சங்க இலக்கியத்தில் வணிக மேலாண்மை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று அவை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள். வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. அனுபவங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. பொருள் நிறைந்ததாய் மாற்றுகின்றன. பொருள் என்றவுடன் வாழ்வதற்குப் பொருள் வேண்டும், நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்று படித்தவாசகம் ஒன்று நினைவுக்குளத்தில் நீச்சலடிக்கின்றது ஆம், வாழ்க்கை பொருளால் ஆனது. பொருள் நிறைந்தது. மனிதன் இனக்குழு சமூகமாக வாழ்ந்த போது தன்னிடமுள்ள பொருளைக் கொடுத்து விட்டுத் தனக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொண்டான். இவற்றின் வளர்ச்சி பண்டமாற்று வணிகமாகப் பரிணமித்தது. அதுவே பின்னர் நாணய முறை வணிகமாக வளர்ச்சியடைந்தது. அந்த வணிகத்தைச் செய்வதற்குத்தான் இங்கேயும், திரைகடலும் ஓடியிருக்கின்றனர். ஒரு நாட்டின் சிறந்த தொழில்களாக உழவுத்தொழிலையும் வணிகத்தொழிலையும் கூறலாம். நாடுசெழிப்புடன் இருக்க வேண்டுமானால் இவ்விரண்டு தொழில்களும் செழிப்புற்று இருக்க வேண்டும். செழிப்புற்றிருந்த காரணத்தால் தான் சங்ககாலம் பொற்காலம் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன. இவற்றுள் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமான வணிக மேலாண்மை குறித்த சிந்தனைகளை செவ்வியல் இலக்கியமான சங்கஇலக்கியங்களில் வியப்பூட்டும் செய்திகளை அறியலாம்.

பண்டமாற்று வணிகமுறை சங்ககாலத்தில் உள்ளூர் அளவில் நடைபெற்ற வணிகங்களில் பண்டமாற்றுமுறை வணிகமே பெரும்பான்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. இதனை, “கான் உறைவாழ்க்கை கதநாய் வேட்டுவன் மான் தசை சொரிந்தவட்டியும் ஆய்மகள் தயிர் கொடுவந்த தசும்பும் நிறைய. ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர். குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் முகத்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்”என்கிற புறநானூற்று அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இப்பாடலில் காட்டில் வாழும் வாழ்க்கையினை உடையவன் வேடன். சினம் மிகுந்த நாயுடன் அவன் வருவான். மான்கறியினை வட்டிலிலே கொண்டு வருவான்.ஆயர்பாடியிலே இருக்கிற ஆயர்மகள் பானையிலே தயிரைக் கொண்டு வருவாள். அதற்குப் பதிலாக அவர்கள் நெல்லை முகந்து முகந்து அவ்வட்டிலும் பானையும் நிறையுமாறு கொடுப்பார்கள். அவர்களும் அதுபெற்று மகிழ்ச்சியோடு செல்வார்கள் என்பதுதான் இந்தப்பாடலின் பொருள். இதன்மூலம் சங்ககாலத்தில் இறைச்சியினையும் தயிரையும் கொடுத்து நெல்லினைப் பண்ட மாற்றாகப் பெற்றிருப்பதை அறியலாம். அயல்நாட்டினருடன் வணிகத்தொடர்பு சங்ககாலத்தில் வாழ்ந்ததமிழர்கள் அயல்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பைபட்டினப் பாலை என்னும் பத்துப்பாட்டு இலக்கியம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

“பல் ஆயமொடு பதிபழகி வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் சாறு அயர்மூதூர் சென்று தொக்காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேயத்துப்புலம் பெயர்மாக்கள் கலந்தினிது உறையும் முட்டாச்சிறப்பின் பட்டினம்” என்னும் பாடல்வரிகளில் இதனை அறியலாம். அரிசி, இஞ்சி, தோகை முதலிய தமிழ்ச்சொற்கள் ஈப்ரு முதலிய மொழிகளில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழக வணிகர்கள் மிளகு வியாபாரத்தில் ஈட்டிய பெருஞ்செல்வத்தைப் பற்றியும்,ரோமாபுரிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை பெரிபுளுசு, பிளினி போன்றோர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். பிறநாட்டிலிருந்து பலமொழிகள் பேசக்கூடியவர்களும் தமிழகத்திற்கு வந்து இங்குள்ளவர்களிடம் ஒன்றாகக் கலந்து இனிதாக வாழும் நகரமாகக் காவிரிப் பூம்பட்டினம் விளங்கியிருக்கின்றது. பிறநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் வாழ்ந்தவர்களைச் சங்கஇலக்கியம் யவனர்கள் என்றும் மிலேச்சர் என்றும் குறிப்பிடுகின்றது. இதனை முல்லைப் பாட்டு என்கிற இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றது…

