கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 15
- கஞ்சங்குல்லை

இது ஒரு சிறு செடியில் பூக்கும் பூ. குல்லையின் இலை பொருந்திய நுனியையும், தளிரையும் சங்க கால மகளிர் அணிந்தனர் என்பதைத் திருமுருகாற்றுப்படை (வரிகள் 201-202) வாயிலாக அறிகிறோம். ஆநிரைகளை உடைய பொதுவர், கல்லிடத்தும், காட்டிடத்தும் மலர்ந்த கொன்றை, காயா, முல்லை, வெட்சி, குருந்து, கோடல், பாங்கர் மற்றும் குல்லை முதலிய மலர்களாலாய கண்ணியைச் சூடியவராக வந்ததைக் கலித்தொகை (103:1-4). மேலும், சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை ஆகிய இலக்கியங்களிலும் இப்பூவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கஞ்சங்குல்லையைத் தலைமாலையாக வடுகர் அணிந்ததை, ‘குல்லைக் கண்ணி வடுகர் முனையது’ என்று குறுந்தொகை (11:5) சுட்டுகிறது. மேலும், குறிஞ்சி நிலத் தலைவன் குல்லை, காட்டுமல்லிகை, கூதாளி, குவளை ஆகியவற்றின் மலர்களால் புனைந்த மாலையை அணிந்ததை நற்றிணைப் பாடல் (376:5-6) காட்டுகிறது.
பாண்டியனுடைய வையை ஆறு பல்வகை மலர்களும் மணம் பரப்புதற்கு இடமானதைக் கூறும் பகுதியில் குல்லை மலரும் இடம் பெற்றுள்ளதை.
“குல்லை, வகுளம், குருக்கத்தி, பாதிரி, ………
எல்லாம் கமழும் இருசார் கரை கலிழ”
என்ற பரிபாடல் வரிகள் (12:79-81) புலப்படுத்துகின்றன.
நச்சினார்க்கினியர் இதற்கு, ‘கஞ்சங்குல்லைப் பூ’ என்று உரைகூறுகிறார். கஞ்சாங்கோரை என்று கூறுவோரும் உண்டு. இதனை, ‘மலைப்பச்சை’ என்கிறார் நற்றிணை உரையாசிரியர். பிங்கல நிகண்டு ‘புனத்துளசி’ என்றும், சேந்தன் திவாகரம் இதனைக் கஞ்சாச்செடி என்றும், மருத்துவ நூலார் இதனை நாய்த்துளசி என்றும் கூறுவர். கஞ்சா செடியின் இலை நறுமணம் அற்றது; இதேபோன்று நாய்த்துளசியின் இலையும் நறுமணம் அற்றது. எனவே குல்லையைக் காட்டுத் துளசி எனக் கொள்ளலாம் என்கிறார் கு. வி. கிருஷ்ணமூர்த்தி (தமிழரும் தாவரமும், ப. 115).
- பிடவம்

‘பிடா’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரம், சங்க இலக்கியத்தில் பிடவு மற்றும் பிடவம் என்று வேறு சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு குற்றிய இலையுதிர் மரமாகும்; இதன் பூ பெரிதாகவும், வெண்மையானதாகவும், நறுமணம் உடையதாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும்.
இப்பூக்கள் முல்லை நிலத்தில் பூக்கும். இதனைச் ‘சேண்நாறு பிடவம்’ என்று முல்லைப்பாட்டு (வரி 25) குறிப்பிடுகிறது. இலைகள் யாவும் உதிர்ந்த பின்னர்தான் அரும்பு விடத் தொடங்குவதை, ‘இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப’ என்று நற்றிணை (242:1) நவில்கின்றது. மழை பெய்தவுடன் இம்மலர் மலர்ந்து காட்டிற்குக் கவின் கொடுக்கின்றது என்பதை,
“பிடவம் மலர, தளவம் நனைய,
கார் கவின் கொண்ட கானம்”
என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் வரிகளால் (499:1-2) அறியலாம். இப்பூ மலைக்காட்டில் பூக்கும் என்பதை, ‘ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை’ என்றும், மணல் வெளியிலும் பூப்பதை, ‘வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல்’ என்றும் அகப்பாடல்கள் (147:1-2, 139:11) கூறுகின்றன.
ஆயர் குல இளைஞர் ஏறு தழுவுமுன் கார் காலத்தில் தோன்றும் பிடவு அரும்பு, செங்காந்தள் பூ, காயாம்பூ இவற்றோடு பிற பூக்களையும் கலந்து தலைமாலையாகச் சூடியதைக் கலித்தொகை காட்டுகிறது. மேலும், பிடவம் பூ கார் காலத்தில் மலரும்; கூர்நுனி கொண்ட களாவின் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்போது பிடவு மலரும்; செடியில் நீண்ட முட்கள் இருக்கும்; செடி கருமையாகவும், பூவின் காம்பு நீளமாகவும், மொட்டுகள் கூர்மையாகவும் இருக்கும் எனவும், குளுமையும், நறுமணமும் கொண்டு வெள்ளை வெளேரென்று குலை குலையாய் பூத்துக் குலுங்கும் எனவும், பிடவப் பூக்குலைக்குள் பறவைகள் பதுங்கும் எனவும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன (நற்றிணை, 242, 256; கலித்தொகை, 101:2, 102:2; அகநானூறு, 344:3 மற்றும் பதிற்றுப்பத்து, 66:16) முன்பனிக் காலத்து மாலைப்பொழுதில் வண்டுகள் மூசும்போது இம்மலர் வாய்விடும்.
“மாலைக்
குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
வண்டுவாய்திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற்சிரத்து ஊதை தூற்ற”
என்று அகநானூறு (183:10-13) கூறுகின்றது. பிடவ மலரின் காம்பு நீண்டிருக்கும். இதனைக் ‘குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி’ (அகம். 154:4) என்று கூறிப் போந்தனர். சிறிய கரிய பிடவஞ் செடியின் வெண்மையான உச்சியினையுடைய சிறிய புதர், மாலை போல மலர்ந்திருந்ததை,
“சிறு கரும்பிடவின் வெண்தலைக்குறும்புதல்
கண்ணியின் மலரும்”
என்றும், புதரின் மீது படர்ந்த செம்முல்லையின் (தளவம்) சிவல் முள்ளைப் போன்ற சிவந்த அரும்புகள், நெருங்கிய குலையினை உடைய பிடாவினது அரும்புகளோடே ஒரு சேரத் தளையவிழ்ந்து மலர்ந்ததை,
“புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழ”
என்றும் அகப்பாடல்கள் (34:1-2 மற்றும் 23:3-4) குறிப்பிடுகின்றன.
பிடவூர் என்பது சங்க கால ஊர்களில் ஒன்று. பிடவ மலரைப் பற்றி சங்கப் பாடல்களில் உள்ள குறிப்புகள் இதன் தன்மையை உணர்த்துகின்றன. கார்கால முதல் மழையின்போது ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் உதிர்ந்துவிடும். இப்படி ஒருவார காலம் பூக்கும். இதனை இக்காலத்தில் குட்டிப் பிலாத்தி என்கின்றனர்.
- சிறுமாரோடம்
இதனைச் செங்கருங்காலிப் பூ என நச்சினார்க்கினியர் உரை கூறுவார். இது நறு மோரோடம், பசுமோரோடம், சிறுமாரோடம் என்ற பெயர்களால் வழங்கப்படும்.

நறுமணம் கமழும் செங்கருங்காலியை மற்ற மலர்களோடு சேர்த்து மகளிர் பறித்ததை,
“நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய”
என்ற நற்றிணைப் பாடலும் (337:5) எருமைக் கடாக்கள் பொழிலில் மேய்ந்து உண்டமையால் பசிய மாரோடமும், ஆம்பலும் அழிந்ததை,
“எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென,
பசுமோரோடமோடு ஆம்பல் ஒல்லா”
என்ற ஐங்குறுநூற்றுப் பாடலும் (93:1-2) குறிப்பிடுகின்றன.
source : tamizhtharakai.wordpress.com