மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 8

பல தமிழ்ப் பள்ளிகளையும் ஏற்படுத்தியவர். 1986-ஆம் ஆண்டு பண்டிதரின் நூற்றாண்டு விழா மொரீசியசில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு நினைவாக சைமின் கிரேனியர் என்ற இடத்திலுள்ள பள்ளிக்கு பண்டிதர் சுப்பராயன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புகழஞ்சலியில் கலந்து கொண்ட மேதகு கவனர் ஜெனரல் வீராசாமி ரிங்காடு, “பெருமாள் சுப்பராயன் ‘பண்டிதர்’ என எல்லோராலும் அழைக்கப்பட்டார். இப்பட்டத்திற்கு எல்லா வகையிலும் இவர் தகுதி படைத்தவர். இப்பட்டம் அவருக்கு சூட்டப்பட்டது என்பதை விட அவரால் சம்பாதிக்கப்பட்டது என்பதே பொருந்தும்.செயின் கிரேனியேரிலுள்ள பள்ளியொன்று பெருமாள் சுப்பராயனின் பெயரால் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் நமது வரலாற்றில் இத்தேச பக்தனின் பெயரும் தொண்டும் இடம் பெறவுள்ளன. இதற்கு உழைத்த எல்லோருக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அவர் அன்று செய்த தொண்டு மற்றும் தியாகத்தின் பயனை நாம் இன்று அறுவடை செய்கிறோம். மொரீசியசின் இப்பெருமகனார்க்கு நாம் பட்டிருக்கின்றகடப்பாட்டை ஒரு போதும் மறந்து விடலாகாது” என்று குறிப்பிட்டார்.

அரசியலில் தமிழர் :

வீராச்சாமி ரிங்காடு எனும் மொரீசியஸ் தமிழர் ஆளுனராக இருந்தார். கதிரேசம் பிள்ளை தொழில் துறை அமைச்சராக பணிபுரிந்தார். கல்வி அமைச்சராக ஆறுமுகம் பரசுராம் இருந்துள்ளார். அ.புட்பரதம் தமிழ்க் கல்வித் துறையின் தலைமையான பொறுப்பில் உள்ளார். மொரீசியஸ் தொழிற் கட்சியின் செகரட்டரி-ஜெனரலாக விஜய் வெங்கடசாமி இருந்துள்ளார்.

வணிகம்-தொழில் புரிந்தோர் :

முதல் கட்ட குடியேற்றத்தில் சென்ற கட்டடப்பணியாளர்கள் அவ்வேலை முடிந்ததும் பல தொழில் செய்பவர்களாக நகரங்களில் பெருகினர். அடிமைமுறை ஒழிப்பு சட்டம் வந்த பிறகு தோட்டத் தொழிலை விட்டுவிட்டு, ரொட்டி சுடுதல், கூடை முடைதல், செருப்பு தைத்தல், முடிதிருத்துதல், துணி தைத்தல், மிட்டாய் தயாரித்தல், மேற்பார்வை செய்தல், நகை செய்தல், வண்டியோட்டுதல், திண்பண்டம் விற்றல், கப்பல் கட்டுதல், மரம் வெட்டுதல், வயல் வேலை செய்தல், சாலை அமைத்தல் போன்ற பல வேலைகளிலும் ஈடுபட்டனர். தோட்டங்களை விட்ட பலர் கிராமங்களில் குடியேறினர் தோட்ட முதலாளிகளாகவும் மாறினர்.1872-ஆம் ஆண்டு இந்தியத் தொழிலாளர்களின் துயர் துடைக்கக் கமிஷன் அமைக்குமாறு கேட்ட காலத்திலேயே பல இந்தியர்கள் தோட்ட உரிமையாளர்களாக இருந்தனர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமுடி என்பவர் ஒருவர். அய்யாசாமி என்பவரும் அவரது சகாக்களும் Des Fontaines என்ற தோட்டத்தின் உரிமையாளராக இருந்தனர். 1910-ஆம் ஆண்டிலேயே மொத்தம் பயிரிடப்பட்டு வந்த நிலப்பரப்பில் 47,888 ஏக்கர் நிலப்பரப்பை இந்தியர் தமதாக்கிக் கொண்டனர். இது மொத்த நிலப்பரப்பில் 46% ஆகும்.

வெள்ளிவேல் அண்ணாசாமி :

1792-ஆம் ஆண்டு மொரீசியஸ் வந்தார். ஆங்கிலேயர் காலத்தில் பண்டக சாலை பொறுப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். 1830களில் அண்ணாசாமி மொரீசியஸ் அடிமைச் சொந்தக்காரர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்கினார். தமக்குக் கொடுக்கப்பட்ட 285 அடிமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தம் நண்பர் இராம திருமுடி செட்டியார் என்பவரோடு இணைந்து, பித்தோன் அருகிலுள்ள போன் எஸ் புவார் என்ற தோட்டத்தை விலைக்கு வாங்கினார். அடிமை ஒழிப்பு சட்டம் வந்த போது தம்மிடமுள்ள அடிமைகளைக் காட்டி நஷ்ட ஈடு தொகை பெற்றார். மலகாசி, இந்தியர், மற்றும் ஆப்ரிக்கர்களாக 143 அடிமைகளை இவர் கமிஷன் முன் கொண்டு வந்தார் என்பர்.1826-ஆம் ஆண்டு பரோடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சின்னப்பிள்ளை மலையப்பா குடும்பத்துடன் இங்கு வந்துள்ளார். இக்கப்பலிலேயே போத்த செட்டி, மங்கீர் செட்டி முதலியோர் இங்கிருந்தோரால் பிணையம் கொடுத்து வரவழைக்கப் பட்டனர். இதன் மூலம் புதுவையிலிருந்து இந்து வேளார்கள் நிறைய வந்து இறங்கினர் என்று மாக்மில்லன் கூறுகிறார்.1829க்குப் பிறகு வணிகக் கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் சென்னை, புதுவை, தரங்கம்பாடி, தஞ்சாவூர், மாயவரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழர்கள் மொரீசியஸ் வந்தனர். இவர்கள் அனைவரும் சிறுகடை வியாபாரிகளாவர்.

எம்.சி.இராமுசெட்டி :

இக்காலத்தில் சிறந்து விளங்கிய கடை வியாபாரியாவார். இவருக்கு இந்தியாவிலிருந்து செருப்பு முதலிய கடை சரக்குகள் வந்ததும் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து விற்பது இவர் வழக்கமாக இருந்துள்ளது.

திருமுடி :

1854-ஆம் ஆண்டுக் குறிப்பு தீவின் மொத்தக் கரும்பாலைகள் பற்றிக் குறிப்பிடுகையில் திருமுடி என்ற தமிழர் போன் எஸ்புவார் கரும்பாலையின் உரிமையாளராக இருந்தார் எனக் குறிப்பிடுகிறது.மேலே கண்ட வணிகர்களும் அவர்களது வம்சாவளியினரும் இன்றும் கூட தொழிலில் சிறந்து விளங்கி வருவதை அறிய முடிகிறது.

தொகுப்பு : ப. திருநாவுக்கரசு

பார்வை நூல்கள் :

1. மொரீசியஸ் தமிழரும் தமிழும் சு. இராசாராம் 1991.
2. மொரீசியஸ் தீவில் தமிழர்களின் சிறு சரித்திரம்-(1960)
3. மொரீசியஸ் தீவில் எங்கள் தமிழர்-கனகரத்தினம் (1980)
4. அயல் நாடுகளில் தமிழர் -எஸ். நாகராஜன் 1989.

source : tamilsurangam.in

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *