கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 6
வெட்சி

சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறங்களில் சிறிதளவு தேன்கொண்ட பூக்களை உடைய சிறு தாவரம். மரங்களின் தீப்பிழம்பு என செல்லமாக அழைக்கப்படும். பெருவாரியான மக்களால் இட்லிப்பூ எனவும் அழைக்கப்படும்.
குல்லை, கெச்சை, சேதாரம் போன்ற பல பெயர்களால் இப்பூ அறியப்படுகிறது. உலகெங்கிலுமுள்ள அயனமண்டலம், உப அயனமண்டல நாடுகளில் தோன்றினாலும் அயனமண்டல ஆசியா, குறிப்பாக இந்தியாவில் இதன் பல்வகைகள் செறிந்து காணப்படுகின்றன.
இப்போது ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இத்தாவரம் 3 முதல் 6 அங்குலம் நீளமுள்ள தோல்போன்ற இலையும், சிறு பூக்களின் கொத்துகளையும் உடையது. அமில மண்ணுக்குப் பொருத்தமான இத்தாவரம் ‘பொன்சாய்’ செய்கைக்கு ஏற்றது. இதன் முகை சிவல் என்ற பறவையின் காலிலுள்ள் முட்களைப்போன்று இருக்கும் என்ற செய்தியை, “இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி” என்ற அகப்பாடல் (133 : 14) தருகிறது. வெட்சிப்பூ பெரியதாக இருக்கும். காம்பு சிவப்பாக இருக்கும். ‘வெட்சி மாமலர்’, ‘செங்கால் வெட்சி’ என்ற இலக்கிய வரிகள் இதனை உணர்த்துகின்றன.
குளிர்ச்சி மிகுந்த வெட்சிப்பூ இதழ்களால் புனைந்த மாலைகளைப் பெண்டிர் சூடியிருந்ததை, “ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்” என்று பரிபாடல் சுட்டுகிறது. செங்கால் வெட்சியின் சிறிய பூக்களை நடுவே விடுபூவாக இட்டு, குவளை, மருதம், சண்பகம், அசோகு போன்ற மலர்களால் சூரர்மகளிர் தம் கூந்தலை அலங்கரித்துக் கொண்டதை, திருமுருகாற்றுப்படை, “செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு” (வரி 21 )என்று குறிப்பிடுகிறது.
காட்டில் தழைத்த, வளைந்த கிளைகளைக் கொண்ட வெட்சியின், முறுக்கு உடையும் பல பேரரும்புகளின் மணம் கமழும் கூந்தலைக் கொண்டவள் தலைவி என்பதை,
“கடற்றின் கலித்த முடச்சினை வெட்சித்
தளைஅவிழ் பல்போது கமழும்
மையிருங் கூந்தல் மடந்தை”
என்ற குறுந்தொகைப் பாடல் (209 : 5-7)உணர்த்துகிறது.
தீப்போல் மலர்ந்த வெட்சிப்பூவை இடையிடையே வைத்துக் கட்டிய துளசிமாலையை மார்பில் அணிந்தவன் திருமால் என்பதை,“எரிநகை இடையிடுபு இழைத்த நறுந்தார்ப், புரிமலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்” என்று பரிபாடல் (13 : 59 – 60) பாடுகிறது.

இது ஒருவகை காட்டுப்பூ. இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது ஊசிபோல அரும்புவிடும். செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும்பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர். இலங்கையில் பெரும்பாலானோர் வீட்டு முற்றங்களில் இம்மலர் பூத்துக்குலுங்குவதைக் காணலாம்.
பழந்தமிழ் மன்னர்கள் போர்புரியும் முன்னர் பறை அடித்து, போர் தொடங்கவுள்ளதால் பசுக்களும், அவைகளை வளர்க்கும் அந்தணர்களும், பெண்களும், நோயுற்றவர்களும், முதியவர்களும் குழந்தைகளும் அவ்விடம் விட்டு நீங்கிச் செல்லுமாறு அறிவிப்பு விடுப்பர். தமிழ்ப் பழங்குடிகள் ஆநிரைகளைச் செல்வமாகக் கருதினர்.ஆதலால் வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து விடுவர். ஆப்போது அவ்வீரர்கள் செந்நிற வெட்சிப் பூவை அணிந்திருப்பர்.
source : tamizhtharakai.wordpress.com