கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 19

  1. சிறுசெங்குரலி

சிறு செங்குரலி என்று கபிலரும், கொங்குவேளிரும் பாடிய இதனைக் கருந்தாமக்கொடி என்றும் கூறுவர். குரலி சிறிய கொத்தான பூக்கள் கொண்டது. மருத நிலத்தது; செம்மை நிறப் பூ;  நீர்க்கொடி என்று குறிப்பிடுகின்றார் கு.வி.கிருஷ்ணமூர்த்தி. (தமிழரும் தாவரமும்,  ப. 100).

ஒளி பொருந்திய செங்குரலிக் கொடியை உடைய நீர் நிலை என்பதை, “ஒண்செங்குரலித் தண் கயம் கலங்கி’ என்று புறப்பாடல் (283 : 1) குறிக்கிறது.

செங்காந்தள்
  1. கோடல்

செங்காந்தள், கோடல் ஆகிய காந்தளின் இரண்டு வகைகள் தமிழிலக்கியத்தில் பலவிடங்களில் கூறப்பட்டுள்ளன. செங்காந்தளும், கோடலும் தனித்தனியாகவே கூறப்படுகின்றன. கல்லாடத்திலும் முல்லைப்பாட்டிலும் ஒரே பாடலில் தோன்றியும், கோடலும் கூறப்பட்டிருக்கின்றன.

              “கோடற் குவிமுகை அங்கை ஆவிழத்

               தோடுஆர் தோன்றி குருதி பூப்ப”                         

              “காலங் கருதித் தோன்றிகை குலைப்பக்

               ……  கோடல் வளைந்த வள்ள ளுகுப்ப”     

என்று முல்லைப்பாட்டிலும் (வரிகள் 95-96), கல்லாடத்திலும் தோன்றியும், கோடலும் தனித்தனி இனமாகவே கூறப்பட்டிருக்கின்றன. சங்கப் புலவர்கள் மஞ்சள் பெரிதும் கலந்த காந்தள் பூவை வெண்காந்தள், கோடல் என்றும், சிவப்பு நிறைந்து காணப்பட்டதைச் செங்காந்தள் அல்லது தோன்றி என்றும் அழைத்ததாகத் தெரிகின்றது.

வெண்காந்தள்

உலகில் பல காந்தள் செடி இனங்கள் இருப்பதாகச் செடிநூல் கூறுகின்றது.

செடி நூலில் காந்தள் பூவில் காணப்படும் மஞ்சள், சிவப்பு நிறங்களின் அளவைப் பொறுத்தும் பூக்களின் உருவைப் பொறுத்தும் காந்தள் செடியின் இனங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

குறிஞ்சிப்பாட்டு ‘ஒண்செங்காந்தள்’ என்று செங்காந்தள் மலரையும், ‘கோடல்’ என்று வெண்காந்தள் மலரையும் குறிப்பிடுகின்றது. முருகப் பெருமானுக்கு ஆறு தலைகள் என்பதால், ஆறு இதழ்கள் மட்டுமே உள்ள காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயரும் உண்டு.

பெண்ணின் கையிலிருந்த வளையல்கள் கோடல் மலர் போலக் கழன்று வீழ்ந்தன என்பதை,

“அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவைபோல்

இலங்கு ஏர் எல்வளை இறை ஊரும்மே”         

“ஊழ் உற்ற கோடல் வீ

இதழ் சோரும் குலை போல,இறை நீவு வளையாட்கு”   

என்று கலித்தொகை (7:15-16, 121:13-14) இயம்புகின்றது. மிக்க சினமுடைய பாம்பின் படம் மேல் நோக்கினாற் போன்று குளிர்ந்த காந்தள் பூவின் மொட்டுக்கள் மணங்கமழுமாறு கட்டவிழ்ந்து மலர்ந்த காட்சியை,

“வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன

 தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழ”

என்ற அகநானூறு (154:6-7) படம் பிடித்துக் காட்டுகின்றது.

“குரவும் தளவும் குருந்தும் கோடலும்”

என்று பெருங்கதையில் கோடல் மலர் பயின்று வந்துள்ளது.

  1. கைதை
கைதை அல்லது தாழம்பூ

பூக்களில் சிலவற்றை இலைப் பூ என்றும் ஓலைப் பூ என்றும் கூறுவர். மருக்கொழுந்து இலைப் பூவாகும். தாழம்பூ ஓலைப் பூவாகும். கைதை மலர் தாழம்பூவின் இனம். பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர் எனக் கூறுவர். கைதை நீர்நிலைகளின் கரைகளில் செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர். “கைதைஅம் தண் புனல் சேர்ப்பனொடு,” “நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை” என்று சங்கப் பாடல்கள் (குறுந்தொகை, 304:7; நற்றிணை, 163:8) கைதை மலரைக் குறிப்பிடுகின்றன.

தாழையை வேலியாகக்கொண்ட அழகிய தோட்டங்களையுடைய ஆரவாரம் மிக்க ஊர் என்பதை, “கைதைஅம் படப்பை எம் அழுங்கல் ஊரே” என்றும், தாழையின் தாழ்ந்த கிளையின் மேலே, விருப்பத்தை உடைய பேடையொடு துன்பத்துடன் வருந்தியிருக்கும் சிறிய கடற் காக்கையை, “கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்,  கடற்சிறு காக்கை” என்றும் அகப்பாடல்கள் (100:18, 170:9-10) சுட்டுகின்றன.

ஞாழற் பூவும், புன்னைப் பூவும், இதழ் விரியும் பூக்களை உடையவாய தாழம்பூவும், செருந்திப் பூவும் கடற்கரை மணலிடத்தே சக்கரப்படையை உடைய திருமாலின் திருத்தோளில் கிடக்கின்ற மாலை போலத் திகழ்ந்ததை  கலித்தொகை (127:1-4) சுட்டுகிறது.

தாழைகள் அருகில் மலர்ந்திருக்க, அதைக் கண்டு கெண்டை மீன்கள் தம்மைப் பிடித்து உண்ண வந்திருக்கிற நாரைகள் என்று எண்ணி அஞ்சுகின்றனவாம். இக்கற்பனைக் காட்சியை,

“அருகு கைதை மலர் கெண்டை

குருகென்று அஞ்சும்” 

என்ற பெரிய திருமொழிப் பாடல் (5.2.9) காட்டுகின்றது.

மருத்துவக் குணங்கள்

தாழம்பூவின் மருத்துவ குணங்களைச் சித்த மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். தாழம்பூவைத் துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்சி, நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி, தேவையான சர்க்கரை கூட்டி, பாகுபதமாய்க் காய்ச்சி வடிகட்டிக் கொண்டால் அதுவே தாழம்பூ மணப்பாகு. இதனை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் வெப்பத்தைத் தணிக்கும்; பித்த நோய்கள் தீரும்; அதிக அளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும்; தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினமும் உபயோகித்தால் அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

தாழம்பூ செடியின் வேரை இடித்துச் சாறு பிழிந்து அதனுடன் வெல்லம் கலந்து உட்கொண்டு வர வெப்ப நோய்கள் தணியும். தாழம்பூ தோல் நோய்களை குணமாக்கும். இப்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கிச் சாறு பிழிந்து அதில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி, காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். தாழம்பூ சாம்பலைக் காயங்களின் மீது பூச புண்கள் குணமாகும்.

தாழம்பூ நீரோடைகளில், ஆறுகளில் புதராக வளர்ந்து இன்மணம்  பரப்புவதுடன் மலடு நீக்கும் மருந்தாகவும் பயன் தருகிறது. இதன் வேரை – வேர்க்கிழங்கை எடுத்து வந்து அதை அரைத்துப் பசும்பாலில் கலந்து வடிகட்டாமலேயே தரலாம்; இதனால் தாய்மை ஏற்படுவது மட்டுமல்ல, ஏற்கனவே உருவான கரு கலையும் ஆபத்தையும் தடுக்குமாம் (போல்ட் ஸ்கை, தமிழ் – உடல் நலம், உஷ்ணத்தைக் குறைக்கும் தாழம்பூ).

மருத்துவக் களஞ்சியத்தில் தாழம்பூவானது வாதம், கபம், மேகம் தொடர்பான பிணியகற்றும் என்று கூறப்படுகிறது. வெக்கை நோய் தீவிரமாய் இருந்தாலும், காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் தாழங்கிழங்கும், தாழம்பூவும் மருந்தாகப் பயன்படுகின்றன.

தாழம்பூவின் பரவலான பயன் – தாழம்பூ செண்ட்; இப்பூவில் சிவப்பு, வெள்ளை என இரண்டு வகை உண்டு. இரண்டிலும் மணம் ஒன்றே. ஆடி – ஆவணியில் வெண்தாழம்பூ மடல் விரிக்கும். மஞ்சள் நிறத் தாழம்பூவைத்தான் செந்தாழம்பூ என்கின்றனர். இது பனிக்காலம் தாண்டி மடல் விரிக்கும். மாசி – பங்குனி மாதங்களில் செந்தாழம்பூ கிட்டும். தாழம்பூ தைலம், நல்லெண்ணையில் காய்ச்சி எடுக்கப்படுகிறது. இது தலைவலிக்கு நல்லது என்பர்.

source : tamizhtharakai.wordpress.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *