வரலாற்றுக் காலம் – 1. கொடுமணலும் மரக்காணமும்

தமிழக அகழாய்வுகள் காட்டும் வரலாற்றுக் கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை

பெருங் கற்படைக் காலத்தின் இறுதிக்காலமும், சங்க காலத்தின் ஆரம்பமும், தமிழக வரலாற்றின் துவக்க காலம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், இக்காலத்தில்தான், கீறல் குறியீடுகளின் தொடர்ச்சியாக, எழுத்துகள் பயன்பாட்டில் வந்தன. எழுத்துகளும் குறியீடுகளும் கலந்து வழக்கில் இருந்தன. மட்கலன்களிலும் சமணப்படுக்கைகளிலும் ஒரு சொல், சில சொற்கள், ஒரு வரி, சில வரி என தமிழ் பிராமி எழுத்துகள் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றன. இன்றைக்கு சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னமே, தமிழகத்தில் தங்கி வாழ்ந்த சமயத் துறவிகளும் பெரியோர்களும், தாங்கள் வசித்த மலைப்பகுதிகளிலும், குன்றுகளிலும், கல்படுக்கைகளிலும் தமிழி எழுத்துகளை கல்லில் வெட்டிப் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும், தமிழர்களின் அழிக்க முடியாத, மறுக்க முடியாத சான்றாதாரங்களாகும்.

மக்கள் தங்களது கருத்துகளை, எழுத்துகள் கொண்டு முழுமையாகப் பதிவு செய்த காலத்தைதான் வரலாற்றுக் காலம் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். தமிழக வரலாற்றில், தொல் பழங்கால மக்களின் வாழ்க்கை பெரும்பாலும் கூட்டு வாழ்க்கை முறையாகவே இருந்துள்ளது. அரசுகள் தோன்றும் முன்னர், மக்கள் சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்தனர்*3. வரலாற்றின் துவக்க காலத்தில், குழுக்கள் இணைந்து பெருங்கூட்டமாக மாற்றம் பெற்று அவை ஊர், நாடு, நகரம், என பிற்கால வரலாற்றில் வளர்ச்சி அடைந்தன.

தமிழகத்தில், வரலாற்றின் துவக்க காலமாகக் கருதப்படும் சங்க காலம் பல முன்னேற்றங்களைப் பெற்றிருந்தாலும், இக்கால மக்களது இருப்பிடங்கள் மிகப்பெரிய கட்டடங்களுடன் இல்லை. சங்க கால அகழாய்வுகளில், பெரும்பாலும் நமக்குத் தொல்பொருட்களும், பானை ஓடுகளும், குச்சி நடு குழிகளும் மட்டுமே கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. சங்க காலக் கோயில்கள் எதையும் இன்றுவரை காணமுடியவில்லை. மத்திய தொல்லியல் துறை, மகாபலிபுரத்தில் அண்மையில் மேற்கொண்ட அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது கோயில் என்றும், அது சங்க காலக் கோயில் என்றும் கருதுகின்றனர்.

‘சோழர்கள் கலைப்பாணி’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ள தனிப்பாடல் மூலம், சங்க காலத்தில் பல்வேறு விதமான கோயில்கள் இருந்ததென அறிகிறோம். அவற்றில், பாடல் பெற்ற கோயில்கள் என ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் பட்டியலிட்டுள்ளார்*4. 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அப்பர் பெருமான். அவர் தனது பதிகத்தில், பலவிதமான கோயில்களைப் பாடியிருக்கிறார்.

“பெருக்காறு சடையணிந்த பெருமாள் சேரும்

 பெருங்கோயில் எழுபதினொடெட்டும் மற்றும்

கரக்கோயில் கடிபொழிற்சூழு ஞாழற்கோயில்

 கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில்

இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்

 இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்

திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து

 தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே”    

இவற்றுடன் தூங்கானைமாடம், பூங்கோயில் போன்ற கோயில்களையும் சேர்த்துக் குறித்துள்ளார். அத்தகைய சிறப்பு வாய்ந்த பாடல் பெற்ற கோயில்களில் பலவற்றை இன்று காண இயலவில்லை. அதற்குக் காரணம், அவை மண்ணாலும், வேகவைக்காத செங்கற்களைக் கொண்டும் கட்டப்பட்டதாலும், குறைந்த அளவிலான வரலாற்றுக் கால அகழாய்வுகளும் ஆகும். மேலும், பல சங்க கால வாழ்விடங்களில், மக்கள் தொடர்ந்து வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்ற காரணத்தினாலும், அவை இன்று நன்கு வளர்ச்சி பெற்ற பெருநகரங்களாக மாறியதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

உதாரணமாக உறையூர், கரூர், பூம்புகார், தஞ்சாவூர், மதுரை போன்ற நகரங்களைக் கூறலாம். இப்பகுதிகளில் அகழாய்வு செய்வதற்குப் போதிய இடவசதியின்மையையும் குறிப்பிடலாம். இவற்றைத் தவிர்த்து, பிற சங்க கால வாழ்விடங்களில் மேற்கொண்ட அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட கட்டடங்கள், அக்கால மக்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள், அவை கூறும் செய்திகள் என்ன என்பதை ஆய்வு செய்யும்பொழுது, அக்காலத்திய உண்மைகள் பல புலப்படுகின்றன.

ஒவ்வொரு அகழாய்வும் நமக்குப் புதிய உண்மைகளை வழங்குகின்றன. அதனால், அவற்றின் முக்கியத்துவம் கருதி ஒரே ஊரில் மீண்டும் மீண்டும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, முந்தைய ஆய்வுகள் கூறுவது என்ன என்பதையும், அண்மைக் கால அகழாய்வுகள் நமக்குத் தெரிவிப்பது என்ன என்பதையும் இணைத்துக் காண வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுச் சான்றுகளைக் கொண்டு, சங்க காலம் முதல் தொடர்ச்சியாக நவீன காலம் வரை காணப்பட்ட கட்டடப் பகுதிகளையும், நகர அமைப்புகளும், கட்டுமானப் பிரிவுகளும், கால்வாய்களும், நீர்நிலைகளும், உறைகிணறுகளும், பயன்படுத்தப்பட்ட கூரை ஓடுகளும், செங்கற்களும், சிறப்பு வாய்ந்த தொல்பொருட்களும் எப்படி இருந்துள்ளன என்பதையும், அக்கால மக்கள் தம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்திய பிற தொல்பொருட்கள் வழியாகக் கிடைத்துள்ள சான்றுகளின் துணையுடன், அக்கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலைகளையும் இனிவரும் பகுதிகளில் விரிவாகப் பார்க்கலாம்.

அதற்கு முன்னோட்டமாக, தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளும், அதன் சிறப்பியல்புகளும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டதன் நோக்கமும், பிற செய்திகளையும் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில், சிறப்பு வாய்ந்த ஊர்களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களைப் பற்றியும், அதன் பயன்பாட்டையும் முதலில் இங்கு விளக்கமாகக் காணலாம். பின்னர், அனைத்து தொல்பொருட்களின் அடிப்படையில், அக்கால மக்களின் சமூக நிலை, பொருளாதாரம், வணிகம், அன்றாட வாழ்வியல் நிலை என தொகுத்துக் காணலாம்.

சங்க காலச் சமுதாயம்

சங்க காலத்துக்குப் பிறகு பெரிய அரசுகள் தோன்றின. இதன் விளைவாக, தனியுடைமையின் பேரில் அரசுகள் நிலை நிறுத்தப்பட்டன. சமுதாயத்தில் தொழிற் பிரிவினையும், சாதிப்பிரிவினையும் ஏற்படலாயிற்று. பெருகிவந்த உற்பத்தியின் விளைவாக, உற்பத்தியில் பங்கெடுத்துக்கொள்ளாத ஒரு வர்க்கம் தோன்றியது*6. அவ்வர்க்கத்தினர், உற்பத்தியில் பங்கெடுத்துக் கொள்ளாமல் உற்பத்தி செய்த பொருட்களைப் பரிவர்த்தனை செய்வதில் மட்டும் நாட்டம் கொண்டனர். தரகு அடிப்படையில் பொருளை ஈட்டிய அத்தகைய மக்கள்தான், வணிகர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

இந்நிலை, நிலவுடைமைச் சமுதாயம், வேளாண் தொழில் முனைவோர் பெற்ற வளர்ச்சியால் வந்தது எனலாம். நகர மக்கள், நகரத்தில் இருந்துகொண்டே வணிகத்தின் வாயிலாகப் பொருளீட்ட முயற்சித்தனர். நிலத்தில் அக்கறை கொண்டு வேளாண் தொழிலில் ஈடுபட்ட நிலக்கிழார்கள், கிராமப்புறத்தில் இருந்தனர். நிலத்தையும், உழவுத் தொழிலையும், ஏர்க்கலப்பையையும் தங்களது குலதெய்வமாகக் கொண்ட மக்களும் இருந்துள்ளனர். அவர்கள், சித்திரமேழிநாட்டார் என்று அழைக்கப்பட்டனர். இவ்விருவருக்கும் அடிக்கடி பொருளாதாரப் போர் மூண்டது. இக்கருத்துகளின் அடிப்படையில், தமிழகத்தில் உயர்குடி மக்களும், அடித்தட்டு மக்களும் உருவாகிறார்கள் என்பது புலனாகிறது.

எழுத்துப் பொறித்த உரோமானிய மட்கலன்

ஏம்ஸ் காலக் கணிப்பின்படி, கொடுமணல் பொ.ஆ.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக அறியமுடிகிறது. மேலும், வட இந்திய பளபளப்பான கருப்பு வண்ண மட்கலன் துண்டுகள் (Northern Block Polished Ware) கிடைத்துள்ளது, இக்காலக் கணிப்புக்குத் துணை செய்கிறது.

கொடுமணலில் கைவினைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும், கல்வி அறிவு பெற்றவர்களும் வாழ்ந்த பகுதியாக திகழ்ந்துள்ளது. வேளாண் தொழிலும், பிற கைத்தொழில்களும் சிறப்பாக நடைபெற்றுள்ளன. அயல்நாட்டினருடன் தொடர்பு இருந்தது புலப்படுகிறது. இவர்களின் பொருட்கள் இலங்கை, ரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதும் தெரிகிறது. இதன் வாயிலாக, கொடுமணல் பகுதி மக்கள் தொழில் வளர்ச்சியும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும் பெற்றுத் திகழ்ந்துள்ளனர் என்பதை உணரமுடிகிறது. இதன் காலம், பொ.ஆ.மு. 500 முதல் பொ.ஆ. 300 வரை எனக் குறிக்கின்றனர்.

மரக்காணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள எழில் வாய்ந்த நகரம் மரக்காணம். இது, வங்கக் கடற்கரையை அலங்கரித்த பண்டைய வணிக நகரமாகும்.

கடற்கரை ஓரத்தில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் மரக்காணம் என்ற பெயர் வந்தது என்பர். பெரிப்பளுஸ் நூலில் “சோபட்மா” என்ற இடமாக இது குறிக்கப்படுகிறது*15. சோபட்னா, சோபட்மா என்பது அழகிய நகரம் என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில அறிஞர்கள், சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள எயிற்பட்டினம், மரக்காணம் இரண்டும் ஒன்றே என்பர்.

சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில், சிறுபாணாற்றுப்படை நூலில், இப்பகுதி ஒய்மா நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டை, நல்லியக்கோடன் என்ற அரசன் ஆண்டதையும், அவனிடம் சென்று பரிசில் பெற்று வந்ததால், சிறுபாணாற்றுப்படை புலவன் மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்தியதையும் குறிக்கும் பாடல் உள்ளது. இதனைப் பாடிய புலவர், இடைக்கழிநாட்டு நல்லூர் நந்தத்தனார் என்பவர் ஆவார். இந்த இடைக்கழிநாடு, மரக்காணத்துக்கு அருகே அமைந்த நாடு ஆகும். ஒய்மா நாட்டில் அகில், சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்கள் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர் எனத் தெரிகிறது.

கல்வெட்டுகள்

முதலாம் இராசராசனின் கல்வெட்டுகளில், இப்பகுதியைக் குறிக்கும்போது, ஒய்மாநாட்டு, பட்டினநாட்டு, தேவதானம் என்றும், முதலாம் இராசேந்திரன் கல்வெட்டில், ஒய்மாநாட்டுப் பட்டினநாட்டுப் பட்டினம் என்றும் குறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டில், எயிற்பட்டினம் என்று வருவதைக் காணமுடிகிறது. முதலாம் இராசராசன் காலத்தில், “மனக்காணமான இராசராசப்பேரளம்” என்று உப்பளங்களில் இருந்து வரும் வருவாய் கொண்டு விளக்கு எரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளது*17. இந்த மனக்காணம், பின்னர் மரக்காணமாக மறுவி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

