கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 16
- வாழை
தமிழகத்தில் தொன்றுதொட்டு பயிரிடப்பட்டுவரும், தமிழச் சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்துவிட்ட, நெல், கரும்போடு முதலிடம் வகிக்கும், முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாவரமாகும் வாழை. இதன் அனைத்து உறுப்புகளும் பயன்படக் கூடியவை. வாழையைக் கிழங்குமூலம் பயிரிடுவார்கள். இதன் பல இனங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன.

வாழை அறிவியல் வகைப்பாட்டில் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். இது இலத்தீன் மொழியில் மூசா (Musa) எனப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன்முதலாக பப்புவா நியூகினியில் பயிரிடப்பட்டது. இன்று அனைத்து வெப்பவலயப் பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.
வாழை முதன்முதலாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்பட்டதெனினும், சிலவேளைகளில் அலங்காரச் செடியாகவும், நார் பெறுவதற்காகவும், வேறு தேவைக்காகவும் பயிரிடப்படுகிறது. உறுதியாக, உயரமாக வளரும் வாழையைமரமாகக் கருதுவதுண்டு. ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி போலித் தண்டாகும். சில இன வாழைகளின் போலித் தண்டு 2 முதல் 8 மீட்டர் உயரம் வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்ற பிறகு போலித்தண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது.

வாழைப்பழம் முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாகத் தோற்றமளிக்கும். ஆனால் வாழைப்பழத்தின் நிறமும், அளவும், வடிவமும், இனத்துக்கு இனம் வேறுபடும். வாழைக்குலையில் வாழைப்பழங்கள் வரிசையாகக் கொத்துக்கொத்தாய் அமைந்திருக்கும்.
நீண்டிருக்கும் வாழையின் முகை, மகளிரின் முடிந்த கூந்தலைப் போன்றிருப்பதாக நற்றிணையும் (225:3-4), மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை, “வாழைப்பூ எனப் பொலிந்த ஓதி” என்று சிறுபாணாற்றுப்படையும் (வரிகள் 21-22) கூறுகின்றன.
சோழநாட்டின் சிறப்பைக் கூறுமிடத்து, குலைகளையுடைய தென்னை, குலைகளுடைய வாழை, பாக்குமரங்கள், மஞ்சள், மாமரங்கள் போன்றவற்றின் விளையுள் நீங்காத வயல்களைக்கொண்டது சோழநாடு என்று பட்டினப்பாலை (வரிகள் 16-18) கூறுகிறது.
தோப்பிலுள்ள உழவர் மனைகளில் பலாப்பழம், தெங்கின் இளநீர், பனையின் நுங்கு போன்றவற்றோடு, பெண்யானையின் கொம்பையொத்த குலையிலிருந்து முதிர்ந்து வளைந்த வெள்ளிய வாழைப்பழமும் விருந்தினர்க்குக் கிடைத்ததைப் பெரும்பாணாற்றுப்படை (வரிகள் 356-360) சுட்டுகிறது.
பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை, “வாழைப்பூவின் வளைமுறி சிதற” என்று புறப்பாடல் (237:11) குறிப்பிடுகிறது.
காம்பில் செருகப்பட்ட வேல், யானையின் மத்தகத்தில் குத்திற்று என்று கூறும்படி, வாழையின் முறைப்பட மலர்ந்தபூக்கள் தவிர, உதிராத வாழையின் பூ, அருகிலிருந்த மலைப்பாறைகளில் படிந்தன. அம்மலைப்பகுதியில் சோலையாக விளங்கும் வாழையின் காய்கள் நெருங்கிய குலைகள் மிகவும் நெகிழும்படி பழுத்தன என்று மலைபடுகடாம் (வரிகள் 129-132) சுட்டுகிறது.
வாழையின் பெரிய பூவானது மடல்கள் முறையாக மலர்ந்து உதிர்ந்து, எஞ்சிய குவிந்த மொட்டும் வீழ்ந்து விட்ட குலையைப் போன்று ஆண் மான்களின் முறுக்குடைய கொம்புகள் இருந்தன என்பதை அகப்பாடல் (134:10-11) குறிப்பிடுகின்றது.
கொடிய கண்களையுடைய புலியின் பாதம்போல, வாழையினது வளைந்த காய்கள் குலைகள்தோறும் தொங்கும் என்று கலித்தொகை (43:24-25) பாடுகிறது.
வலிமையுடன் கடுமையான சினத்துடன் போரிட்ட யானையின் வெண்மையான தந்தம் குருதிபடிந்து சிவந்திருக்கும். அத்தந்தம்போல வாழையின் கூரியதும், உயர்ந்து காணப்படுவதுமான கொழுத்த அரும்பு தோற்றமளிக்கும் என்று நயமாக நற்றிணை (225:1-3) கூறுகிறது.
நீரூற்று உள்ள நிலங்களில் முளைத்திருக்கிற வாழைமரங்களிலிருந்து இற்று உதிர்ந்த பழங்களைக் கயல்மீன்கள் தின்று சேற்று நிலங்களில் துள்ளிவிளையாடும் வயல்கள்சூழ்ந்த திருவெள்ளியங்குடி என்று பெரிய திருமொழி (4.10.6) சுட்டுகிறது.
பலாமரங்களும், செண்பக மலர்களும் குருக்கத்திச் செடிகளும், மாமரங்களும், வாழைமரங்களும் ஆகியவற்றால் சூழப்பட்டு, வாசனை வீசும் பாக்குமரங்கள் ஓங்கி வளரப்பெற்ற திருநாங்கூர் என்பதைப் பெரிய திருமொழி (4.2.1) புலப்படுத்துகின்றது:
திருவிழாக்களிலும் திருமணங்களிலும் பூவோடு கூடிய வாழைமரங்களை நுழைவாயிலில் நாட்டுவதைக் காண்கின்றோம். வாழைமரத்தின் ஒவ்வோர் உறுப்புமே மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளாகக் காணலாம். இலைகள், பட்டைகள், காய்கள் எல்லாம் வரிசைவரிசையான ஒருவகை ஒழுங்குக்கு உட்பட்டு அமைந்திருப்பதைக் காணலாம். வாழைப்பூவும் தன்னகத்தே வரிசையாக அமைந்துள்ள பூவொழுங்கு முறையைக் கொண்டுள்ளது; இதனால் ஏதோ ஒரு அறமுறையை மக்களுக்கு உணர்த்தவே அஃது இவ்வாறு ஒழுங்கமைப்பினைக் கொண்டிருக்குமோ என்று நினைக்கத் தோன்றும். மேலும், வாழைமரம், தான் தாங்கும் அளவிற்கே குலைகளில் காய்ச் சீப்புகளை அமைத்துக் கொள்ளுதலைக் காணலாம். இதற்கேற்பவே காயாகும் பூக்களைத் தக்கவைத்துக்கொண்டு ஏனைய பூக்களை உதிர்த்துவிடும்; வாழைப்பூவில் காயாகும் பூக்களைத் தவிர, எஞ்சிய வாழைப்பூவை மக்கள் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். தன்னால் இயன்ற வரையில் பிறர்க்கென வாழ்தலே, அதுவும் தன்னலமின்றி ஒழுங்குற வாழ்தலே வாழையின் வாழ்வாகக் காண்கின்றோம் (செ. வைத்தியலிங்கன், மு. நூ., ப. 175).
மருத்துவப் பயன்கள்
வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப்பயன் கொண்டவை. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகள் கரைந்து இரத்தம்சுத்தமாகும். இதனால் இரத்தமானது அதிகமான பிராணவாயுவை உட்கிரகிப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகித்து, இரத்த அழுத்தம், இரத்தசோகைபோன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
இரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்; செரிமானத் தன்மை அதிகரிக்கும்.
வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்தமூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.
வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக்கோளாறுகள், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு அல்லது இரத்தப்போக்கின்மை, வெள்ளைபடுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இந்நோய்கள் நீங்கும்; மலட்டுத் தன்மையைப் போக்கும்.
ஈறுவீக்கம், புண் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்; வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும். கை-கால்களில் ஏற்படும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும்; தாதுவை விருத்திசெய்யும். நரம்புகளுக்கு வலுவூட்டும்; குறிப்பாக மூளைநரம்புகளின் சூட்டைத் தணித்து, மூளைக்குப் புத்துணர்வைக் கொடுக்கும் என்று கூறுவர் (நக்கீரன் – தமிழ் இணையம் – மலரும் மருத்துவமும், வாழைப் பூ).
வாழைப்பழம்
பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச் சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவகுணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்கநாடுகளான கோஸ்டா ரிகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களைக் குணமாக்கும். செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. இதில் 50 விழுக்காடு நார்ச்சத்து காணப்படுகிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். பல்வலி, பல்லசைவுபோன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழை குணமாக்கும். சொறிசிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல்நோய்களுக்கு இது சிறந்த நிவாரணம். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவில் ஒரு செவ்வாழை சாப்பிட்டுவந்தால் 48 நாட்களில் நரம்புகள் பலம்பெறும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர் தினமும் ஆளுக்கு ஒரு வாழைப்பழம் உண்டு, அரை தேக்கரண்டி தேன் அருந்தவேண்டும்; இவ்வாறு 40 நாட்களுக்குத் தொடர்ந்து உண்டுவர உறுதியாகக் கருத்தரிக்கும் எனக் கூறப்படுகிறது. தொற்றுநோய்க் கிருமிகளைக் கொல்லும் அரிய ஆற்றல் செவ்வாழையில் உள்ளது என்பர் (கல்விக்களஞ்சியம், செவ்வாழை – மருத்துவப் பயன்கள்).
திருநெல்வேலி மாவட்டத்தில் பூவில்லாச் சுண்டன் என்ற பெயருடைய ஒருவகை வாழைப்பழம் மிகவும் சிறப்பானது. இந்தப் பழம் வாழைப்பூ இல்லாமலேயே தோன்றுகின்றதாம்.
- வள்ளி

சங்கப் பாடல்களில் வள்ளி குறித்த செய்திகளைக் காண்போம்:
பசிய இலைகளையுடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டினைத் தலைவன் கடந்து சென்றதை,
“பாசிலை
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே”
என்று குறுந்தொகை (216:1-2) குறிப்பிடுகிறது. சுருள்தலைகொண்டது வள்ளிப்பூ; அதை இடையிடையே இட்டுக்கட்டிய உருட்சியைக்கொண்ட, கொத்தாக உள்ள கடப்பம் பூமாலை முருகன் அணியும் மணம் வீசும் மாலையாகும் எனப் பரிபாடல் (21:10-11) சுட்டுகிறது.
நீலமணியை ஒத்த மலைகளிடையே உள்ள இளமயில்கள் ஆடி மகிழும் வள்ளிக்கொடி படர்ந்த கானங் கிழவோன் என ஐங்குறுநூறு (250:2-3) சுட்டுகிறது. முதிரும் காயையுடைய வள்ளியங்காடு என்பதை, ‘முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்குஒழிய’ என்று முல்லைப்பாட்டு (வரி 101) கூறுகிறது.
source : tamizhtharakai.wordpress.com