புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்

புறநானூற்றில் தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்கூறுகள்     

முனைவர் அ.சு.இளங்கோவன் ஒட்டன்சத்திரம்.                           

தமிழர் வாழ்வியலை அகம் புறம் என்னும் இருபெரும் பிரிவுகளாகக் கண்டனர். இது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பகுப்புக்கும் முன்னதாகும். அகம், அன்பின் சிறப்புக்களைப் பாடித் தனிமனிதர்களிடையே காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் நெறிப்படுத்தியது. புறம், பொதுவாழ்வையும் மனிதன் உயர்நிலை எய்தும் சிறப்பையும் பாடியது. புறநானூறு தமிழர் பண்பாட்டின் களஞ்சியம். கி.பி. 1600 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பொற்காலம். ஆங்கில வாழ்வியலும் இலக்கியமும் உச்சி எய்தி உலகை வளைக்க வாய்ப்பளித்தன. ஆனால் கி.மு. 300 தொடங்கி கி.பி. 300 வரை புறநானூற்றில் தமிழர் பண்பாட்டின் சிறப்புக்கூறுகள் தெற்றென எடுத்துக்காட்டாய்படுகின்றன. 
`இந்தியாவின் தேசியப் பண்பாடு’ என்னும் நூலில் எஸ்.அபிட் ஹூசேன் சிந்து சமவெளிப் பண்பாடும் அதனோடியைந்த திராவிடப் பண்பாடும் இந்திய தேசியப் பண்பாட்டுக்கு முக்கியப் பங்களிப்புச் செய்துள்ளன என அறுதியிட்டுரைக்கிறார். அதன அடிப்படைப் பண்புகள் பல புறநானூறு காட்டும் வாழ்வியலில் உள்ளன. பண்பாடு என்னும் சொல்லுக்குத் `திருந்திய பழக்கவழக்கங்களும் மேலான சுவையும்’ என்ற பொருள் கொள்ளப்படுகிறது. கட்டடங்கள், ஓவியங்கள், கோவில்கள், பண்பாட்டின் நினைவுச் சின்னங்கள் எனலாம். தொகுப்பான அமைப்புக்கள், சட்ட நெறிகள், முறைமைகள் ஆகியன பண்பாட்டுக் கூறுகள் எனலாம். கிரேக்கர்களின் அரசியல்,கல்வி, இலக்கியம் மற்றும் ரோமானியர்களின் சட்ட நீதி முறைமைகளும் அவ்வ பண்பாட்டின் முக்கியக் கூறுகள் எனலாம். ஒரு சமூகத்தின் வாழ்வியலைக் கட்டமைத்து உயர்த்தும் மூலாதிரமான மாண்புகள், பண்பாட்டின் சிறப்புக்கூறுகளாகும்.   

தமிழர் பண்பாட்டை 2500 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் கவின் கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒருசில நூல்களை மட்டும் தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடுவேன். அவை தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொகை, புறநானூறு,திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன எனப் புறநானூற்றைச் சிறப்பித்துக் கூறுகிறார் வணக்கத்திற்குரிய பிதா தனிநாயகம் அடிகள்.                

புறநானூறில் உயர்ந்த உள்ளப் பண்பு, அறம்,வள்ளன்மை, மனித நேயம், அஞ்சாமை, உட்பகை களைந்து உடன் வாழ் மக்கள் குழுவினருடன் கூட்டிணைவு பேணல் ஆகிய உளம்சார் பண்பாட்டுக் கூறுகளைப் பறக்கவும் சிறக்கவும் காணலாம். அத்துடன், நல்லரசு அமைத்திருத்தல்,நீதிநெறி பாராட்டல், அறிவு போற்றல், உழவும் உழைப்பும் போற்றல், `எல்லோரும் நம்மவரே – எல்லோரும் நல்லவரே’என்னும் இனிய அன்புணர்வை வளர்த்தல், குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்தல் போன்ற பழகுமுறை மற்றும் ஆளுமைச் சிறப்புக்களையும் காணலாம்.                                

பண்வெனப் படுவது பாடறிக் தொழுகல் (நற்றிணை)                               

பண்புடையார்ப் பட்டுண்டுலகம் (குறள்)  எனப் பாடப்பெறும் பண்பு, 

செயலாகச் சிறப்பது பண்பாடு. என்பது திருந்தச் செய்யப்படுவது என்றே வரும். பண்ணை பண்படுத்தல் ஆகியனவும் கருதத்தக்க ஒப்புமை கொண்டவை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *