மண் வாசனை : தெக்கத்திச் சொலவடைகள்

இந்தத் தொடரில் நெல்லை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள சொலவடைகள் மட்டும், நெல்லை வட்டார வழக்கு மொழி நடையில் தொகுத்து தர உள்ளேன். நமக்கு இது வரையில் பழமொழிகள் என்ற பெயரில் கிடைத்திருப்பது எல்லாம் பண்டித தமிழில் தொகுக்கப்பட்டவை களாக உள்ளன. பழமொழி தொகுப்பு நூல்களில் பழமொழி அல்லது பல வாக்கியங்கள் பழமொழி என்ற போர்வையில் பதிவாகியுள்ளன. வடமொழிச் சொற்கள், செந்தமிழ் சொற்களும், கொடுந்தமிழ் சொற்களும் விரவிய பல பழமொழிகள் நம்மை அண்ட விடாமல் விரட்டுகின்றன. பழமொழிகள் என்பதும் சொலவடைகள் என்பது ஒன்றல்ல. அவைகளுக்குள் நுட்பமான பல வேறுபாடுகள் உள்ளன. அதுகுறித்து விரிவாக விவாதிக்கவும் சிந்திக்கவும் இடம் உள்ளது. கிராமத்து மக்கள் பேச்சுவாக்கில் பயன்படுத்துகிற சொலவடைகள், வட்டார வழக்கு மொழி நடையில் உலவுகின்றன. அவர்கள் மட்டும் தனியே அகரவரிசைப்படி தொகுத்தால், எதிர்கால நம் சந்ததியினர்களுக்கு, இன்றைய நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். கிராமத்துச் சொலவடைகள் சிலவற்றிற்கு ஒரு வாசிப்பு பொருள் புரியாமல் போகலாம். அத்தகைய-சொலவடைகளும் பின்னால் நாம் அவற்றின் அர்த்தத்தைத் தேடி கண்டுபிடித்து பதிவு செய்யலாம். பொதுவாக சொலவடைகளும் அவை சொல்லப்படும் சூழலை வைத்து பொருள் புரிந்து கொள்ள வேண்டும். சொலவடைகளும் விளக்கம் தேடும் போது அது குறித்து நாம் விவாதிக்கலாம். இத்தகைய சொலவடைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாட்டுக் கலாச்சார கூறுகளையும் தேடி இனங்கண்டு கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புதிய, புதிய கலைச் சொற்களும், மொழி ஆளுமைகளும் இவற்றில் பதிவாகியுள்ளன. சொலவடைகளின் வார்த்தை கட்டமைப்பு, வடிவம், ஓசைநயம் போன்றவைகள் குறித்து விரிவாக ஆராய இடம் உள்ளது. என்று தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று ஆராய முடியாத அளவுக்கு அவர்கள் பழமையான வையாகும். தமிழகம் எங்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள சொலவடைகள் எல்லாம், அந்தந்த வட்டார வழக்கு மொழி நடையில் தொகுத்து நமக்கு ஒரு பெரும் சம்பத்து கிடைக்கும். பழமொழிகள் உலகம் எங்கும் உள்ளன. அவர்கள் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ள தமிழ்ப் பழமொழிகள் உலகப்பழமொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. கிராமத்து தரவுகள் என்றால், அவைகளில், சில பிற்போக்கான விசயங்களும், அறக்கழிவான சொல்லாடல்களும் இருக்கத்தான் செய்யும். சொலவடைகளும் அதற்கு விலக்கல்ல. ஒருசெடியை மண்ணிலிருந்து புடுங்கும் போது, செடியின் வேரோடு மண்ணும் ஒட்டிக் கொண்டு தான் வரும் எனவே தான் பாரதி;வேரும் வேரடி மண்ணும் என்று பேசினார். நமக்கு வேரடி மண் வேண்டாம் என்றால், தண்ணீரால் செடியின் வேரைக் கழுவத்தான் வேண்டும். மண்வாசனையோடு சில பதிவுகளை செய்யும் போது இதுபோன்ற சில அறக்கழிவுகளை நாம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இனி சொலவடைகளுக்குள் செல்வோம்.

1. அகல உழுவதை விட, ஆழ உழு.

2. அகல் வட்டம் பகல் மழை (அகல் வட்டம்-இரவில் நிலவைச் சுற்றி காணப்படும் வட்டக்கோடு இதை கோட்டை கட்டியிருக்கு என்றும் சொல்வார்கள்)

3.அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்.

4. அக்கா பண்டம் அரிசி, தங்கச்சி பண்டம் தவிடா?

5.அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி(கெட்ட நேரம்). ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் வியாழன்.

6. அகப்பை (சாப்பாட்டின் அளவு) குறைந்தால் கொழுப்பு குறையும். (ஆப்பை என்பது அகப்பைக்கு இணையான வழக்குச் சொல்).

7. அகம் (ஆணவம்) குறைந்தால், அஞ்சும் குறையும்! (ஐந்து-கோபம், அகம்பாவம், வன்பம், பகை, மூர்க்கம், ஐந்தும் என்பதன் வழக்குச் சொல் அஞ்சும்)

8. அகலப் பழகினால் நெகிழும் உறவு.

9. அகலாது அணுகாது தீக்காய வேண்டும்.

10. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

11. அக்கரையில் படர்ந்த பாகற்கொடி க்கு, இக்கரையில் பந்தல் இடுவானேன்?

12. அக்கரைக்கு இக்கரை பச்சை.

13. அக்கா (உயிரோடு) இருக்கும் வரைதான்-மச்சான் உறவு செல்லும்.(செல்லும்-செல்லுபடியாகும்)

14. அக்காவை பழித்த தங்கை அவிசாரி ஆனால் (அவிசாரி-விபச்சாரி)

15. அக்கு தொக்கு(சொந்தபந்தம்) இல்லாதவனுக்கு தூக்கம் ஏது?

16.அங்காடிக்காரியை ச் சங்கீதம் பாடச்சொன்னால் வெங்காயம் கறிவேப்பில்லை என்பாள்.

17. அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கின சொத்துக்கு பங்கு இருப்பான்- வெங்கப்பயல்.

18. அங்கேண்டி மகளே புருஷன் வீட்டில், கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாயேண்டி காற்றாய் பறக்கும் என்றானாம் அப்பக்காரன்.

19. அசல் வீட்டுக்காரனுக்கு (பக்கத்துவீட்டுக்காரனுக்கு) ஏண்டுக்கிட்டு (பரிந்து பேசிக்கொண்டு) அப்பக்காரன் அடிக்கலாமா…?

20. அசைந்து தின்னும் யானை; அசையாமல் தின்னும் வீடு (வீடு கட்ட ஆகும் செலவு)

இத்தொடரில் எனது சேகரிப்பில் இருந்து அகரவரிசைப்படி, சொலவடைகள் மட்டும் பதிவு செய்கிறேன். அதில் சில சொலவடைகள் பதிவு செய்யப்படாமல் விடுபடலாம். இத்தொடரை வாசிக்கும் வாசகர்கள் விடுபட்ட சொலவடைகளை எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பினால் அவைகளையும் பின்னிணைப்பாக சேர்த்துக் கொள்கிறேன்.

மின்னஞ்சல் : – கழனியூரன் (நன்றி: திரு.மனுஷ்யபுத்திரன் மற்றும் உயிரோசை இதழ்)

இந்தத் தொடரில் நெல்லை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள சொலவடைகள் மட்டும், நெல்லை வட்டார வழக்கு மொழி நடையில் தொகுத்து தர உள்ளோம்.

நெல்லை

மண்வாசனை

மண்வாசனை

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *