சோழர் காலத்தில் யானையை கோழி வென்றது : தொல்லியல் துறை ஆய்வாளர் தகவல்

”கோழியிடம் இருந்து, போர்த்திறன் கற்றவன் தமிழன்,” என, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், பத்மாவதி கூறினார்.
சென்னை, தமிழ் இணைய கல்வி கழகத்தில், ‘தகவலாற்றுப்படை’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘பழந்தமிழ் கல்வெட்டுகள்’ என்ற தலைப்பில், பத்மாவதி பேசியதாவது: தமிழ் மொழிக்கு, சங்க காலத்தில் எழுத்து இருந்ததா, இல்லையா என்ற கேள்வி, 1882ல், தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படும் வரை நீடித்தது. வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி, கே.வி.சுப்ரமணிய அய்யர், டி.வி.மகாலிங்கம், ஐராவதம் மகாதேவன், நாகசாமி போன்றவர்களால், அவை படித்து அறியப்பட்டன.
நடுகற்கள் : தொடர்ந்து, பூமியின் மேற்பரப்பிலும், அகழாய்வுகளிலும் கிடைத்த பானை ஓடுகள், நாணயங்களில், தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்தன. அமராவதி ஆற்றங்கரையில், எழுத்துடைய முத்திரைகள், மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை, கரூர், ஜம்பை ஆகிய ஊர்களில், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்தன. அவற்றில், பாண்டியன், சேரன், அதியமான் பெயர்கள் இருந்தன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நடுகற்கள், புலிமான்கோம்பையை தொடர்ந்து, பல இடங்களில் கிடைத்தன.இரு குழுக்கள் மற்றும் நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற சண்டையில், மாடுகள் கவரப்பட்டன. அவ்வாறு மாடுகளை கவரும் போதும், மீட்கும் போதும் நடைபெற்ற சண்டையில் இறந்த வீரர்களுக்கு, நடுகற்கள் நடப்பட்டன.
வியூகங்கள் : மாடு பிடிக்கும் சண்டையில் வெற்றி பெறும் உத்திகளை கற்பிக்கவே, அக்காலத்தில், ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கோழிச் சண்டையின் போது, ஒரு கோழி, மற்றொரு கோழியை குறிவைக்கும். அப்போது, அதன் கால் அசைவுகளையும், அதன் நோக்கும் வியூகத்தையும் பார்த்து, அதிலிருந்து பல அசைவுகளை கற்று, போர் பயிற்சி அளித்தனர். சிலம்ப வீரர்களிடம், சண்டை கோழியின் வியூகங்கள் தற்போதும் இருக்கின்றன.
குறிப்புகள் : பண்டைய சோழர்களின் தலைநகரமான, உறையூரில் கோழிப் போர் நடைபெற்று, அதில், யானையை கோழி வெற்றி பெற்றதால், அவ்வூரை, கோழியூர் என்றும் சொல்வர். முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டுகளில், யானையை விரட்டிய கோழிகளை பற்றிய குறிப்புகள் வருகின்றன. இங்கு, யானை என்பது, களப்பிரர்களின் படையாக இருக்கலாம். அவற்றை, கோழி சண்டை மூலம், சோழர்கள் வீழ்த்தி இருக்கலாம். அந்த வெற்றியின் வெளிப்பாடே, கஜ சம்ஹாரமூர்த்தி சிலைகளின் தோற்றமாக இருக்கலாம். யானை சின்னம் உடைய, களப்பிரர் என்ற பெயரில் உள்ள, ‘கள’ என்பதும், யானையை குறிப்பது தான். அவர்களின் சின்னமும், யானை என்பதை கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
source: dinamalar.com