பட்டினப்பாலையில் வணிகமேலாண்மை தமிழர்கள் கடல்வழியாக மரக்கலங்களைப் பயன்படுத்தி பிறநாட்டினரோடு வணிகத்தில் ஈடுபட்டனர். கடலுக்கும் சங்ககாலத் தமிழருக்குமான உறவு நெருக்கமானது. அதனால் தான் கடல் குறித்தும் மரக்கலம் குறித்தும் பலசொற்கள் வழங்கி வந்திருக்கின்றன கடலைக் குறிப்பிடுவதற்கு பரவை, ஆழி, புணரி, ஆர்கலி, முந்நீர் என்பன போன்ற சொற்களும்; ஓடம், கலம், மரக்கலம், தோணி, மிதவை, கப்பல், நாவாய், மரம், திமில், அம்பி முதலிய மரக்கலத்தைப்பற்றிய சொற்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. நாட்டின் கரையோரங்களுக்குச் செல்வதற்கு ஓடங்களையும் அயல்நாட்டின் வணிகத்திற்கு நாவாய்களையும் பயன்படுத்தி உள்ளனர். வெளியிலிருந்து நகருக்குள் வரும் பொருள்களுக்கு வரிவாங்கும் வழக்கம் இருந்துள்ளது. உல்கு என்பது வரிஅதனையே பின்னாளில். சுங்கம் என வழங்கினர். அரசனுடைய ஆட்களே நடுநிலையிலிருந்து சுங்கம் வாங்குவார்கள். யாரும் அவர்களை ஏமாற்றி விடமுடியாது. இந்தச்செயலை- மாகாவிரிமணம் கூட்டும்.தூஊ எக்காத்துயில் மடிந்து வால் இணர்மடல் தாழை .நல்லிறைவன் பொருள்காக்கும் தொல்லிசைத் தொழில்மாக்கள் காய்சிதைத்த கதிர்ச்செல்வன .தேர்பூண்ட மாசுபோல வைல்தோறும் அசைவின்றி என்ற பட்டினப்பாலையின் பாடல்வரிகள் குறிப்பிடுகின்றன.

சுங்கம் வசூலிப்பதில் அவர்கள் எப்படி உண்மையாக நடந்துகொண்டார்கள் என்பதை இப்பாடலின் பொருள் விளக்குகின்றது. சுங்கம் வாங்குவோர் நள்ளிரவிலே காவிரியாற்று வெள்ளம் சூழ்ந்த மணல் மேட்டிலே உறங்குவார்கள். அவர்கள் உறங்கும் போது கூட தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாயிருப்பர். அரசனுடைய பண்டசாலைத் தெருவில் குவிந்திருக்கும் அப்பண்டங்களை பிறர்கவராமல் பாதுகாப்பதிலே அவர்கள் வல்லவர்கள். அவர்கள் கதிரவன் தேரிற்பூட்டிய குதிரைகள் போல அயராது சுற்றிவருவார்கள். சளைக்காமல் வாங்கவேண்டிய சுங்கங்களைவாங்கிக் கொண்டே இருப்பார்கள் என்கிறார் புலவர். பண்டகசாலையின் சிறப்பைக் கூறிய புலவர் பண்டங்கள் எப்படிக் குவிகின்றன என்பதைப் பற்றியும் கூறுகிறார். அந்நிய நாடுகளிலிருந்து பலபண்டங்கள் கப்பல் வழியாக வந்து காவிரிப்பூம்பட்டினத்திலே இறக்குமதி செய்யப்படுகின்றன. பலபண்டங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளியே அனுப்புவதற்காகக் குவிந்து கிடக்கும் பண்டமூட்டைகளின் மேல் சோழனுடைய புலி முத்திரையிடப்பட்டுக் கிடக்கின்றன. புலிமுத்திரையிடப்பட்ட பண்டங்கள் தான் வெளியே போக முடியும். இது அவர்களின் வணிகமேலாண்மையைக் காட்டுகின்றது. வணிகம் செய்யும் கடைத்தெருவுக்கு ஆவணம் என்பது ஒரு பெயர் அங்காடி என்பது மற்றொரு பெயர்.பண்டசாலை என்பது பண்டங்களைப் பத்திரமாகச் சேமித்து வைத்திருக்கும் இடம். இப்பொழுது ” கிடங்கு ” என்கிறோம். ஆவணம் அல்லது அங்காடி. என்பது பண்டங்களை வைத்துச் சில்லறை வணிகம் செய்யும் இடம். காவிரிப்பூம்பட்டினத்து கடைத்தெருவில் பெரிய பெரிய வணிகர்கள் இருந்தனர். அவர்கள் மாடியிலேயே அதாவது மேல் வீட்டிலேயே குடியிருந்தனர். வணிகத்தில் கால மேலாண்மையையும், ஈடுபாட்டையும் இது காட்டுகின்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *