தொண்டி அருகே ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி கண்டுபிடிப்பு !
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிற்பம் கிடைத்துள்ளன. மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ள கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவர் அங்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் சமண மதத்தை பின்பற்றுவோர் சங்க காலம் முதல் இம்மாவட்டம் முழுவதும் இருந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சுந்தரபாண்டியன் பட்டினம் பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் இடையமடம் என்றும், ராமர் பாதம் என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட பழுதடைந்து இடிந்த நிலையில் இருந்த இரு கோயில்கள் இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் தொல்லியல் ஆய்வாளர் வே.இராசகுரு, வன்னி வயல் ஆசிரியர் பரமசிவம், கொடிப்பங்கு ஆசிரியர் முத்துராமன், வட்டானம் ஆசிரியர்கள் மிக்கேல்ராச், இராபர்ட் புரோமியர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு சமணர்களின் 23 ஆம் தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் புடைப்பு சிற்பம், மானசுதம்பம், பாத வழிபாடு, கல்லாலான சித்த சக்கரம்,ஆகியவை இருந்ததால் அது ஒரு சமணப்பள்ளி என்பதைக் கண்டுபிடித்தனர். இது பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராசகுரு கூறியதாவது, இந்து கோயில்களில் இருக்கும் கொடிமரம் போன்ற அமைப்பு மானஸ்தம்பம் ஆகும். இதன் கீழ் பகுதியில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இங்குள்ள மானஸ்தம்பம் 5 அடி உயரத்தில் ஒரே கல்லால் சதுர வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இதில் சிற்பங்கள் ஏதுமில்லை.
முன் மண்டபத்தின் வலதுபுறம் உள்ள சுவரில் 27 செ.மீ. உயரமும் 17 செ.மீ. .;அகலமும் உடைய நின்ற கோலத்திலான பார்சுவநாதரின் புடைப்பு சிற்பம் உள்ளது. அவர் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையிலும், முதுகின் பின்புறம் அதன் உடல் சுருண்டு உள்ளது போன்ற இச்சிற்பம் மதுரை கீழக்குயில்குடி பேச்சிப்பள்ளம் பகுதியில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தை ஒத்துள்ளது. எனவே இப்பள்ளி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம். இது கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறையில் அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் கல் சிற்பம் இருந்ததாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் அது காணாமல் போனதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள்
.கல்லாலான சித்த சக்கரம்
இங்கு கல்லாலான சித்த சக்கரம் வெளிப்புறச் சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரம் ஏதுமின்றி தட்டையாக உள்ளது. சதுரவடிவ மற்றும் எண் பட்டை தூண்களில் தரங்க போதிகை அமைப்பு காணப்படுகிறது. இது பாண்டியர் காலக் கட்டிடக்கலை அமைப்பில் உள்ளது.
முன்மண்டபத்தின் உள்புற சுவரில் எதிர் எதிரே அமைந்த நிலையில் பெரிய அளவிலான மீன்களின் இருபுடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மூலஸ்தானத்தின் உள்ளே சிறிய அளவில் மூன்றும், பெரிய அளவில் ஆறுமாக ஒன்பது மீன்கள் புடைப்புச்சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீன் சின்னங்களைக் கொண்டு, இப்பள்ளி சமணர்களின் பதினெட்டாம் தீர்த்தங்கரரான அர நாதருக்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் இதன் உள்பகுதியில் சுவர் ஓவியங்கள் இருந்து அழிந்து போன தடயங்கள் காணப்படுகின்றன.
சமணர்களின் நான்கு வகை தானங்கள் ஒன்று மருத்துவதானம். முன் மண்டபத்தின் சுவரில் ஒருவர் உரலில் மருந்து இடிக்கும் ஒரு புடைப்பு சிற்பம் உள்ளது. இப்பகுதியில் கொக்கி முள் ஆதண்டை, சங்கஞ் செடி ஆகிய மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன. இதன் மூலம் சமண முனிவர்கள் இங்கு மக்களுக்கு மருத்துவ சேவை.;செய்துள்ளார்கள் என அறியமுடிகிறது. இப்பள்ளியில் நான்கு துண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. ஒரு கல்வெட்டு சிதைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள மூன்று கல்வெட்டுகள் மூலம் இது கி.பி. 1180 முதல்கி.பி 1190 வரை அரசாண்ட மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்தியது என தெரிகிறது. இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் காணப்படுகிறது. வேறு செய்திகள் எதையும் அறிய முடியவில்லை.
இப்பள்ளியில் இருந்து, ஐம்பது அடி தூரத்தில் பாதை கோயில் உள்ளது.இதை ராமர் பாதம் என்கிறார்கள். நான்கு தூண்களுக்கு நடுவேகல்லால் அமைக்கப்பட்ட ஒரு ஜோடிபாதம் உள்ளது. இதன் ஒரு தூண்களிலும் வணங்கிய நிலையிலுள்ள இருவரின் சிற்பம் உள்ளது. இவர்களின் தலைக்கு மேல் ஒரு குடை அமைப்பு உள்ளது. எனவே இது சமணர்களால் அமைக்கப்பட்ட பாதம் கோயில் என்பது உறுதியாகிறது. இவர்கள் இப்பாதக்கோயிலை அமைத்தவர்களாய் இருக்கலாம். இதன் முன்புறம் கருடாழ்வார் சிற்பம் சிறு சன்னதி அமைத்து நிறுவப்பட்டுள்ளது. இது சுந்தரபாண்டியன் பட்டினத்தில் இருந்து பின்பு அழிந்துபோன தசரத ராம விண்ணகராழ்வார் என்ற பெருமாள் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டது இருக்கலாம்..;
இப்பகுதியில் விசயநகர மன்னர்கள் காலத்தில் மதங்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில்,சைவ, வைணவ கோயில்களும், சமண, புத்த பள்ளிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்போதும் இப்பகுதியில் பல கோயில்கள் இடிந்த நிலையில் காணப்படுவது இதற்குச் சான்றாக உள்ளது. கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிருந்த சமண புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மதங்களுக்கு மாறியதால், இப்பகுதிகளில் இருந்த சமண, புத்த.;பள்ளிகள் கைவிடப்பட்டு இடிந்துபோன நிலையில், பிற்காலத்தில் அவை மடங்களாகவோ, சத்திரங்களாகவோ, கோயிலாகவோ மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரை இடையமடம் சமணப் பள்ளியாக வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும். அதன் பின்பு இது சமணர்களால் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் இருந்ததை சேதுபதிகள் காலத்தில் அப்பகுதி மக்கள் புனரமைத்து மடமாகப் பயன்படுத்தி இருக்கலாம். கிழவன் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் எல்லை குறிப்பிடும் போது இடையமடம் குறிப்பிடப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஆனாலும் கற்களை மாற்றி அமைத்து கட்டப்பட்டுள்ளதால் இதன் அமைப்பு மாறியும் சிற்பங்கள் சிதைக்கப்படும் உள்ளன. பார்சுவநாதர் சிற்பம் சுண்ணாம்புசுதை கொண்டு பூசி மறைக்கப்பட்டிருந்துள்ளது. சுண்ணாம்பு பெயர்ந்து விழுந்த பின் சிற்பம் தற்போது வெளிப்பட்டுள்ளது. இங்குள்ள மூலஸ்தான நுழைவு வாயிலின் மேல் பகுதியில் உள்ள கசலட்சுமி சிற்பம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இதன் பின்புறம் வேயப்பட்டுள்ளது ஓடுகள் கி.பி. 1865 இல் கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள வையாக உள்ளன. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இது மடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
புல்லக் கடம்பன் இப்பகுதி புல்லக்கடம்பன் என்ற ஊராட்சியில் உள்ளது. இது வருவாய்த்துறை பதிவுகளில் மட்டும் காணப்படும் ஒரு அழிந்த கிராமம். எளிதில் பொருள் புரியும் கற்பிக்கும் ஆசிரியர்களும், புலன் உணர்ந்த அறிஞர்களும் புல்லன் எனப்பட்டனர். சமணர்கள் ஆசிரியர்களாக இருந்து கல்வி சேவை புரிந்தவர்கள். மேலும் இம்மாவட்டத்தில் புல்லன் என பெயர் உள்ள ஊர்கள் அனைத்தும் சமணர் தொடர்புடையதாக உள்ளது குறிப்பிடத்தகுந்தது. எனவே இப்போது சமணப்பள்ளி உள்ள ஊரே அழிந்துபோன புல்லக்கடம்பனாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். கோரிக்கை சமணர்களால் அமைக்கப்பட்ட குகைப்பள்ளிகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்பட்டாலும் கட்டுமானப் பள்ளியாக தென்மாவட்டங்களில் உள்ளது சிவகங்கைமாவட்டம் அனுமந்தக்குடியில் மட்டுமே.அந்த வகையில் தென் மாவட்டங்களில் கட்டுமான பள்ளி கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இதை பழுது நீக்கி பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக.; தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
(நன்றி : திருப்புல்லாணி பாரம்பரியமன்றம், திரு.வே.இராசகுரு)
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மிகப் பழமையான சமணப் பள்ளி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.