கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 18
- ஞாழல்

தமிழ்க் கவிஞர்கள் பலரால் பாடப்பெற்று, இலக்கியச் சோலைக்கு எழிலூட்டிய பல மலர்களுள் ஞாழலும் ஒன்றாகும். ஞாழல்மரம் இக்காலத்தில் புலிநகக் கொன்றை (Tiger claw tree) என்னும் பெயர்கொண்டு விளங்குகிறது. இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறு கடுகுபோல் இருக்கும். (குறுந்தொகை, 50:1) ஞாழல் ‘ஸ்டெர்கூலியேசீ’ (Sterculiaceae) எனும் கோக்கோமர வகுப்பைச் சேர்ந்தது.
வளரிடம்
நெய்தலுக்குரிய சிறந்தமரங்களுள் ஒன்று ஞாழல்
“ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்,
கொழுநிழல் ஞாழல்”
என்று கலித்தொகை (56:1-2) ஞாழலின் வளரிடத்தை அழகுறக் கூறுகின்றது.
இலை
ஞாழலின் இலைகள் சிறியவை;அடிப்புறம் பளபளப்பாக வெள்ளி பூசியது போன்றுள்ள இவ்விலைகளை ஆங்கிலத்தில் ‘looking glass leaf’ எனவும், தமிழில் ‘கண்ணாடியிலை’ எனவும் குறிப்பர். இதன் அழகு கருதியே இதனைக் கடலாடு மகளிர் தழையுடையாகப் பயன்படுத்தினர். “தழையோர், கொய்குழை அரும்பியகுமரி ஞாழல்” என்கிறது நற்றிணை(54:8-9).
இணர்
ஞாழல் கொத்துக்கொத்தாய்ப் பூக்கக் கூடியது. இதன் இணர் பற்றி, “எக்கர் ஞாழல் இணர்ப்படு பொதும்பர்” எனவும், “ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்” எனவும் ஐங்குறுநுற்றுப் பாடல்கள் (144:1, 146:1) சுட்டுகின்றன. இவை தாழ்வாகத் தொங்கும் தன்மையுடையவை என்பதை, “எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினை” என்று ஐங்குறுநூறும் (142:1) “ஞாழல் அம்சினைத் தாழ்இணர்” என நற்றிணையும் (106:1) குறிப்பிடுகின்றன.
மலர் மலரும் காலம்
ஞாழல் மலர்க்கூடிய காலம் குறித்தும் இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. “ ………. குயில் பயிரும், கன்னியிள ஞாழற் பூம்பொழில்” எனக் குயில் கூவும் காலத்தில் ஞாழல் மலர்வதாகவும், ஞாழல் புன்னையுடனும் மருதுடனும் மலர்ந்து மணம் பரப்புவதாகவும் சொல்லப்படுவதால் புன்னை, மருது இவை மலரும் காலத்தில் ஞாழல் மலர்கிறது எனலாம். ஞாழல் மழைக்கால ஆரம்பத்தில் மலர்வதாகக் கூறுகிறார் டி. பிராண்டிஸ் என்னும் நிலையியல் உயிர்நூலார் (D. Brandis,“Indian trees’, Constable and Company Private Ltd. London,1911).
மலர் நிறம்
ஞாழல் மலர் பசுமை கலந்த இளஞ்சிவப்பு நிறம் உடையது. “செவ்வீ ஞாழல் கருங்கோட்டு இருஞ்சினை” என அகநானூறு (240:1) இதன் மலர் நிறம் பற்றிக் கூறுகிறது. “பசுநனை ஞாழல்” எனவும், “ஏனோன்போல் நிறங்கிளர்பு கஞலிய ஞாழல்” (குறுந்தொகை, 81:2, கலித்தொகை, 26:4) எனவும் இம்மலர் சிறப்பித்துக் கூறப்படுகிறது. செந்நிற ஞாழலின் கிளைகள் கருநிறம் கொண்டவை. காதலன் பிரிவால் காதலி மேனியில் ஞாழல் பூப்போல பசப்பு தோன்றியது எனக் கலித்தொகை (131:19) குறிப்பிடுகிறது.
இம்மலர் பொன்னிறத்திலும் பூக்கும். இதனையே ‘பொன்னிணர்’ எனவும், ‘ஒள்ளிணர்’ எனவும், ‘பொன்வீ ஞாழல்’ எனவும் புலவர்கள் குறிப்பிடுகின்றனர் (நற்றிணை, 191:1, அகநானூறு, 70:9)
மலர் உருவம்
ஞாழல் மலர்கள் மிகச்சிறியவை; இதன் புற இதழ்கள் ஓர் அங்குலத்தில் ஆறில் ஒரு பங்கு நீளமே உடையவை. அக இதழ்கள் இல்லை. இவை ஒருபால் பூக்கள்; ஆண் பூக்களில், நான்கு அல்லது ஐந்து பிரிவாகப் பிளந்த புற இதழினுள் நான்கு அல்லது ஐந்து மகரந்தக் கேசரங்கள் இணைந்து காணப்படும். பெண் பூக்களில், மகரந்தக் கேசரங்களுக்குப் பதிலாக நான்கு அல்லது ஐந்து சூலறைகளைக் கொண்ட சூலகம் மட்டும் காணப்படும். இச்சூலறைகள் (Carpels) ஏறக்குறைய தனித்தனியானவை போன்று இருப்பன.
இதன் சிறுமை கருதி இதனை வெண்சிறு கடுகுடனும், ஆரல்மீன் முட்டையுடனும் இணைத்துப் பேசுவர்.
ஞாழலின் கனி வெடியா உலர்கனி (Dry indehiscent fruit). ஏறக்குறைய தனித்தனிச் சூலறைகள் கொண்டவை போன்ற சூலகத்தினின்றும்வந்த கனிகள். நான்கைந்து கனிகள் சேர்ந்து கொத்தாக இருப்பதுபோல இவை கொத்தாக ஐந்து கனிகள் இணைந்து இருக்கும். ஒவ்வொரு தனிக் கனியும் படகுபோன்ற உருவுடன் நுனியில் சற்றே வளைந்து, கூர் நுனியுடன் காணப்படும். இவ்வமைப்பு காண்பதற்குப் புலிநகம் போன்று இருக்கும். ஐந்து கனிகள் அடியில் இணைந்து காணப்படுவது, புலியின் பாதத்தில் ஐந்து விரல்கள் இணைந்துள்ளதுபோல் இருப்பதால் இதனைப் ‘புலிநகக் கொன்றை’ என்றனர் பழந்தமிழ் உரையாசிரியர்கள் (இரா. காஞ்சனா, ‘ஞாழல்’, தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள், ப. 245).
கன்னியர் இதன் இலையை ஆடையாக உடுப்பர்; பூ மணமுள்ளது; பூ மஞ்சரியில் இருந்து உடனே விழுந்து விடும்; மஞ்சரியில் நிறைய பூக்கள் காணப்படும்; மகளிர் இதனை அணிவர். “வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவியெங்கும், ஓங்குமா காவிரி வடகரை” என்று தேவாரத்தில் (சம்பந்தர் தேவாரம், 3.91:1) ஞாழல் தாவரம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
ஞாழலின் பெயரை நிகண்டுகள் குழப்பியுள்ளன. பலினி மற்றும் நாகம் (சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு மற்றும் சேந்தன் திவாகரம்) என்ற மற்ற பெயர்கள் இதற்குச் சூட்டப்பட்டுள்ளன.
ஞாழல் – சூடும் பூ
குறிஞ்சிநில மகளிர் மணம் கமழும் ஞாழல் மலர்க் கொத்தைத் கூந்தலில் சூடிக்கொள்வர். மகளிர் விரும்பிச் சூடுவதால் இதற்குக் ‘குமரி ஞாழல்’ (நற்றிணை, 54:9) என்றும், ‘கன்னி இளஞாழல்’ (திணைமொழி ஐம்பது, 49:3) என்றும் பெயர் உண்டு. ஞாழலின் தன்மை
பயன்பாடு
ஞாழலால் தழையாடை புனைவர்; ஞாழல்மரத்தில் தழைநார்க் கயிற்றில் மகளிர் ஊஞ்சல் ஆடினர்; கடலாடு மகளிர் ஞாழலைக் கொய்துகொண்டு சென்று விளையாடுவர். ஞாழலில் கடற் காக்கைகள் கூடு கட்டும் (ஐங்குறுநூறு, 191:3; அகநானூறு, 20:5-6, 216:8; ஐங்குறுநூறு, 169).
- மௌவல்

இலக்கியங்களில் மௌவல் மலர்
குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர். இச்செய்தி, “மனைநடு மௌவலொடு ஊழ் முகை அவிழ” என்ற நற்றிணைப் பாடலில் (115:6) கூறப்படுகிறது. ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும் (நற்றிணை, 122:3-4). மௌவல் மலர்கள் மகளிர் சிரிப்பதுபோலப் பூக்கும் என்பதை, “மாதரார் முறுவல்போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப” என்று கலித்தொகை (27:4) சுட்டுகிறது. சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர். இதனைச் சங்கப் பாடல்கள், “மணமௌவல் முகைஅன்ன மாவீழ் வார் நிரைவெண்பல்” என்று மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன (கலித்தொகை,14:3). “மனைமரத்து எல்லுறும் மௌவல் நாறும் பல்இருங் கூந்தல்” என்று குறுந்தொகை (19:3-5) கூறுகிறது. முல்லைக்கொடி வெண்மையாகப் பூக்கும். நொச்சிச் செடி கொத்துக் கொத்தாகக் கருமையாகப் பூக்கும். நொச்சியின் மேல் முல்லை படர்ந்திருந்தது. வெண்மையும், கருமையும் கலந்து கண்ணுக்கு விருந்தளிப்பதை, “மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சி” என்று அகப்பாடல் (117:1) சுட்டுகின்றது.
‘மான்கறி கற்ற கூழைமௌவல் சூழ் மயிலைப் பந்தர்’ என்று சீவக சிந்தாமணியில் (பாடல்485) மௌவல் கூறப்பட்டுள்ளது.
- கொகுடி

கொகுடி என்னும் மலரை இக்காலத்தில் ‘அடுக்கு மல்லி’ என்கின்றனர். இதை நறுமணம் கொண்ட குளிர்ச்சி மிக்க பூ எனக் கபிலர் (குறிஞ்சிப்பாட்டு, வரி 81) குறிப்பிடுகிறார்.
இலக்கியங்களில் கொகுடி
“நறும் பாதிரியு நாண்மலர்க் கொகுடியும்” என்று பெருங்கதையும் (இலாவண காண்டம், 12:20) “குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி” எனச் சூளாமணியும் (தூதுவிடு சருக்கம்) கொகுடியைக் குறிப்பிடுகின்றன.
கோங்கு, குரவம், புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக்கொன்றை, பாதிரி ஆகியவை விரவி வரும் காவிரியின் வடகரை எனத் தேவாரப் பாடல் (மூன்றாவது திருமுறை, 91:1) குறிப்பிடுகிறது.
- சேடல்

சேடல் மலரை அறிஞர்கள் இக்காலப் பவளமல்லி என்றும் பாரிசாத மலர் என்றும் குறிப்பிடுகின்றனர் பவளமல்லிப் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும். எனவே இதனைச் சேடல் [சிவப்பு] எனல் பொருத்தமானதே. தென்-தென்கீழக்கு ஆசிய நாடுகளில் வளரும் இது சிறுமரவகையைச் சேர்ந்தது. இது இந்தியா முழுவதும் வளரக்கூடியது. வீட்டுத் தோட்டங்களிலும், நந்தவனங்களிலும் வளர்க்கப்படுகிறது.
இம்மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது. இப்பூக்களுக்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற் காலையில் உதிரத் தொடங்கும் இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும்.
இம்மரம் 3-4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலில் அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகள் உடையனவாகக் காணப்படும். கிளைநுனிகளில் பூக்கள் பூக்கும். பூக்கள் ஐந்திலிருந்து ஏழு இதழ்களைக் கொண்டவையாக இருக்கும். இதனைப்போலவே இரவில் பூக்கும் இன்னொரு தாவரம் மரமல்லி ஆகும்.
குறிஞ்சிப்பாட்டு தவிர வேறு சங்கப் பாடல்களில் இம்மலர்பற்றிய குறிப்பு காணப்படவில்லை. சிலப்பதிகாரத்தில், “சேடல் நெய்தல் பூளை மருதம்” என்றும், “சேடலும் செருந்தியும் செண்பக வோங்கலும்” (சிலப்பதிகாரம், 22:69, 13:153) என்றும் சேடல் குறிப்பிடப்படுகின்றது.
சேடல் என்பதற்கு உச்சிச்செலுந்தில் என்னும்மரம் என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
- செம்மல்
செம்மல், முல்லைப் பூ வகையைச் சேர்ந்தது. இம்மலர் சாதிப்பூ என வழங்கப்படுகிறது. “கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின்” என்று திருவிளையாடற்புராணம் (2475:43) இம்மலரைக் குறிப்பிடுகிறது.

source : tamizhtharakai.wordpress.com