சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் !
(தமிழி அல்லது தமிழ் பிராமி (பொ.ஆ.மு.5 – பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ்மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன.
சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப் பெற்ற பிறபெயர்கள் : இவ்வெழுத்துக்கள் தமிழி, தமிழ்பிராமி, பழந்தமிழ் என்று பலவாறாக அழைக்கப் பெறுகின்றன. அவற்றுக்கான காரணம் பின்வருமாறு வட இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன. வர்க்க எழுத்துக்கள் இல்லை. கூட்டெழுத்து முறைகளும் உரசொலி எழுத்துக்களும் இல்லை. அதுபோல் தமிழ்எழுத்துக்களில் உள்ளழ, ள, ற, ன வடிவங்கள் வட இந்திய பிராமியில் இல்லை. இந்தியாவில் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி எழுத்துகள் பிராகிருத மொழியில் (புத்ததர்மத்தை போதிப்பனவாக) இருக்கும் பொழுது தமிழ்நாட்டில் தமிழ்மொழி மட்டுமே பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்துக்களை வட இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி உணர்த்தும் பொருட்டு இவை தமிழ் பிராமி அல்லது தமிழி என்று அழைக்கப்படுகிறது. இதை நாம் சங்ககாலத்தமிழ் எழுத்துக்கள் என்றே அழைக்கலாம். அந்த எழுத்துக்களே இங்கு காட்டப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களில் பெரும்பாலும் பிராகிருத மொழி இடம் பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் தமிழ்மொழி மட்டுமே இடம்பெறுகிறது. சில பிராகிருதவரி வடிவங்கள் (ஸ, த4) மற்றும் ஒரு சில பிராகிருத சொற்கள் (தம்மம்ஸாலகன்) மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே எழுத்து ஒற்றுமையிருப்பினும் மொழி மற்றும் சில சிறப்புத்தன்மைகள் காரணமாக சங்ககாலத்தில் கிடைக்கும் பழந்தமிழ் எழுத்துக்களை இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்திலிருந்தும் அசோகபிராமி எழுத்திலிருந்தும் வேறுபடுத்து முகமாக வழங்கப் பெற்ற பெயரே தமிழி அல்லது தமிழ் பிராமி என்பதாகும். தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்திற்கு தமிழ்பிராமி என்று பெயரிட்டவர் ஐராவதம் மகாதேவனாவார். அதுபோல் தமிழி என்று பெயரிட்டவர் நாகசாமியாவார். இதனை தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் என நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல் போன்றோர் குறிப்பிடுகின்றனர். சமண சமயத்தின் ரிசபதேவருக்கு (முதல்தீர்த்தங்காரர்) இருமகள்கள் என்றும் அவற்றுள் ஒருத்தி பெயர் சுந்தரி என்றும், இன்னொரு மகளின் பெயர் பிராம்மிஎன்றும் கூறி, சுந்தரி என்பது மொழியையும், பிராமி என்பது எழுத்தையும் குறிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இக்கருத்து பாகவதம் 5 இல் விளக்கப்பட்டுள்ளதாகவும் கணேசன் கூறுகின்றார்.
பழந்தமிழ் எழுத்துகள் சமணர்கள் வாழ்ந்த குகைகளிலேயே பெரும்பாலும் காணக் கிடைகின்றன பொ.ஆ.மு.-பொது ஆண்டிற்கு முன் (கி.மு.விற்கு பதிலாக பொ.ஆ.மு -பொது ஆண்டிற்கு முன் என்பது வழங்கப்படுகிறது.) பொ.ஆ.மு.-பொது ஆண்டு (கி.பி.க்குபதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது சமணகுகைகள் காணப்பட்டாலும் சமண சமயத்தைப் பற்றியோ அதன் கொள்கைகள் பற்றியோ குறிப்பிடவில்லை. இவர்களுக்கு அமைத்துக் கொடுத்த இருக்கையும் அதனை அமைத்துக் கொடுத்தவர் பெயர் மற்றும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் குறித்தே கல்வெட்டுக்கள் கூறுகின்றன அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளன. ஸ, த போன்ற ஒரு சில பிராகிருத சொற்கள் இடம்பெறுகின்றன பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ளன.பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ளன புலிமான் கோம்பை, தாதப்பட்டி, திண்டுக்கல், (தேனிமாவட்டம், ஆண்டிப்பட்டிவட்டம், பொற்பனைக்கோட்டை (புதுவை)) ஆகியமூன்று இடங்களில் கிடைத்த 5 கல்வெட்டுகள் மட்டுமே நடுகற்களாகவுள்ளன. இவையே இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டதாக உள்ளன இதுவரை 32 இடங்களிலிருந்து 95 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பெற்றுள்ளன. சங்கத்தமிழ் எழுத்துப்பொறிப்பு பெற்ற கல்வெட்டுக்கள் கிடைக்கும் இடங்கள்
பெயர்க்காரணம் பொதுவாக இந்தியாவில் முந்தைய காலங்களில் பிராமி,கரோஷ்டி என்ற இருவகை எழுத்துக்கள் வழக்கத்திலிருந்துள்ளன என்பது 19ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றில் பிராமி எழுத்துக்களே இந்தியா முழுவதும் நன்கு வழக்கத்திலிருந்துள்ளன. இவ்வெழுத்துக்களிலிருந்தே பின்னர் வந்த பிராந்திய வரிவடிவங்கள் எழுச்சி பெற்று வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன என்பதுபெரும்பாலும் ஏற்கப்பட்டுள்ள கருத்தாகும். கரோஷ்டி எழுத்துக்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே வழக்கத்திலிருந்துள்ளன.பிராமி வடிவம் துவக்ககாலத்தில் லத் அல்லது லாட் என்றும், அசோகபிராமி என்றும், மௌரிய பிராமி என்றும், இந்தியன்பாலி என்றும் தம்மலிபி என்றும் அழைக்கப்பெற்றுள்ளது. இப்பெயர் தூண் என்பதற்கு வழங்கப்படும் சொல்லின் அடிப்படையிலும், அரசர் பெயர் அடிப்படையிலும், அரசமரபு அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும்,தர்மத்தை எடுத்துரைத்ததின் அடிப்படையிலும் அறியப்பட்டது.ஜேம்ஸ்பிரின்ஸெப் என்ற ஆங்கிலேயே அறிஞரே இவ்வெழுத்துக்களை முதன்முதல் (1837) படித்தறிந்ததோடு கிரேக்கம் போன்ற பிறமொழி எழுத்துக்களுடன் ஒப்பிட்டு அந்தந்த எழுத்துக்களுக்கான ஒலிகளை நிச்சயித்த பெருமை பிரின்ஸப் அவர்களையே சாரும். வடஇந்திய பிராமிகல்வெட்டுக்களை பட்டிபுரோலு கல்வெட்டுக்களுடன் ஒப்பிட்டு இவ்வெழுத்துக்களுக்கான ஒலிகளை பியூலரும் கணித்துள்ளார். இந்தியாவில் இருந்த புத்த, சமணசமய இலக்கியச்சான்றுகளின் அடிப்படையில் இதற்குபிராமி (1886) என்று பெயரிட்டவர் டெர்ரியன் -டி- லாக்கோப்பெரி என்ற பிரெஞ்சு அறிஞரே ஆவார். இப்பிராமி எழுத்து அவற்றை பயன்படுத்திய அரசுகளுக்கேற்ப அசோகபிராமி மௌரியபிராமி குப்தபிராமி குஷானபிராமி சாதவாகன பிராமி எனப்பலவாறாக அழைக்கப்பெற்றுள்ளன. பிரம்மனிலிருந்து தோன்றியதால் பிராமி எனப்பெயர் பெற்றுள்ளது என்ற கருத்தும் உள்ளது, ஆனால் இன்றுவரை பிராமி என்று பெயர் விவாதிக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. இவ்வெழுத்துக்களே தமிழ்மொழிக்கும் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதற்கொண்டே (1903, 1906, 1924) அறியப்பட்டது. இவையே தமிழகத்தின் துவக்க எழுத்துக்கள் என்பதும் பல ஆய்வுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் வடபகுதியில் அசோகன் கல்வெட்டுக்கள் அனைத்திலும் இருவிதமான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பொதுவாக தம்மலிபி என்று பெயர் கூறப்படுகிறது.
இருப்பினும் இவை பிராமி மற்றும் கரோஷ்டி வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. இடமிருந்து வலமாக எழுதும் எழுத்துமுறை பிராமி என்றும், வலமிருந்து இடமாக எழுதும் எழுத்துமுறை கரோஷ்டி என்றும் சமாவயங்க சுத்த, பண்ணவாநசுத்த போன்ற சமணநூல்களும், லலிதவிஸ்தரா என்ற பௌத்தநூலும்தெரிவிக்கின்றன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது சமணநூலே ஆகும். இதுபொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவைகள் குறிப்பிடும் எழுத்துவகைகளுள் பிராமி, கரோஷ்டி போன்றவை இடம்பெறுவது போல தாமிலி என்பதும் குறிப்பிடப்பெற்றுள்ளது.தமிழ்மொழியின் ழகரத்தின் சரியான உச்சரிப்பினை வடமொழியினர் அறிந்திலர். எனவே தமிழி என்பதற்குப் பதிலாக தாமிலி என உச்சரித்திருக்கலாம். அசோகரது கல்வெட்டுக்களிலும் கூடசோழர் என்பது சோடா என்றே குறிக்கப்பட்டுள்ளது.எனவே பிராமி என்ற பெயர் வழங்கப் பெற்ற அதே காலகட்டத்திலேயே தமிழி என்ற பெயரும் வழக்கில் இருந்துள்ளது இங்குச் சுட்டத்தக்கது. கரோஷ்டியும், பிராம்மியும் வேறு இரு எழுத்துக்களாகும். அசோகர்காலத்திற்கு முற்பட்டதாகக் கருதத்தக்க அளவில்பட்டி புரோலுவில் (ஆந்திரா, கிருஷ்ணாமாவட்டம்) கிடைத்த எழுத்திற்கும் தமிழகத்தில் உள்ளஎழுத்திற்கும் சில வேறுபாடுகள் இருப்பினும் அவைகளுக்கிடையில் பலவகையில் ஒற்றுமைகள் உள்ளன. ஆதலால் பிராமி என்ற எழுத்துக்களைத் தமிழில் பிராமி என்று அழைப்பது சரியா? என்று சிந்தனை செய்ய வேண்டும். சமணநூலில் காணப்படுவது போல தமிழி என்ற பெயர்தான் சரியானது என நாகசாமி குறிப்பிடுகின்றார். தமிழகத்தைச் சேராதவர்கள் அவர்களின் மொழிமரபிற்கு ஏற்றவாறு தாமிழி என்று கூறியிருக்கலாம் எனினும் சிலர் இவை குகைகளில் மட்டும் இருப்பதால் இவற்றை லேனா எழுத்துக்கள் என்றும் குறிப்பிடுகின்றனர் திராவிடி சுமார் 5 – 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் லலிதவிஸ்தரம் என்ற நூலில் 64 வகையான எழுத்துக்களுள் ஒன்றாக திராவிடி குறிப்பிடப்பெறுகிறது. திராவிடி என்னும் பிற்காலப் பெயர்பண்டையதமிழ்எழுத்தான தமிழுக்குப் பொருந்தாது. இவை பொ.ஆ. 5-6ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த தெலுங்கு, கன்னடம், கிரந்தம் ஆகிய எழுத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என நாகசாமி கருதுகின்றார். திராவிட தேசத்தில் வழங்கிய எழுத்து என்ற பொருளில் திராமிளி என்று பெயர் பெற்றது எனக்கருதலாம். அதனையே சிலர் திராவிடி என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு இந்நான்குமொழிகளையுமே திராவிடமொழிகள் என இன்று அழைக்கின்றோம். இவை நான்கும் ஒன்றாய் இருந்தகாலத்தில் வழங்கிய எழுத்துக்களையே திராவிடி என்று குறித்திருப்பதாகக் கருதலாம். இவற்றால் நாம் அறியும் உண்மை, பொதுஆண்டிற்கு முன்பும் பின்பும் சுமார் 300 ஆண்டுகள் வரையிலும், இந்தியாவில் வழங்கிய மொழிகள் இரண்டே, ஒன்று பிராகிருதம், மற்றொன்று தமிழ். இவை வடமொழி, தென்மொழி என்று பலநூல்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்தியா மிகப்பரந்த நிலப்பகுதியைக் கொண்டுள்ளதால் பிராகிருதம் அவ்வப்பகுதிகளுக்கேற்ப பாஞ்சாலி, மாகதி, சூரசேனி, மைதிலி, அவந்தி, மகாராஷ்ட்ரீ போன்ற பல பெயர்களுடன் சிற்சில வேற்றுமைகளுடன் தொடங்கி காலப்போக்கில் பலமொழிகளாகப் பிரிந்து வளர்ந்தது. தமிழ்நாட்டில் தமிழ்சிறந்து விளங்கிற்று. தமிழ்நாட்டிற்கு வடக்கே வாழ்ந்தவர்கள் தமிழ்மொழியைத் தாமிழம் என்றே வழங்கினர். பிராகிருதமொழியில் ழ இல்லாததால் அதனை திரமிலம் என்றே குறித்துள்ளனர். இதனேயே சிலர் திராமிலம், திராவிடம் என்றெல்லாம் குறிப்பார்கள். தொடக்ககாலத்தில் நிலவிய இருபெரும் நாகரிகங்கள், பிராகிருத நாகரிகமும் தமிழ்நாகரிகமுமே ஆகும். எனவே தமிழ்மொழியைத் தாமிழி என்று வடமொழியினர் அழைப்பது நியாயமே. தாமிழியை மிகச்சரியாக கூறவேண்டுமானால் தமிழ் என்றே கூறலாம். தென்பிராமி அசோகர்காலத்திற்குப் பின்னர் தமிழகத்தையும் ஆந்திர மாநில பட்டிபுரோலுவையும் தவிர்த்ததக் காணப்பகுதியில் வழங்கிய பிராமியே தென்பிராமி என அழைக்கப்பட்டது என ஐராவதம் மகாதேவன் கூறுகின்றார். தென்னகத்தில் குறிப்பாக ஆந்திரமாநிலத்திலிருக்கும் பட்டிபுரோலு என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுக்களும் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுக்களும் வரிவடிவத்தில் அசோகர் கல்வெட்டுக்களில் கிடைத்த வரிவடித்திலிருந்து சில மாற்றுவடிவங்களைப் பெற்றுத்திகழ்வதின் அடிப்படையில் இவை தென்பிராமி என்றும் வடஇந்தியாவில் கிடைப்பவை வடபிராமி என்றும் அழைக்கப்படுகிறது என கா.ராஜன் குறிப்பிடுகின்றார். (தொடரும்.)முனைவர் மா.பவானி உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல் துறை
தமிழ்நாட்டின் தொன்மையான கல்வெட்டுகள், எழுத்துகளை பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரை…
- முனைவர் பவானி