுதப் பெற்றுள்ளன. ஆதலின் இவை பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தையதாகக் கொள்வதில் தவறில்லை என கா.ராசன் கூறுகின்றார். எழுத்து வகை (உயிர்மெய்வரை): புள்ளியில்லா உருவே அகரமோடு கூடி, அதே உருவாகவும் ஏனைய உயிரோடு சேரும் போது உருபு திரிந்தும் தமிழ்எழுத்துக்கள் வழங்குகின்றன என்பதைத் தொல்காப்பியத்திலிருந்து அறியலாம். ஆதலின் இது உயிர்மெய் வகை என்று அழைத்தல் வேண்டும். .  உபாஅன் ஆய்வறிஞர்களின் மொழிபற்றிய கருத்துகள் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வழங்கிய மொழி பிராகிருதம் என்று தொடக்கக்காலக் கல்வெட்டியல் அறிஞர்களான வெங்கையா, கிருட்டிணா,சாசுத்திரி ஆகியோர் கருதினர். முதன் முதல் இக்கருத்தை மாற்றி அதைத் தமிழ் என்று உணர்த்தியவர் கே.வி.சுப்ரமணியஐயர் ஆவார். இக்கருத்தை ஐராவதம் மகாதேவன் தமது நூல் வாயிலாக மேலும் உறுதி செய்துள்ளார். இன்று தமிழகத்தில் கிடைத்துள்ள தமிழ்பிராமி (பழந்தமிழ்) கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழ்மொழியிலேயே உள்ளன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இக்கல்வெட்டுக்களில் 25% பிராகிருத சொற்கள் கலந்துள்ளன. இப்பிராகிருத சொற்கள் வடஇந்தியாவில் அக்காலத்தில் பொதுவாக கல்வெட்டுகளில் வழங்கிய பிராகிருத மொழியோடு தொடர்புடையது என்பது சுப்ரமணியன் அவர்களின் இன்னொரு கண்டுபிடிப்பு ஆகும். அசோகர் கல்வெட்டுக்களில் வழங்குவது போல் தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் கிழக்கிந்திய பிராகிருதத்தின் தாக்கம் அதிகம் இல்லை. இவை சமணச்சார்புடையனவாக இருந்தமை இதற்கு காரணமாகலாம் என்ற ஐராவதம் மகாதேவனின் கருத்தும் முக்கியமானது.  பெருவழுதி முத்திரை கண்டுபிடிப்புகள் எழுத்துக்களை 1903 இல் திரு.வெங்கோபராவ் முதன் முதல் கீழவளவு என்ற இடத்தில் கண்டு வெளிக்கொணர்ந்தார். மறுகால்தலை என்ற இடத்தில் எல்.எ.கெமைடு அவர்கள் ஒரு கல்வெட்டையும் அதே ஆண்டில் பிரான்சிசு மற்றொரு கல்வெட்டையும் கண்டுபிடித்தார். அதன் பிறகு ஆனைமலை, அழகர்மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்னவாசல் முதலிய இடங்களில் சில கல்வெட்டுக்களை ச.கிருட்டிணசாசுத்திரியும், கே.வி.சுப்பிரமணிய ஐயரும் கண்டுபிடித்தனர். அதன் பின்பு திருச்சி, மாமண்டூர் முதலிய இடங்களிலும் சில கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அறச்சலூரில் (அறச்சாலையூர்) ஒரு கல்வெட்டு மயிலை.சீனி வேங்கடசாமி, செ.இராசு ஆகியோர் கண்டுபிடித்தனர் (1960). 1966இல் ஐராவதம் மகாதேவன் திருவாதவூரில் மற்றொரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.இதைத் தொடர்ந்து பல அறிஞர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இன்று இதன் எண்ணிக்கை 94 ஆகும்.இதுபோன்று பல இடங்களிலும் தமிழிக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட போதிலும் இவ்வெழுத்துக்களை முறையாகக் படிக்கும் முயற்சி 1910ஆம் ஆண்டிற்குப் பின்னரே தொடங்கியது எனலாம். 1906இல் கண்டுபிடிக்கப்பட்ட மறுகால் தலைகல்வெட்டு 1910ஆம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையிலேயே வெளிவந்துள்ளது. . கொல்லிரும்பொறை வடஇந்திய பிராமி வரிவடிவம் தமிழ்நாட்டில் கிடைத்ததை அறிந்த அறிஞர்கள் அதைப்படிப்பதில் ஆர்வம்கொண்டனர். இதைத் தொடர்ந்து கே.வி.சுப்பிரமணிய.;ஐயர், எச்.கிருட்டிண சாசுத்திரி, வெங்கோபராவ், வெங்கையா போன்றோர் இதில் கவனம் செலுத்தினர். இதன்விளைவாகபுதிதாகக்கண்டுபிடிக்கப்பெறும்தமிழிகல்வெட்டுக்கள்ஆண்டுதோறும்கல்வெட்டுஆண்டறிக்கையில்வெளிவரஆரம்பித்தன. 1924 ஆம் ஆண்டிற்குள் 12 இடங்களிலிருந்து 32 கல்வெட்டுக்கள் வெளிவந்தன. இதனைக்கொண்டே கே.வி. சுப்ரமணியஐயர் 1924 இல்இவ்வெழுத்துக்கள் தமிழ்மொழியைச் சார்ந்ததே என உறுதிப்படுத்தினார். 1882இல் இராபர்ட் சீவலாலும், 1906இல் டபிள்யு.ஃ பிரான்சிசாலும் கண்டுபிடிக்கப்பட்ட மாங்குளம் கல்வெட்டு 1965இல் தான் முழுமையாகப் படித்துணரப்பட்டது. இதில் பாண்டிய அரசர் நெடுஞ்செழியன் பெயர் உள்ளதை முதன்முதலில் கண்டறிந்த பெருமை ஐராவதம் மகாதேவனையே சாரும். அண்மைக்காலத்தில் (2006) இக்கல்வெட்டுக்கள் நடுகற்களிலும் நெடுநிலைக்கற்களிலும் இருப்பதைப் புலிமான் கோம்பை மற்றும் தாதப்பாட்டியில் கிடைத்த கல்வெட்டுக்கள் கொண்டு தமிழ்ப்பல்கலைக்கழகம், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை முனைவர் பட்ட மாணவர்கள் வி.பி.யதீசுமார் மற்றும் ச.செல்வக்குமார் ஆகியோர் கண்டறிந்தனர். இக்கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வுசெய்த கா.ராசன் தமது கருத்துக்களை விரிவாக விளக்கியுள்ளார் குட்டுவன் கோதை முத்திரைகள் – குறவன் கல்வெட்டுக்களில் மட்டுமின்றி பானைஓடுகளிலும் காசுகள், முத்திரைகள் மற்றும் மோதிரங்களில் இருக்கும் எழுத்துக்களையும் கண்டறிந்தனர். இவ்வகையில் பானை ஓடுகளிலுள்ள பழந்தமிழ் எழுத்துப்பொறிப்புகள் முதன்முதலில் மார்டிமர்வீலர் நிகழ்த்திய அரிக்கமேடு அகழாய்வின் மூலம் அறியப்பெற்றுள்ளன. அதுபோல் காசுகளிலுள்ள பழந்தமிழ் எழுத்துப்பொறிப்புகளை முதன்முதலில் 1985இல் காசுகளில் கண்டுவெளியிட்டவர் ஆர்.கிருட்டிணமூர்த்திஆவார். இவர் சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய பாண்டியமன்னர் பெருவழுதியின் காசுகளைக் கண்டுபிடித்து படித்து தமிழக எழுத்தியல் வரலாற்றுடன் நாணய வரலாற்றிற்கு ஒருதிருப்புமுனையை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து 1987இல் சேரமன்னர் கொல்லிப்புறை காசுகளைக் கண்டுபிடித்து சேரவரலாற்றுக்குப் பெருமைச் சேர்த்தவர் ஆர்.நாகசாமியாவார். இவ்வெழுத்துக்கள் முத்திரைகளில் இருப்பதை 1981இல் கோவேத என்று தமிழ் பிராமியில் எழுதப்பட்ட ஆனைகொடை (இலங்கை) முத்திரைக் கொண்டுஇந்திர பாலாவும் பொ.ஆ. 2000இல் தீயன் என்ற தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்பை மோதிரத்தில் சங்கரன்ராமனும் முதன்முதலில் கண்டுபிடித்தனர்.இவ்வெழுத்துக்களைக் கண்டறிந்துபடித்து தமிழ்மொழிக்கு பெருமை சேர்த்த அனைத்து அறிஞர்களின் செயல்களும் மிகவும் போற்றுதற்குரியதாகும். அவற்றுள் மிகவும் முக்கியமான பங்களிப்புகள் பின்வரும் தொடரில் வெளிவரும். (தொடரும் ) முனைவர் மா.பவானி. உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல் துறை

சங்க கால எழுத்துகள் பற்றிய ஆய்வு கட்டுரை. * முனைவர் மா.பவானி. பகுதி – இரண்டு

சங்ககால தமிழ் எழுத்துக்கள்

முனைவர் பவானி

வரலாற்றுக் குறிப்புகள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *