மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை !
“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்,அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்” கவிஞர் கண்ணதாசனின் இனியகவி மொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனியகுரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த போது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன்மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும் என்ற வினாவை எழுப்பினார். இத்தனை ஆண்டுகளாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் எமக்கு இப்படி ஒரு ஐயம் எழுந்ததே இல்லையே சிந்திக்க ஆரம்பித்தேன்.அதற்கான வண்ணமிகு காட்சி அழகாக எம் எண்ணத்தில் உதித்தது. கவின்மிகு மலர்வனம் மதிநுதல் மங்கையவள் வண்ணமிகு மலர் மஞ்சமதில் சயனம் கொண்டுள்ளாள்.பாசமிகு தமையனவன் நேசமிகு சகோதரியின் அமைதியான நித்திரைக்காக காவல் காத்து நிற்கிறான்.மலர்க் கூட்டத்தை மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் இன்னிசை கீதமாய் தாலாட்டாய் இசைக்கிறது.அம்மயக்கத்தில் மலர்களும் கிரக்கமாய் துவண்டு கிடக்கிறது.அம்மலர்களை ஒத்ததாம் மங்கையவள் வதனம்.இதுவே என்பதிலாய் என் நண்பருக்கு நான் விளக்க அவருடைய சிந்தையோ வேறு திசை நோக்கி பயணிக்கிறது. அதாவது, பொதுவாக மங்கையரின் ஒவ்வொரு அங்கத்தையும் ஒவ்வொரு மலருக்குச் சமமாய் வர்ணிப்பது கவிஞர்களின்வழமை. அவ்வகையில்அல்லிமலர்போன்றகண்களையும், எள்மலர் போன்ற நாசியும், தாமரைமலர் போன்ற மலர்ந்த முகமும், ரோசா இதழ்களும் ,இப்படி ஒரு மலர்க்கூட்டமாகத் தம் தங்கையின் காட்சி அவனுக்குக் கிடைப்பதாலேயே, மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்றானாம் என்னே கற்பனைபாருங்கள்!” இதுதானே நம் செம்மொழியின் சீர்மிகு வளமை. மொழிவளம் இருந்தால் எப்படிவேண்டுமானாலும் பொருளில் புகுந்து விளையாடலாமே! இதற்கு நமக்கு வேண்டியதெல்லாம் சிந்தனாசக்தி அல்லவா? இந்த சிந்தனையை இப்போது எந்த மொழியில் கொண்டு வரப்போகிறோம் என்பதுதான் கேள்வி. அவரவர் தாய்மொழியில் சிந்திக்கும் வேளையில் மட்டுமே நம் சிந்தனையின் எல்லை பரந்துபட்டுக் கிடக்கும். வேற்றுமொழியில் சிந்திக்கும் பொழுது அச்சிந்தனை குறுகிய எல்லைக்குள் முடங்கிவிடலாம். ஒருவர் எவ்வளவுதான் வேற்றுமொழியிலும், சிறந்து விளங்கினாலும் தத்தம் தாய்மொழியில், பிறந்தது முதல் பேசிப்பழகிய மொழியில் சிந்திக்கும்போது நம் சிந்தனா சக்தியின் எல்லை விரிவடைகிறது என்பதை உணர இயலும். “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி.” நம் தமிழ்மொழி என்பார் பரிமேலழகர்!
.2000 ஆண்டுகளுக்கு முன்கிரேக்கர்கள் நம் இந்திய நாட்டைப்பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்பெயர்கள் காணப்படுவது இதற்கு ஓர் சான்று. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழில் எழுதப்பட்ட சிலகல்வெட்டுகள் உள்ளன. 2400 ஆண்டுகளுக்கு முன்பே, பாணினி காலத்திலேயே தமிழில் நற்றிணை எனும் ஈடற்ற இலக்கண நூல் தோன்றியுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சிறிதும் சிதையாத நிலையில் முழுமையாக நமக்குக் கிடைத்துள்ள புதையல் தொல்காப்பியம் ஒன்றே. அதற்கு முன்பும், அகத்தியம் எனப்படும் இலக்கியநூல் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பெற்றதாக நம்பப்படுகிறது. சிலர் 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
செருமனிநாட்டின் முதல்எழுத்து வடிவம் கி.பி.8ம் நூற்றாண்டிலும், பிரெஞ்சு மொழியின் எழுத்துவடிவம் 9ம் நூற்றாண்டிலும், உருசியமொழியின் எழுத்துவடிவம் 10ம் நூற்றாண்டிலும், இலத்தீனிலிருந்து பிறந்த இத்தாலி மொழியும் 10ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றுள்ளது. ஆனால், நம் அன்னைத்தமிழ் மொழியோ, கி.மு.2ம் நூற்றாண்டின் முன்பே, முதல் எழுத்து வடிவமான தொல்காப்பியம் கிடைத்துள்ளது..உலகில் முதன் முதலில் தோன்றியநாடு தமிழகமும் அதை அடுத்தகடல் கொண்ட தென்னாடுமே என்கின்றனர் நிலஆய்வாளர்கள். இளங்கோவடிகள், பதியெழ் அறியாப் பழங்குடியினர் என காவிரிப்பூம்பட்டிணத்து மக்களைக் கூறுவதும் இதற்கான சான்றாக அமையும். ஆதியைக் கண்டறிய முடியாத அளவிற்கு காலம் கடந்தமொழியாக நம் தமிழ்மொழி இருப்பது மிக ஆச்சரியம் அல்லவா?!.
தமிழ்மொழியின் வளமையையும் பெருமையையும் பற்றி பேசுகிறது திருமதி. பவளசங்கரியின் இக்கட்டுரை.