அகழாய்வின் நோக்கமும் அகழாய்வும்

இது பண்டைய துறைமுகப்பட்டினமா என்பதை அறியவும், இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மனக்காணமா எனப் பல கேள்விகளுக்கு விடைகாணும் விதமாகவும் இங்கு அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட மண் மேடுகளில் மிகவும் உயரமான பகுதியைத் தேர்வு செய்து, ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

அகழாய்வின் தோற்றம் – மரக்காணம்

இங்கு உச்சிமேடு, கச்சிமேடு, அழகன்குப்பம், கைப்பாணிக்குப்பம் என்ற பகுதிகள் உள்ளன. இப்பெயர்களின் உட்பொருளைப் பார்க்கும்போது இவை உயர்ந்த மேடு, கூட்டம் கூடும் இடம், அழகுபடுத்தக்கூடிய பகுதி, கைவினைஞர்கள் தங்கள் கைத்திறமையை வெளிப்படுத்திய பகுதி எனக் கருத இடமளிக்கின்றன. மேலும், இப் பகுதியில் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டபோது, பண்டைய கால பானை ஓடுகளும், காசுகளும் கிடைத்துள்ளன. இதையடுத்து, இங்கு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மூலம் ஐந்து அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டன*18. அகழ்வில் 27 சுடுமண் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. கெண்டியின் மூக்குப் பகுதிகள், சுடுமண் புகைப்பான் (Terracotta Smoking Pipe) பகுதிகளும், சதுரங்கக் காய்களும், பணியார சட்டி, உடைந்த மூடிப் பகுதிகள், சுடுமண் உருவ பொம்மைகளின் கால் பகுதிகளும் கிடைத்துள்ளன. இவற்றில், முக்கியமான தொல்பொருட்கள் நாணயங்களே ஆகும். அனைத்தும், செம்பு நாணயங்களே. சோழர் காலம் முதல் விஜயநகர மன்னர்கள் வெளியிட்ட காசுகள், மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட காசுகள் வரை தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளன.

மரக்காணம் – அகழாய்வில் கிடைத்த நாணயங்கள்

பானை ஓடுகள்

1. கருப்பு நிற பானை ஓடுகள் (Black Ware)

2. சிவப்பு நிற பானை ஓடுகள் (Red Ware)

3. ரௌலட்டட் ஓடுகள் (Rouletted ware)

4. ஆம்போரா (Amphorae)

5. கருப்பு சிவப்பு பானை ஓடுகள் (Black and Red Ware)

6. சொரசொரப்பான பானை ஓடுகள் (Coarse Red ware)

என, அனைத்துவகையான பானை ஓடுகளும் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன.

இங்கு, சங்ககாலப் பானை ஓடுகளுடன், உரோமானியப் பானை வகையைச் சார்ந்த ரௌலட்டட் மற்றும் ஆம்போரா போன்றவையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கக்கடலின் கரையில் அமைந்த நகரங்களில் இதுவும் ஒன்று. முதலில் கண்டறியப்பட்ட அரிக்கமேடு என்ற வணிக நகரத்துக்கு அருகில் அமைந்த நகரமாகும். வங்கக்கடலில் அமைந்த வணிக நகரங்கள் புலிக்காட் (பழவேற்காடு) முதல் மாமல்லபுரம், சட்ரஸ் (சதுரங்கப்பட்டிணம்), அரிக்கமேடு, கடலூர், காரைக்காடு, மரக்காணம் என இப்பட்டியல் கொற்கை வரை தொடர்கிறது. கடற்கரையில் வணிகத்தலங்கள் அதிகரிக்கக் காரணம், தமிழக மக்களின் கலைச் சிறப்பு வாய்ந்த வேலைப்பாடுகள் மிக்க பொருட்களான சங்கு வளையல்களும், வாசனைத் திரவியங்களும், சுவை மிகுந்த (Spices) நறுமணப் பொருள் வகைகளுமே ஆகும்.

இவ்வகழ்வாய்வு மூலம், சங்க காலத்தில் ஒரு பெரிய நகரமாகவும், சிறந்த வணிகத்தலமாகவும் மரக்காணம் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும், இப் பகுதி மக்கள் உரோமானிய நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் தெளிவாகிறது. இதன் காலம், பொ.ஆ. 100 முதல் பொ.ஆ. 1400 வரை என்றும், இங்கு சங்ககாலம் முதல் விஜயநகரப் பேரரசு காலம் வரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்துள்ளனர் எனவும் அறியமுடிகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *