கையூட்டு வாங்கினாலும், கொடுத்தாலும் மரணதண்டனை விதித்த அரசன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் கையூட்டு (லஞ்சம்) கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும்அதைத் தடுக்கத் தவறியஅரசு அதிகாரிக்கும் மரணதண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென்னேசுவரமடம் கிராமம். இங்குள்ள பென்னேசுவரர் கோயில் மிகவும் பழமையானது, பெயர் பெற்றது. இந்தக்கோயில் கல்வெட்டில் இலஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரணதண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது. இதுகுறித்து கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்சு கவனமுருகன் தி இந்துவிடம் கூறியதாவது: கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஏழுநிலைகளைக் கொண்டபெரிய அரசகோபுரம் இருக்கும்கோயில் பென்னேசுவரமடம் கோயிலாகும். இதுபிற்காலச் சோழர்காலக் கோயிலாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.சோழர்கள் போசாளர்கள் மற்றும் விசயநகரப் பேரரசுகளின் ஆட்சியில் இக்கோயிலுக்கு பலவிதமான கொடைகள், தானங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தானமாகப் பெறப்பட்ட நிலங்கள், ஊர்கள் மற்றும் பொது சொத்துகளை சிலர் ஏய்த்து அனுபவித்துள்ளனர். இதனை அறிந்த பேரரசன் வீரராமநாதன் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார். அந்தஆணை தொடர்பான கல்வெட்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“போசாளமன்னன் வீரராமநாதன் கல்வெட்டு ஸ்ரீவீரராமந்நாத தேவரீஸர்க்குயாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்ணையாண்டார் மடத்திலும் பெண்ணைநாயனார் தேவதானமான ஊர்களிலும் ஒருஅதிகாரியாதல் கணக்கர் காரியஞ்செய்வார்களாதல் கூசராதல் ஆரேனுமொருவர்வந்து விட்டதுவிடாமல் சோறுவேண்டுதல் மற்றேதேனும் நலிவுகள் செய்குதல் செய்தாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலையை அறுத்துவிடவும் அப்படிசெய்திலர்களாதல் தங்கள்தலைகளோடே போமென்னும் படிறெயப்புத்த பண்ணி இது வேசாதனமாகக் கொண்டு ஆங்குவந்து நலிந்தவர்களைத் தாங்களே ஆஞ்ஞை பண்ணிக்கொள்ளவும் சீகாரியமாகத் தாங்க . .போதும்போன அமுதுபடிக்குடலாக ஸர்வ மானியமாகக் குடுத்தோம் அனைத்தாயமு விட்டுக்கு .கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம்”.

“இப்படியாதே இதுக்கு விலங்கனம் பன்னினவன் கங்கைக்கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்” என எழுதப்பட்டுள்ளது. இதன் விளக்கம், லஞ்சம் வாங்கினால், கொடுத்தால் சிரச்சேதம் செய்ய அதாவது தலையை வெட்டும் படியும் அவ்வாறு நிகழாமல் தடுக்கத் தவறினால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் தலையை வெட்டும் படியும் ஆணைவெளியிட்டுள்ளார். இக்கல்வெட்டு கோயிலின் தெற்கு சுவர் பகுதியில் இருக்கிறது. இக்கல்வெட்டு கிரந்தம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ளது. லஞ்சமாக உணவு அல்லது சோறு கேட்டால் கூட குற்றம் என்றும் அரசர் சொல்லியிருக்கிறார். மேற்கண்ட பேரரசர் வீரராமநாதனின் கல்வெட்டைக் கொண்டும், தலைபலிக்கற்களின் சிற்பஅமைப்பைக் கொண்டும் இவ்வாறு தண்டிக்கப்பட்டிருக்க கூடும் என்பது தெரிகிறது. இது தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகும். இந்தக் கல்வெட்டை போசாளப் பேரரசன் வீரராமநாதனின் நாற்பத்தி ஒன்றாவது ஆட்சியாண்டில் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு கி.பி.1295 என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பொதுமக்களின் நலனுக்காக அல்லது அரசனின் நலனுக்காக பக்தியில் கொற்றவை என்னும் காளிக்குப் படையலாகவும் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது இதில் நவகண்டம் என்பது, உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கடைசியாக தன் தலையை அறுத்துக் கொள்வது. அரிகண்டம் என்பது ஒரேவெட்டில் சிரத்தைஅறுத்து சமர்ப்பிப்பது. இது தொடர்பான கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் உள்ளன. அதுவும் போசாளர்களின் தலைநகரான ஹளேகுந்தாணியிலும், பையூர் நிலையுடையான் மதுராந்த கன்வீரநுளம்பன் ஆட்சி செய்த பென்னேஸ் வரமடத்திலும் தான் இருக்கின்றன. தலைபலிக்கற்களை நவகண்டம் அல்லது அரிகண்டம் என்றுதான் நினைத்திருந்தனர். இந்த தலை பலிகற்களையும் கோயில் கல்வெட்டுகளையும் ஆராய்ந்த கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன், இலஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரியின் உயிர்பலி கல்வெட்டு என்பதை கண்டறிந்துள்ளார்.

செய்தி தி இந்து கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்னேசுவரமடம் கிராமத்திலுள்ள பென்னேசுவரர் கோயில் கல்வெட்டில் இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *