இன்றைய திருப்பதியும், குமரி கண்டமும்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப்பாயிரம் பாடியபனம் பாரனார் தமிழகத்தின் நிலஎல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதி தானா? தென்குமரி என்பது இன்றைய குமரி முனையா அல்லது கடல்கோளால் அழிந்து போன குமரிக்கண்டமா? முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றிப் பாடும் காரிக்கிழார் என்ற புலவர் தமிழ் ஆட்சிப் பரப்பை அது பனிபடு நெடுவரை வடக்கும்.தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் குணா அது கரை பொருதொடு கடற்குணக்கும் குடா அது தொன்று முதிர் பெவத்தின் குடக்கும் என்று பாரதம் முழுமைக்கும் எல்லை வகுத்து உயர்த்திய போதிலும், ஒல்காப் புகழ் தொல்காப்பிய ரேபாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகிய ஏழு வகையாப்பின் வகைகளை அறிந்தோராக தமிழ்நாட்டவர் விளங்கியதை கீழக்கண்டவாறு கூறியுள்ளார். .வன்புகழ்மூவர் தண்பொழில் வரைப் பின் நாற்பேர் எல்லை அகத்தவர் ஆக, வடக்கு வேங்கடம், தெற்குகுமரி, கிழக்கு-மேற்குக் கடல்களாக அமையப் பெற்றுள்ள பழந்தமிழ் நாட்டைப் படம் பிடித்துக்காட்டியுள்ளதை நன்கு அறியலாம். இதை, யானைக் கட்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றிப்பாடும் குறுங்கோழியூர் கிழாரின் புறப்பாடல் ஒன்று தெளிவாகப் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளது. “தென்குமரிவட பெருங்கல குணக்குட கடல் எல்லை குன்றுமலை காடுநாடு ஒன்றுபட்டுவழிமொழிய”(புறம்-17) இப்பாடலில் குறிப்பிடப்படும் வடஎல்லையானது வேங்கடமலையையும், தென்எல்லையானது குமரிப்பகுதியையும் குறிக்கும்.
அகம்பாடல் 31-இன்வாயிலாக, தமிழகத்தின் வட பகுதி பல்வேறு மலைகளைக் கொண்டதாகவும், அவற்றுள் ஏழுமலைகளை உள்ளடக்கிய தற்போது திருப்பதி என வழங்கப்படும் வேங்கடமும் ஒன்று என்பதகாவும் விளங்கிக்கொள்ளலாம். கீழ்க்காணும் பாடல்கள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
“வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை “(அகம்-27 )
“பனிபடுவேங்கடத்தும்பர். மொழிபெயர் தேஎத்தராயினும் “(அகம்-211)
“வேங்கடத்தும்பர்.வடுகர்தே எத்து “(அகம்-213)
இப்பாடல்களுள் பயின்று வரும் வேங்கடம் வடுகரால் பேசப்படும் தெலுங்கு மொழியின் தேசமான திருப்பதியைச் சுட்டும். ஆக,வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதியே ஆகும். அதுபோல், தென்குமரி எனப்படுவது உலகின் முதல் மனித இனம் உருவான லெமூரியா என்றழைக்கப்படும் கடல்கோளுக்கு ஆளான குமரிக்கண்டத்தின் எஞ்சிய மண்பரப்பே இன்று காணப்படும் குமரி முனையாக உள்ளது என்பதை தெற்குக்கடல் கொண்ட தென்குமரி மண்பரப்பே முற்பட்ட தோற்ற முயிர்ப்பெருக்க முற்பத்தி ஆங்கு மனிதவினம் ஆதி அமலென்பர்.ஓங்கிய தஃதே உலகு என்னும் பழம்பாடல் வழி அறியலாம். மேலும், கடல்கோளால் அழியப் பெற்ற தம் நிலவெல்லைக்கு ஈடாக பாண்டியன் ஒருவன் சேர, சோழநாடுகள் மீது படை கொண்டு தனது மீன் சின்னத்தைப் பொறித்ததை,மலி திரை ஊர்ந்து தன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப் புலியொடுவில் நீக்கிப்புகழ் பொறித்த கிளர்கெண்டை. வலியினான் வணக்கிய வாடாசீர்த் தென்னவன் (புறம்-104) என்ற பாடல் மூலமாகவும் அறியலாம். அழிந்துபட்ட குமரிக்கண்டத்தை சங்ககால மற்றும் காப்பியக்கால இலக்கியங்கள், வரலாற்றுச் செய்தியாக தன்னுள் பதிவித்துக் கொண்டு, தற்காலக் குமரிமுனையையே தமிழகத் தென்பகுதியாகப் பாவித்து வந்துள்ளன. இளங்கோவடிகள் (சிலம்பு-8:1-2) திருமால் குடிகொண்டிருக்கும் திருப்பதி, குமரிக்கடல் ஆகியவற்றை தமிழ்நாட்டின் வட- தென் எல்லைகளாக அழகுறவரையறை செய்துள்ளமை ஈண்டு நோக்கத்தக்கது. திரு.ம.கணேசன்
சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் வடவேங்கடமும் திருப்பதியும் ஒன்றா ? குமரிமுனை என்பது குமரிக்கண்டமா என்பது குறித்த சிறுகட்டுரை .
குமரிகண்டம்
தமிழர்வரலாறு
வரலாற்றுக் குறிப்புகள்