கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 21
- தணக்கம்
இதைக் கபிலர், ‘பல்பூந் தணக்கம்’ (பல பூக்களையுடைய தணக்கம்) எனக் குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு தவிர, வேறு இலக்கியங்களில் தணக்கம்பற்றிய செய்தி காணப்படவில்லை. பெருங்கதையில், “தண்பூந் தணக்கந் தமாலந் தகரம்” (பெருங்கதை, இலாவண காண்டம், 15 விரிசிகை மாலைசூட்டு : 15) தணக்கம் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.
- ஈங்கை
சங்க இலக்கியங்களில் இது கொடி என்று கூறப்படுகிறது. நச்சினார்க்கினியர், இதனை ‘இண்டம் பூ’ என்பர். ஈங்கைக் கொடி பனிக்காலத்தில் செழித்து வளர்ந்து பூத்து நிற்கும்.
“வெண்கொடி ஈங்கைப் பைம்புதல் அணியும்
அரும்பனி அளைஇய கூதிர்”
என்று ஐங்குறுநூறு (456 : 3-4) இச்செய்தியைக் கூறுகின்றது. ஈங்கை மலர்கள் வெண்மை, துவர் ஆகிய இரு வண்ணங்களில் உள்ளதென்பதை, “இரங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கை ஆலி அன்ன வால்வீ தாஅய்” என்றும், “வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப” என்றும் வருகின்ற அகப்பாடல் வரிகள் (125 : 3-4, 243 : 2) நமக்கு உணர்த்துகின்றன. இம்மலரின் உட்பகுதியில் பஞ்சு போன்ற ஒரு பொருள் அமைந்திருக்கும். அதனைத் ‘துய்’ என்பர். அதனால் இம்மலர் ‘வண்ணத் துய்ம்மலர்’ (குறுந்தொகை, 110 : 6) என்று சிறப்பிக்கப்படுகின்றது. மேலும், இம்மலரைக் குருவியின் குஞ்சினுக்கு உவமையாக நற்றிணை (181 : 4-5) கூறுகின்றது.

ஈங்கை மலர்கள் இதழ்களால் மூடப்பட்டு, தேன்துளி மிகத் திரண்டு விளங்கும். ஈங்கையின் அரும்பும், புனமல்லிகை மலரும் உயர்ந்த மணலால் அமைந்த திடலில் உதிர்கின்ற காட்சியை நற்றிணைப் பாடல்கள் (79 : 1, 124 : 4-5) காட்டுகின்றன. “ஈங்கையும் இலவுந் தேங்காய் நெல்லியும்” என்று பெருங்கதையில் (உஞ்சைக் காண்டம், 52 பாலை நிலங் கடந்தது : 43) இத்தாவரத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
- இலவம்
பஞ்சிற்காகாகவே வளர்க்கப்படும் தற்கால இலவமரம் வெண்மையான அழகற்ற, கவர்ச்சியற்ற பூக்களையுடையது. இது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொணரப்பட்ட தாவரமாகும். சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட இலவ மரத்திற்குச் செக்கச்சிவந்த அழகிய பெரிய பூக்கள் உண்டு. இது மிகப் பெரிய உயர்ந்த மரமாகும். இதனை முள்ளிலவம் என்று தற்காலத்தில் அழைக்கின்றனர். தற்காலத்தில் இலவமென அழைக்கப்படும் மரம் அத்தகையதன்று.

இலவமரம் இலையுதிர்ந்து காடுகளில் காணப்படும். இலவமரத்தை அதன் பூவைக்கொண்டு எளிதில் கண்டு கொள்ளலாம். இதன் பூ பொதுவாக கருஞ்சிவப்பாக (Showy Scarlet flowers) காணப்படும். இளஞ்சிவப்பாகவும் காண்பதுண்டு. உள்குவிந்த கிண்ணம் போன்ற உருவுடைய இதன் பூவை ஒருமுறை பார்த்தால் மறக்கமுடியாது. வெயிற்காலத்தில் இலவமரம் பல நாட்கள் இலையின்றித் தோற்றமளிக்கும். அக்காலத்தில் இலையில்லாத கிளை முழுவதும் வரிசை வரிசையாகப் பூக்கள் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும். இலவின் பூவைப் பற்றிய செய்திகளைச் சங்கப் பாடல்கள் (அகநானூறு, 11 : 3, 185 : 12, ஐங்குறுநூறு, 338 : 1-2) தெரிவிக்கின்றன.
இலையில்லாமலிருக்கும் வெறுங்கிளையில் சிவந்த பூக்கள் தோன்றுவது இலவமரத்தின் தனிச் சிறப்பாகும். கிளைகளில் இலையில்லாக் காலத்தில் தனிதனிப் பூக்களாக மலர்ந்து காணப்படுவதைக் கார்த்திகை விளக்கு வைத்தாற்போல் இருப்பதாகச் சங்கப் புலவர்கள் கூறியிருப்பது மிக அழகான – சுவையான உவமையாகும் என்கிறார் பி. எல். சாமி (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், பக். 158-159).
இதன் பூக்களை நெருப்புக்கு உவமித்துக் கூறியிருக்கின்றனர். இதனை, ‘எரிப்பூ இலவத்து’ என்றும், ‘எரிஉரு உறழ இலவம் மலர’ என்றும், “எரிநிறத் திலவு முல்லையும் மன்றியும்” என்றும், “நிழல்படக் கவின்ற நீளரை யிலவத்து, அழலகைந் தன்ன அலங்குசினை ஒண்பூ” என்றும் புலவர்கள் பாடுகின்றனர் (ஐங்குறுநூறு, 368 : 1; கலித்தொகை, 33 : 10; சிலப்பதிகாரம், 5 : 214; அகநானூறு, 245 : 14-15). காற்றடிக்கும்போது இலவின் பூக்கள் எளிதாக வீழ்ந்து விடுவதால் மரத்தில் பூக்கள் சிலவாகக் காணப்படும். இலவின் பூக்கள் விடியற்காலையில் காணப்படும் சில விண்மீன்கள் போலக் காணப்படுகின்றனவாம். இதன் இதழ்கள் பெரிதாக இருக்கும். கோங்கின் நுண்தாது இதன்மீது படும்போது, பவளச் செம்பில் பொன்துகள் சொரிந்ததைப் போன்று காட்சியளிக்கும் என்று அகநானூறு (17 மற்றும் 25 : 9-11) அழகுறப் பாடுகின்றது.
இலவம் பூக்கள் காற்றோடு கூடிய இடியில் தோன்றும் நெருப்புப் போலக் காற்றினால் நிலத்தில் சிதறிக் கிடப்பதை ஐங்குறுநூறு காட்டுகின்றது. மேலும், சாரலில் இலையில்லாதனவாய் மலர்ந்திருக்கின்ற உயர்ந்த தோற்றத்தையுடைய இலவமரம், மலையில் பற்றி எரியும் தீயைப்போல் தோற்றமளிப்பதை, ‘இலை இல மலர்ந்த ஓங்குநிலை இலவம், மலை உறு தீயின் சுரமுதல் தோன்றும்’ என்று ஐங்குறுநூறு (320 :1-3, 338 : 2-3)பதிவு செய்துள்ளது. பாடினியின் வாய், இலவம் பூவை ஒத்த சிவந்த இதழ்களைக் கொண்டிருந்ததைப் பொருநராற்றுப்படை (வரி 27) சுட்டுகின்றது. நெருப்பைப் போன்ற செந்நிறப் பூக்களையுடைய முள்ளையுடைய அடிப்பக்கம் கொண்ட இலவம் என்று பெருங்கதை (உஞ்சைக் காண்டம், 53. பிடி வீழ்ந்தது : 177-178) இதனைக் குறிப்பிடுகிறது.
இலவமரத்தை ‘நீளரை இலவம்’ என்றும், ‘ஓங்குநிலை இலவம்’ என்றும் புலவர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் அடிமரம் கிளைகளும் முட்களையும் உடையன. இதனை, ‘முள்ளரை இலவம்’ என்று நற்றிணை (பாடல் 105) குறிப்பிடுகிறது. இலவின் பூவிதழ்களை மைனா,காக்கை முதலிய பறவைகள் விரும்பி உண்பதாகவும், அதனால் மகரந்தச் சேர்க்கை உண்டாகிக் கருவுறுவதாகவும் செடிநூலார் கூறுவர். இலவின் பூவில் தேன் நிறைந்து காணப்படுவதால் தேனீக்கள் இலவம் பூவை விரும்பி மொய்க்கின்றன. இலவ மரத்தில் பெரிய பெரிய தேன்கூடுகள் கட்டப்படுவதை இன்றும் காடுகளில் காணலாம் (பி. எல். சாமி, மு. நூ., பக். 142-143).
“இலமலர் அன்ன அஞ்செந் நாவின், புலமீக் கூறும் புரையோர் ஏத்த” என்று சிவந்த நாக்கிற்கு ஒப்பிட்டுக் கூறினர். மேலும், சிலப்பதிகாரத்தில் ‘இலவிதழ் செவ்வாய்’ (ஊர்காண் காதை, வரி 136) என்று மகளிரின் வாயிதழ்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
இலவமரத்தின் அடிப்பகுதி முட்டு அமைப்பாக (buttress) கூண்டு வடிவத்தில் அமைந்திருக்கும். களிறு தன் தினவைக் குறைத்துக் கொள்ள இதன் அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்ளும். சங்க இலக்கிய இலவின் தாவரப் பெயர் Bombax ceiba. தற்போது பரவலாகக் காணப்படும் இலவம் Ceiba pentandra ஆகும். இது தமிழ் நாட்டுத் தாவரமன்று. இது ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கி. பி. 12 – ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் என்று கருதுகிறார் கு. வி. கிருஷ்ணமூர்த்தி (தமிழரும் தாவரமும், ப. 116).
source : tamizhtharakai.wordpress.com